சிறப்புக் கட்டுரைகள்

உலகத் தொழிலாளர்களால் ஒன்றுபடவே முடியாதா?

செய்திப்பிரிவு

மார்க்சிய சிந்தனையின் செல்வாக்கு உச்சத்தில் இருந்த காலத்தில் ரஷ்யா, சீனா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ஆசியாவின் சில பகுதிகள், வியட்நாம், வட கொரியா, லத்தீன் அமெரிக்கா (கியூபா, வெனிசுலா), இந்தியாவில் கேரளம், மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் கம்யூனிஸ்ட் ஆட்சிகள் நடந்தன.

இந்நாடுகளில் பெரும்பாலானவற்றில் மார்க்சிய சிந்தனையின் செல்வாக்கில் இப்போது சரிவு ஏற்பட்டுள்ளது. ஏங்கெல்ஸுடன் சேர்ந்து மார்க்ஸ் எழுதி உலகம் முழுவதும் பிரபலமான ஒரேயொரு வாசகம் குறித்துப் பார்ப்போம். ‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள், நீங்கள் இழப்பதற்கு எதுவுமில்லை கை விலங்குகளைத் தவிர’ என்பது அந்த வாசகம்.

தொழிலாளர்களின் பொது எதிரியான முதலாளிகளுக்கு எதிராகத் தொழிலாளர்களைத் திரட்டும் அந்த முழக்கம், எல்லா காலத்துக்கும் ஏற்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த இடத்தில்தான் புதிதாக உருவாகிவரும் யதார்த்தத்தை மார்க்சியம் புரிந்துகொள்ளத் தவறிவிட்டது. தங்களுடைய சுயநல நோக்கம் காரணமாகவே, உலக முதலாளிகளுக்கு எதிராக உலகத் தொழிலாளர்கள் திரள மாட்டார்கள்.

முதலாளிகள் இடையிலும், தொழிலாளர்கள் இடையிலும் ஒரே மாதிரியான ஒற்றுமைகள் கிடையாது. ஒரு நிறுவனத்துக்குள் ஊதியத்துக்காக உழைக்கும் தொழிலாளர்களுக்கும் லாபத்துக்காகப் பாடுபடும் முதலாளிகளுக்கும் இடையில் பல்வேறு பதற்றங்கள், உரசல்களும் இருக்கக்கூடும்.

என்ன காரணம்?

குறைந்த ஊதியம் பெறும் சீன, இந்திய, மெக்ஸிகோ தொழிலாளர்களுக்கும் அதிக ஊதியம் பெறும் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தொழிலாளர்களுக்கும் இடையில் பெரும் போட்டி நிலவுகிறது. சில நாடுகளின் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்பும் ஊதியமும் இன்னொரு நாட்டுத் தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புக்கும் ஊதியத்துக்கும் உலை வைக்கிறது.

இந்த விளையாட்டில், அமெரிக்காவின் சில முதலாளிகள் சீன, இந்திய, மெக்ஸிகோ தொழிலாளர்களுக்கு ‘எதிரியாக’ அல்ல ‘நண்பனாகவே’ காட்சிதருகிறார்கள். அதேசமயம் அமெரிக்காவிலேயே உருக்கு, கார் தயாரிப்பு, செல்போன் உற்பத்தி, மென்பொருள் துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு, குறைந்த ஊதிய நாடுகளின் தொழிலாளர்கள் ‘போட்டியாளராக’ (எதிரிகளாகக்கூட) காட்சிதருகின்றனர்.

எனவே, அமெரிக்க முதலாளிகளுக்கு எதிராக அமெரிக்கத் தொழிலாளர்கள் களம் இறங்கினால் சீன, இந்திய, மெக்ஸிகோ தொழிலாளர்கள் அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தர மாட்டார்கள்.

தொழிலாளர்களைப் பொறுத்தவரை, தங்களுடைய நிறுவனத்தைப் போன்ற பிற போட்டி நிறுவனங்களின் தொழிலாளர்களும் மேற்பார்வைத் தொழிலாளர்களும் எவ்வளவு ஊதியம் பெறுகின்றனர் என்பதைக் கவனமுடன் பார்ப்பார்கள். மேற்பார்வைத் தொழிலாளர் பதவிதான் தொழிலாளர்களின் அடுத்த இலக்கு.

அதேசமயம் தங்களுடைய நிறுவனத்திலேயே முதலாளிக்கு எவ்வளவு லாபம், பிற துறைகளின் தலைவர்களுக்கு எவ்வளவு ஊதியம் என்றெல்லாம் ஆராய மாட்டார்கள். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத் தொழிலாளர்களுக்கு கூகுள் அல்லது ஃபேஸ்புக் நிறுவனத் தொழிலாளர்களின் ஊதியம் மீது அக்கறை கிடையாது.

காரணம், தொழிலின் தன்மையும் தொழிலுக்குத் தேவைப்படும் நுட்பங்களும் முற்றிலும் வேறு. ஃபோர்டு அல்லது டொயாட்டோ நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கு எவ்வளவு ஊதியம், இழப்பீட்டு ஊதியம் தருகிறார்கள் என்றுதான் அவர்கள் கவனிப்பார்கள்.

அங்கீகாரம் தரும் பலன்

அமைப்புரீதியாகத் திரட்டப்பட்ட தொழிலாளர்களுக்கும் - அப்படித் திரட்டப்படாத தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கப் பாதுகாப்பு உள்ள தொழிலாளர்களுக்கும் - தொழிற்சங்க அமைப்புகளே இல்லாத தொழிலாளர்களுக்கும் மோதல்கள் ஏற்படுவது வழக்கம்.

அரசாங்கம் அரசுத் துறை அல்லது தனியார் துறையினர் என்று அனைவருமே திரட்டப்பட்ட அல்லது தொழிற்சங்கப் பாதுகாப்புள்ள தொழிலாளர்களைக் கண்ணியமாகவும், மற்றவர்களை அலட்சியமாகவும் நடத்துவதே நடைமுறையாக இருக்கிறது. பணப் பயன்பாடுகளிலும் முன்னுரிமை திரட்டப்பட்ட, தொழிற்சங்கப் பாதுகாப்புள்ள தொழிலாளர்களுக்கே கிடைக்கிறது.

அமைப்புரீதியாகத் திரட்டப்பட்ட தொழிலாளர்கள் அல்லது ஊழியர்கள் தங்களுடைய வீட்டு வேலைகளுக்கு வைத்துக்கொள்வது அமைப்புரீதியாகத் திரட்டப்படாத துறையைச் சேர்ந்தவர்களை. அவர்களுடைய ஊதியம் மிகக் குறைவு, வரையறுக்கப்படாதது. அதிக வேலை நேரங்களைக் கொண்டது. பணிப் பாதுகாப்பே இல்லாதது. குறைகளை முறையிடக்கூட அமைப்புகள் கிடையாது.

இந்த ஊழியர்களுக்கு இவற்றை உறுதிப்படுத்தினால் அது, அவர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ளும் அமைப்புரீதியாகத் திரட்டப்பட்ட ஊழியர்களின் நலனுக்கே பாதகமாகிவிடும். இறக்குமதியாகும் உருக்கு மீது தீர்வை விதித்தால் அதன் விலை உயரும். இது உள்நாட்டில் அத்தொழிலைச் செய்யும் முதலாளிகளுக்கும் அவர்களுடைய ஆலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் ஆதாயமாக இருக்கும்.

அதே சமயம், அந்த உருக்கைக் கொண்டு கார்களைத் தயாரிக்கும் மோட்டார் நிறுவனத்துக்கும் அதில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நலனுக்கும் பாதிப்பாகிவிடும். ஒரே நாட்டிலேயே ஒரே தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் நன்மை என்பது ஒரே நடவடிக்கை மூலம் சாத்தியமில்லை என்பதால் ஒன்றுபடுவதும் சாத்தியமில்லாமல் இருக்கிறது.

சர்வதேச வர்த்தகம், தொழிலாளர்களின் இடப்பெயர்ச்சி போன்றவற்றின் பாதிப்புகள் அறவே இல்லாத ரஷ்யா, சீனா என்ற கம்யூனிஸ்ட் நாடுகளில்கூட வேளாண் துறைத் தொழிலாளர்களுக்கும் ஆலைத் தொழிலாளர்களுக்கும் இடையில் பதற்றமும் உரசல்களும் இருந்தன. ரஷ்யாவின் கூட்டுப் பண்ணைகளிலும் சீனத்தின் சமூகப் பண்ணைகளிலும் விவசாயத் தொழிலாளர்களுக்கான ஊதியங்கள் மிகக் குறைவாகவே பராமரிக்கப்பட்டு, தொழிலாளர்களின் உழைப்பின் உபரி உறிஞ்சி எடுக்கப்பட்டது.

எண்ணிக்கையில் அதிகமிருந்த விவசாயத் தொழிலாளர்களுக்குக் குறைந்த ஊதியமும், எண்ணிக்கையில் குறைவாக இருந்த ஆலைத் தொழிலாளர்களுக்கு அதிக ஊதியமும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அரசே மூலதனம் செலுத்திய நாட்களில்கூட விவசாயத் தொழிலாளர்களையும் ஆலைத் தொழிலாளர்களையும் ஒரே அமைப்பின் கீழ் ஒற்றுமையாக இருக்க வைக்க முடிந்ததே இல்லை.

மார்க்சியம் ஆதிக்கம் பெற்றுவிடக் கூடாது, மார்க்சிஸ்ட்டுகள் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்ற அச்சத்திலேயே பல முதலாளிகள், தொழிலாளர் நல நடவடிக்கைகளில் அக்கறை காட்டினர். பணியிடங்களில் தொழிலாளர்களுக்கு நல்ல உணவு, பானங்கள், சிற்றுண்டி, ஓய்வறை, கழிப்பறை வசதிகள் ஆகியவை செய்து தரப்பட்டன. காயம் படாமல் வேலை செய்யப் பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன.

மருத்துவ சோதனை, மருத்துவ உதவி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. வேலைக்கு வந்து செல்ல வாகன வசதி, நல்ல குடியிருப்புகள், குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடம், கூட்டுறவுப் பலசரக்கு அங்காடி என்று பல சமூகநல ஏற்பாடுகளைத் தொழில் நிறுவனங்கள் செய்துதந்தன. மார்க்சியம் இன்று தொழிலாளர்களை ஒன்றுபடுத்தத் தவறியதற்குக் காரணமே, முதலாளிகள் கையாண்ட ‘மார்க்சிய நோக்கிலான’ தொழிலாளர் நல நடவடிக்கைகள்தான்!

- அலோக் ராய், பொருளாதாரப் பேபராசிரியர்.
தமிழில்: சாரி, பிசினஸ் லைன்.

SCROLL FOR NEXT