‘துரோகி அழித்தொழிப்பு’ கருத்தியலில் படுகொலை செய்யப்பட்ட தியாகராஜா, அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம். 
சிறப்புக் கட்டுரைகள்

பழி சுமத்தலும் ஜனநாயக மரபின் வீழ்ச்சியும் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 56

கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

யாழ்ப்பாணத்தில், ஜனவரி 1974-ல் நடைபெற்ற நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளில் நிகழ்ந்த பொலிஸ் வன்முறையில் துரையப்பாவுக்கு எவ்விதத் தொடர்பும் இருக்கவில்லை என்பதில் ஐயமில்லை. அவர் பொலிஸ் வன்முறையை ஆதரிக்கவும் இல்லை. எனினும், தமிழ் தேசியவாத இளைஞர்களும் கூட்டணியினரும் மாநாட்டு வன்முறைக்குக் காரணமானவரென துரையப்பாவைப் பலிகடா ஆக்கினர்.

ஜனநாயகரீதியாக மக்கள் ஆதரவுடன் பதவிக்கு வந்த துரையப்பாவே பொலிஸ் வன்முறையின் சூத்திரதாரி என்ற திட்டமிட்ட பரப்புரை மேற்கொள்ளப்பட்டதன் பின்னணி, அவர் தமிழ்த் தேசிய அரசியலுக்கு முட்டுக்கட்டையாக விளங்கினார் எனும் காரணி மட்டுமே. கருத்தியல் போராட்டத்தை முன்னெடுக்கத் தவறி ‘துரோகி’ அரசியலைத் தேர்ந்தெடுத்தது ஜனநாயக மரபின் பெரும் வீழ்ச்சி. இதுவே அழித்தொழிப்பை ஆயுதமாக்கியது.

துரையப்பா படுகொலை: தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளில் நிகழ்ந்த பொலிஸ் வன்முறைக்கு காரணம் துரையப்பா என்ற திட்டமிட்ட பரப்புரையின் விளைவாகவே துரையப்பா முதன்மைத் துரோகியாகச் சித்தரிக்கப்பட்டு தமிழ் ஆயுத குழுக்களால் குறிவைக்கப்பட்டார்.

துரையப்பாவுக்குக் குறி வைத்தவர்களில் சிவகுமாரன் முக்கியமானவர். தனது ஆயுதக் குழுவின் நிதித் தேவைக்காக அவர் சில இளைஞர்களுடன் சேர்ந்து கோப்பாய் வங்கியைக் கொள்ளையிட முயன்றார். முயற்சி தோல்வி அடைந்து அவர் தப்பித்து ஓடும்போது, பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், 4 ஜூன் 1974 அன்று நஞ்சருந்தி மரணமானார். அவரது மரண - அஞ்சலி நிகழ்வுகளில் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். கூட்டணிப் பிரமுகர்களும் பங்குகொண்டனர். கூட்டணிப் பிரமுகர்களின் பங்குபெற்றலும் அவர்களது உரைகளும் ‘துரோகி ஒழிப்பு’ ஆயுத அரசியலை நியாயப்படுத்தலுக்கான முக்கிய திருப்புமுனை எனலாம்.

‘வன்முறை அரசியல் எமது பாதையல்ல; அகிம்சை வழியே எமது இலக்கு’ எனக் கூட்டணிப் பிரமுகர்கள் உரையாற்றிய போதும், சிவகுமாரனின் தியாகம் பற்றி விதந்துரைத்தனர். சிவகுமாரன் போன்றவர்களின் பாதை வேறுபட்டிருப்பினும் அவர்களது நோக்கம் ஒன்றே - அது மதிக்கப்பட வேண்டும் என விளம்பினர். இந்தியத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த பகத்சிங், நேதாஜி ஆகியோரது தியாகம் போன்றதே சிவகுமாரனின் தியாகமும் எனக் கூறினர்.

27 ஜூலை 1975 அன்று, பொன்னாலை வரதராஜப் பெருமாளை தரிசிக்கக் கோயிலுக்கு வந்த துரையப்பாவைக் குறிவைத்துப் பிரபாகரனும் மற்றும் மூன்று இளைஞர்களும் காத்திருந்தனர். அங்கு துரையப்பா சுட்டு கொல்லப்பட்டார். துரையப்பா கிறிஸ்தவராக இருப்பினும் வரதராஜப் பெருமாளை வணங்கிவந்தார். துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டபோது, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் உருவாகியிருக்கவில்லை.

‘புதிய தமிழ் புலிகள்’ என அவர்கள் தம்மை அழைத்துக் கொண்டனராயினும், அப்படி ஓர் அமைப்பு இருப்பது மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. தமிழ் ஈழ விடுலைப் புலிகள் அமைப்பின் உருவாக்கம் 5 மே 1976 ஆகும். துரையப்பாவின் மரணச்சடங்கில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிறுவனமயமாக்கப்பட்ட அரசியல் படுகொலை: ‘துரோகி அழித்தொழிப்பு ‘எனும் கருத்தியலை விடுதலைப் புலிகள் மட்டுமே உருவாக்கினர் என்பது தவறு. 1970-களில் எழுந்த இனரீதியான தமிழ்த் தேசியத்தின் பரந்துபட்ட கருத்தியலே இது. தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளின் மேடைமுழக்கங்கள் ‘துரோகி’ முத்திரையை வடிவமைத்தன. ஆயுதக் குழுக்கள் துரோகி அழித்தொழிப்பை நடைமுறைப்படுத்தின. 1981-ல், தமிழீழ மக்கள் விடுதலை கழகம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜாவைக் கொலை செய்தது. வடக்கில் சுதந்திரக்கட்சி, மற்றும் ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர்கள் பலர் டெலோ போன்ற பல்வேறு ஆயுதக்குழுக்களால் கொல்லப்பட்டனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பு தொடங்கிய காலத்தில் இருந்தே அவர்களுக்கு ஏகப்பிரதிநிதி கொள்கை இருந்தது. மாற்று இயக்கங்களின் உருவாக்கம் ஒற்றுமைக்குக் கேடு என அவர்கள் சிந்தித்தனர். புலிகளில் இருந்து பிரிந்து சென்ற ‘தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்’ புலிகளின் முதன்மையான குறியாகியது. ஆனாலும், 1986 வரை அவர்கள் மற்றைய அமைப்புகளை அதிகாரப்பூர்வமாகத் தடை செய்யும் வலுவை பெற்றிருக்கவில்லை. 1986 -ல் டெலோ அமைப்பை அழித்ததன் பின்பு அவர்கள் அனைத்து மாற்று இயக்கங்களையும் தடை செய்தனர்.

இதன் பின்பு, புலிகள் தாமே தமிழரின் ஏகப்பிரதிநிதிகள் எனப் பிரகடனம் செய்து, புலிகளை விமர்சிப்பவர்கள், மாற்று அமைப்புகளில் இருப்பவர்கள், இடதுசாரிகள், புத்திஜீவிகள், கூட்டணி பிரமுகர்கள் அனைவரையும் ‘துரோகி’ என்ற பட்டியலில் இணைத்தனர். புலிகளை விமர்சிப்பவர்கள் அரச ஆதரவாளர்கள், எனவே ‘துரோகிகள்’ என்ற புதிய வரைவிலக்கணம் புலிகளின் மொழியாகியது. இந்த வளர்ச்சிப்போக்கில் பிரபாகரன் ‘மேதகு’ ஆக்கப்பட்டு, ஏகத் தேசியத் தலைவரானார். அவரது கருத்தியலை விமர்சிப்பவர்கள் அழித்தொழிக்கப்படுவது இயல்பாக்கம் அடைந்தது.

இந்தக் கருத்தியலின் இன்னொரு வடிவம், படுகொலை செய்யப்பட்டவர்களை அரசின் ஒட்டுக்குழுவாகச் (PARAMILITARY) சித்தரிப்பது. ‘தமிழ் நெட்’ என்ற இணைய ஊடகத்தின் ஆசிரியர் சிவராம் (தாரகி) இந்தப் புதிய வரைவிலக்கணத்தின் சூத்திரதாரி. ஒட்டுக்குழுவைப் படுகொலை செய்யும் நியாயப்படுத்தலை ‘தமிழ் நெட்’ பரப்பியது. துரோகி - ஒட்டுக்குழு சமன்பாட்டை முன்வைத்தது தமிழ் நெட். ஒருவர் கொல்லப்பட்டு அவருக்கு ஒட்டுக்குழு பட்டம் வழங்கப்படும்போது, அவர் ‘துரோகி’ என்ற எண்ணக்கரு ஊட்டப்படுகிறது.

நச்சுக்கருத்தியலின் தொடர்ச்சி: மே 2009 இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகள் இலங்கை ராணுவத்தால் ராணுவரீதியாக நிர்மூலமாக்கப்பட்ட பின், துரோகி அழித்தொழிப்பு நடை முறையில் ஸ்தம்பித்தது. ஆனாலும், இந்த ஆயுதக் கலாச்சார கருத்தியலின் தொடர்ச்சி தமிழ்த் தேசியப் பரப்பின் ஒரு பகுதியினரிடம் இன்னும் குடிகொண்டு இருக்கிறது.

இன்றும்கூட, விடுதலைப் புலிகளை விமர்சிப்பவர்கள் ‘துரோகிகள்’ என அடையாளப்படுத்தப்படுகிறார்கள். உதாரணத்திற்கு, முஸ்லிம் மக்களின் வெளியேற்றத்தைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இனச் சுத்திகரிப்பு எனக் கூறிய சுமந்திரன் ‘துரோகி’ ஆக்கப்பட்டார். இவ்வகையில் இந்த நச்சுக் கருத்தியல் தமிழ்த்தேசிய அரசியல் பரப்பில் எவ்வாறு ஊறி இருக்கின்றது என்பதைக் காணலாம்.

வேடிக்கை என்னவெனில், தற்போது - முக்கியமாக புலம்பெயர் தேசங்களில்- விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தங்களுக்குள் மோதி, குழுக்களை உருவாக்கி, ஒருவரை ஒருவர் ‘துரோகி’ என பட்டம் சூட்டுகிறார்கள்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் அதிக விலை கொடுத்த வெற்றி: துரையப்பாவின் படுகொலைக்கு உத்தரவிட்டது தமிழர் கூட்டணித் தலைமை என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. எனினும், ‘துரோகி’ என்ற அரசியல் சொல்லாடல் நச்சு விதையை இட்ட தார்மீக பொறுப்பு அவர்களுக்கு உண்டு. கூட்டணியினரின் தொடர்ந்த துரோகிச் சொற்சிலம்பம், துரோகி அழித்தொழிப்பு என்ற கருத்தியலையும் நடைமுறையையும் ஆயுத குழுக்கள் தொடர வழி வகுத்தது.

பின்நாளில் அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் இந்த அழிவு அரசியலின் ஆபத்தை உணர்ந்து பேச்சுவார்த்தை மூலமாக அரசியல் தீர்வைப் பெறவேண்டும் எனும் குறிக்கோளை முன்வைத்தபோது, புலிகளின் பார்வையில் அந்த நிலைப்பாடு துரோகமாக்கப்பட்டது. அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம் போன்ற மிதவாத அரசியல் தலைவர்கள் துரோகிகளாக்கப்பட்டுப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

கூட்டணியினரின் ‘துரோகி’ என்ற கருத்துருவாக்கம் ஆயுதக்குழுக்களின் ‘துரோகி அழித்தொழிப்பு’ என வடிவமெடுத்துப் பின்பு தமது கருத்தியலுக்கு எதிரான எவரும் துரோகிகளே எனும் புலிகளின் அதியுச்ச துரோகி அரசியலாக பரிணமித்தது.

‘துரோகி’ என்ற கருத்துருவாக்க விதைப்பு எவ்வாறு ஒரு மோசமான நச்சுக் கருத்தியலுக்கான ஆரம்ப புள்ளியாக இருந்தது; பின்னர் அந்த கருத்தியலை விதைத்தவர்களும் அதற்கு பலியாகினர் என்பது ஆழமாக நோக்கப்படவேண்டியது.

அழிவுப்பாதை அரசியலின் கவிதை: ‘துரோகி’ மொழியாடலின் அழிவு அரசியலையும் அதன் மோசமான பக்கங்களையும் சி.சிவசேகரம் தனது கவிதையொன்றில் துல்லியமாக வெளிக்கொணர்கிறார். அக்கவிதையின் சில வரிகள்:

“துரோகி எனத் தீர்த்து முன்னொரு நாள் சுட்டவெடி
சுட்டவனைச் சுட்டது
சுடக்கண்டவனை சுட்டது
சுடுமாறு ஆணையிட்டவனைச் சுட்டது
குற்றம் சாட்டியவனை வழக்குரைத்தவனை
சாட்சி சொன்னவனைத் தீர்ப்பு வழங்கியவனைச் சுட்டது
தீர்ப்பை ஏற்றவனைச் சுட்டது; எதிர்த்தவனைச் சுட்டது
சும்மா இருந்தவனையும் சுட்டது.”

எனது மீள்பார்வை: பார்வையாளனாக இன்றி, கடந்த காலங்களில் இக்கருத்தியலால் கட்டுண்ட ஒருவன் என்ற வகையில் இந்த பகுப்பாய்வை நான் வரைந்துள்ளேன். 1972 காலப்பகுதிகளில் தமிழ்த் தேசியவாதச் சிந்தனையால் உந்தப்பட்டவன் நான். மாணவனாக நான் இருந்த காலப்பகுதிகளில், ‘துரோகி அழித்தொழிப்பு’ என்ற சிந்தனையில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. 1974 காலப்பகுதிகளில் பிரபாகரன் எனக்கு அறிமுகமாகிறார்.

துரையப்பா கொலைக்கு பின்பு பிரபாகரனுக்கும் பற்குணத்திற்கும் எனது பாட்டி வீட்டில் நான் அடைக்கலம் கொடுத்தேன். பிரபாகரன் எனது பாட்டி வீட்டில் குறைந்தது ஒரு வருடம் தங்கி இருந்தார். பற்குணம் பின்னர் இயக்கத்தை கைவிட்டுச் செல்ல முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரபாகரனால் கொல்லப்பட்டதும் நிகழ்ந்தது. ஆரம்பத்தில் புதிய தமிழ் புலிகள் அமைப்பிலும், பின்னர் 1976 -ல் தமிழீழ விடுதலைப் புலிகளுடனும் இணைந்து செயல்பட்டேன்.

ஏப்ரல் 1984 -ல் புலிகளிலிருந்து நான் விலகிய பின்னர் இனத்துவ தேசியவாதச் சிந்தனை மரபின் அழிவுக் கருத்தியலை நான் படிப்படியாகத் தரிசிக்க தொடங்கினேன். தமிழ்த்தேசிய வாதத்தில் ஆழ்ந்த பற்றுக்கொண்டு பயணித்து, பின்னர் அந்தக் கருத்தியலை விமர்சனத்திற்குள்ளாக்கிய எனது நீண்ட பயணத்தின் சுய பிரதிபலிப்பு இது. இறுக்கமான கருத்தியல் கட்டுமானத்திலும் மாற்றங்கள் ஏற்படும் எனும் தாற்பரியத்தைப்புரிந்து, எமது கடந்தகால வரலாறு சங்கடத்துக்கு உரியதெனினும் அதனை துணிச்சலுடன் வெளிப்படுத்துவது அவசியம்.

மாற்றுப்பாதைக்கான முன்மொழிவு: முடிவாக, தமிழ்த் தேசியவாதக் கருத்தியலில் ஆழமாக வேரூன்றியுள்ள ஆபத்தான, நச்சுத்தன்மை கொண்ட ‘துரோகி’ கருத்தியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ‘துரோகி’ என்ற கருத்து இனத்துவத் தேசியவாத உரையாடலிலிருந்து பிரிக்க முடியாத அம்சம். இனத்துவத் தேசியவாதம் காலனியத்துவத்தின் உற்பத்தி. எனவே காலனித்துவ மனநிலையிலிருந்து நாம் விடுதலை பெறுவது அவசியம்.

‘Neither Settler nor Native’ எனும் நூலில் மஹ்மூத் மம்தானி “காலனித்துவ அம்சங்களற்ற அரசியல் சமூகத்தை மீள் கற்பனை செய்வதும், அதன் அடிப்படையில் கொள்கை வகுத்தலுமே தலையான பணி”எனச் சுட்டுகிறார். அரசியல் சூழலில் உருவாகும் வன்முறையை வெறும் குற்றமாக பார்ப்பதை விடுத்து அதன் அரசியலைத் தரிசித்தல் அவசியம் என்கிறார்.

எனவே பாரம்பரியத் தாயகம், எல்லைகள், தனித்துவமான கலாச்சாரம், அடையாளம் போன்ற கட்டமைக்கப்பட்ட கருத்தாக்கங்களை கைவிட்டு, ஆதிக்க அரசியல் மொழியாடலையும் அதன் கருத்தியல் தளத்தையும் கேள்விக்குட்படுத்தும் புதிய அரசியலை மீள் கற்பனை செய்தல் அவசியம். “தாயகக் கருத்தியல் கலாச்சார ஆதிக்கத்துக்கான கருவி. ஜனநாயகம் தழைக்க வேண்டுமானால் தேச - அரசுக் கட்டுமானம் தகர்க்கப்பட வேண்டும்” என்கிறார் மம்தானி. இந்தக் கருத்து சிங்களத் தேச அரசுக் கட்டுமானத்திற்கும் சாலப்பொருத்தம்.

இவ்வகையில், இனத்துவத் தேசியவாதக் கட்டமைப்புக்குள் சிந்திப்பதை தவிர்க்கையில் ‘துரோகி அழித்தொழிப்பு’ என்ற சிந்தனை மறைந்து விடுகிறது.

அல்ஃபிரட் துரையப்பா கொலை செய்யப்பட்டது இனத்துவத் தேசியவாதக் கண்களால் அல்லாமல் மனிதநேயம், விமர்சனத்திற்கான சகிப்புத் தன்மை, மாற்றுச் சிந்தனைகள் மற்றும் ஜனநாயக விழுமியங்கள் போன்ற விரிந்த கொள்கைகளின் வெளிச்சத்தில் மறுபரிசீலனை செய்யப்படவேண்டும். ‘துரோகி அரசியல்’ என்ற இருண்ட அத்தியாயத்தை நேர்மையாக எதிர்கொள்வதன் மூலமே பரந்த மனப்பான்மைகொண்ட ஜனநாயகச் சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.

இவ்வாறு ‘அரங்கம் செய்திகள்’ இணையதளத்துக்கு ராகவன் எழுதியுள்ள ‘துரையப்பா படுகொலையும் தமிழ்த் தேசியப்பரப்பில் ‘துரோகி’ மொழியாடலும்’ என்ற கட்டுரையில் கூறியுள்ளார். இந்த கட்டுரையின் தகவல்கள் எனது கருத்தாக்கம் அல்ல… இது பார்வைக்கு மட்டுமே! என்பதை மீண்டும் நான் கூறிக் கொள்கிறேன்.

SCROLL FOR NEXT