கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் மண்டபத்திற்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பாலம் சுற்றுலா பயணிகளின் வரவேற்பை பெற்றுள்ள இடமாகும். கடலின் அழகை ரசித்தபடியே கண்ணாடி மீது நடந்து செல்வதை சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புகின்றனர்.
<
இந்த பாலத்தில் விரிசல் விழுந்துள்ளதாக சமீபத்தில் வெளியான செய்தி, சுற்றுலா பயணிகள் மத்தியில் ஒருவித அச்சத்தையும், பாதுகாப்பு குறித்த கேள்விக்குறியையும் ஏற்படுத்தியது. பாலத்தின் கட்டமைப்பு மேற்பகுதியில் பெயின்ட் அடிக்கும் பணி நடந்தபோது, 7 மீட்டர் உயரத்தில் இருந்து சுத்தியல் தவறி விழுந்ததில் 6வது கண்ணாடியில் லேசான விரிசல் விழுந்துவிட்டது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் விளக்கம் அளித்தது பொதுமக்கள் மத்தியில் இன்னும் அதிர்ச்சியை உருவாக்கியது. கண்ணாடி இருக்குமிடத்தில் சுத்தியலுக்கு என்ன வேலை? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ள நியாயமான கேள்வியாகும்.
கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ள கட்டமைப்பின் மேற்பகுதியில் சுத்தியல் பயன்படுத்தியிருப்பது பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள கவனக்குறைவான செயலாகவே கருத முடியும். கடந்த மாதம் 16-ம் தேதி இச்சம்பவம் நடந்த நிலையில், புதிய கண்ணாடிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதைப் பொருத்தும் பணிகள் தாமதமாக நடைபெற்று வருவது இன்னும் வருத்தமளிக்கும் விஷயமாகும்.
கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டு இதுவரை 17.50 லட்சம் பேர் இப்பாலத்தில் நடந்து சென்று இயற்கை அழகை ரசித்திருப்பதன் மூலம் சுற்றுலா பயணிகளிடம் உள்ள வரவேற்பை உணர முடியும். கண்ணாடியில் விரிசல் விழுந்த நிலையிலும் இதுவரை ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் இதை பயன்படுத்தியுள்ளனர். நான்கு அடுக்கில் அமைந்துள்ள புதிய கண்ணாடியை வரவழைத்து பொருத்துவதில் ஏற்பட்டுள்ள தற்காலிக தடைகளை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளதுடன், சில தினங்களில் இப்பணி நிறைவடையும் என்று கூறியிருப்பது ஆறுதலளிக்கிறது.
அதேசமயம், கண்ணாடிப் பாலத்தின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டப்பட்டிருப்பதை கண்டிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் ஒரு கண்ணாடி அமைப்பில் என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும், என்னென்ன பொருட்களை அனுமதிக்க கூடாது என்பது குறித்த விரிவான பட்டியலை உருவாக்கி, அவற்றை கண்டிப்புடன் அமல்படுத்துவதிலும் மாவட்ட நிர்வாகம் அக்கறை காட்ட வேண்டும்.
சோதனை செய்வதற்கு தேவையான பணியாட்கள், பாதுகாப்பு உபகரணங்களும் போதுமான அளவில் இருக்கும் வகையில் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதும் அவசியம். மக்கள்தொகை அதிகம் உள்ள நாடு என்ற முறையில் எந்நேரமும் சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்திற்கு மாறாக இருக்க வாய்ப்புண்டு.
பயணிகள் தங்களை அறியாமல் ஆபத்தான பொருட்களை எடுத்துவரும் சூழ்நிலையும் ஏற்படும் என்பதால், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே திட்டமிட்டு விதிமுறைகளை உருவாக்கினால் மட்டுமே அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க முடியும். தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் பாதுகாப்பு மிக்கவை என்ற நற்பெயரையும் அப்போது தான் பெற்றுத்தர முடியும்.