ஜிஎஸ்டி வரி விகிதம் 2.0 என்ற பெயரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றம் தொழில்துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாட்டில் விதிக்கப்பட்டு வந்த பல்வேறு மறைமுக வரிகளை எல்லாம் ஒருங்கிணைத்து, கடந்த 2017-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி வரி விகிதம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் ஊக்கமாக அமைந்து வருகிறது.
மாதந்தோறும் 2 லட்சம் கோடி ரூபாயை நெருக்கி வருமானத்தை ஈட்டித்தரும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு அச்சாணியாக இருந்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை. அதேநேரம், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சாதாரண பொருட்களும் ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் வந்ததால், பொதுமக்களின் அதிருப்தியும் நீடித்து வந்தது. இதற்கு விடைகாணும் வகையில், புதிய மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது.
புதிய வரிவிதிப்பு முறையில், மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் சோப்பு, ஷாம்பு, தலைக்கு தேய்க்கும் எண்ணெய், நெய், பழரசம், ரொட்டி, பரோட்டா, பிஸ்கட், சாக்லேட், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பல பொருட்களுக்கான வரி 18 மற்றும் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவ காப்பீட்டுக்கான வரி மற்றும் மாணவர்கள் பயன்படுத்தும் நோட்டு, புத்தகங்களுக்கான வரிவிதிப்பு முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது போற்றத்தக்கது.
மோட்டார் சைக்கிள், டிவி, குளிர்சாதன பெட்டி ஆகியவை எல்லாம் இன்றைய காலகட்டத்தில் வீடுகளில் உள்ள அத்தியாவசியப் பொருட்களாக மாறிவிட்டதால், அவற்றை மனதில் கொண்டு அதற்கான வரி விகிதங்களையும் குறைத்திருப்பது மத்திய அரசு சாதாரண மக்களின் மனநிலையை புரிந்து கொள்ளத் தொடங்கியிருப்பதன் அடையாளமாகவே அமைந்துள்ளது.
அதேசமயம், தீய பழக்கங்களாக கருதப்படும் சிகரெட், புகையிலை போன்றவற்றை தனிப்பட்டியலாக்கி 40 சதவீத வரி விதிப்பின் கீழ் கொண்டு வந்திருப்பது யாரும் குறை சொல்ல முடியாத நல்ல முடிவாகும். இந்த பட்டியலில் குளிர்பானங்கள் சேர்க்கப்பட்டிருப்பது இவற்றை பொதுவாக பயன்படுத்தும் இளைஞர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விஷயமாகவே அமைந்து உள்ளது.
இந்த வரிவிகித மாற்றங்களின் மூலம் மத்திய அரசுக்கு ரூ.48,000 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டிருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் மக்களின் வரிச்சுமையை குறைக்க வேண்டும் என்று துணிச்சலாக எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. இதன்மூலம், வரி வருவாய் குறையும் என்று சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இதன்மூலம், மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து, நுகர்வு அளவு உயரும் என்றும், அதன்மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கணிக்கின்றனர்.
உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள், விற்பனையாளர்கள் இந்த வரி குறைப்பு மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அமல்படுத்தினால் மட்டுமே மத்திய அரசின் எண்ணம் ஈடேறும். அதற்கான கண்காணிப்பு பணிகளையும் சேர்த்தே செய்ய வேண்டியது அதிகாரிகளின் கடமை.