டெல்லி - குர்கான் தேசிய நெடுஞ்சாலையில் சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் நாடு முழுவதும் உள்ள போக்குவரத்து பிரச்சனைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.
குர்கான் பகுதியில் 100 மி.மீட்டர் அளவில் 20 நிமிடம் பெய்த மழையை தாங்க முடியாமல் நெடுஞ்சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், 25க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையின் நடுவிலேயே பழுதாகி நின்றதால் 20 கி.மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் தேங்கி ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அரை மணி நேரத்தில் கடக்க வேண்டிய தூரத்தை வாகன ஓட்டிகள் 7 மணி நேரத்தில் கடந்து சென்ற பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று ஐதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களிலும் சிறு மழை பெய்தாலே மணிக்கணக்கில் சாலைகளில் வாகனங்கள் தேங்கி நிற்கும் காட்சி அரங்கேறி வருகிறது. பழுதடைந்த வாகனங்களை கிரேன் உதவியுடன் போக்குவரத்து காவலர்கள் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டாலும் நிலைமை அவர்களது கைமீறிச் செல்லும்போது, போக்குவரத்து காவலர்கள் செய்வதறியாது ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும் நிலையே ஏற்பட்டு விடுகிறது.
டெல்லி - குர்கான் சாலை மேம்பாலத்தில் இரவு நேரத்தில் வாகனங்கள் தேங்கி நின்ற காட்சியை புகைப்படங்கள் மற்றும் காணொலி வாயிலாக சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது உலகம் முழுக்க பரவி விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது. முன்பெல்லாம், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் 20 கி.மீட்டருக்கு போக்குவரத்து நெரிசல், 40 கி.மீட்டருக்கு போக்குவரத்து நெரிசல் என்று வெளிவந்த செய்திகள் தற்போது இந்தியாவின் பெருநகரங்களிலும் கண்கூடான காட்சியாக மாறி வருகிறது.
இத்தகைய காட்சிகள் நாடு முன்னேறிவிட்டது என்று பெருமை கொள்வதா அல்லது பெருகும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, போக்குவரத்து கட்டமைப்புகள், வாகன பயன்பாடு கொள்கைகள் வகுக்கப்படவில்லை என்று வருத்தப்படுவதா என்ற சந்தேகம் எழுகிறது. இந்த காட்சிகள் டெல்லி, ஐதராபாத், மும்பை, பெங்களூரு நகரங்களுக்கு மட்டுமின்றி, சென்னை போன்ற நகரங்களிலும் அவ்வப்போது தலைதூக்கி வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் அவதிக்குள்ளாக்குகிறது.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக ஒரு கி.மீட்டருக்கு 9,500 வாகனங்கள் ஐதராபாத் நகரில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அங்கு தற்போது 86 லட்சம் வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆண்டுக்கு 40 சதவீதம் என்ற அளவில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது. ஒரு கி.மீட்டர் சாலையில் எத்தனை வாகனங்கள் ஓடுவதற்கு அனுமதிக்கலாம் என்பது குறித்து அறிவியல் பூர்வமான கொள்கை எதுவும் வகுக்கப்படாததே இதுபோன்ற வாகன நெரிசலுக்கு காரணமாகும்.
உதாரணமாக, சென்னை வேளச்சேரி போன்ற பகுதிகளில் உள்ள மக்கள்தொகை எண்ணிக்கையும், வாகனங்களின் எண்ணிக்கையும் இருக்கும் கட்டமைப்பை விட பன்மடங்கு அதிகம். இருக்கும் சாலைகள் மற்றும் உள்கட்டமைப்புக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையை அனுமதிப்பது குறித்து தேசிய அளவில் கொள்கைகள் வகுத்து அதை மிகவும் கண்டிப்புடன் அமல்படுத்துவதே எதிர்காலத்தில் இத்தகைய பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.