சிறப்புக் கட்டுரைகள்

நாய்களுக்கும் தெருக்கள் சொந்தமா?

மு.இராமனாதன்

ஜூலை 28ஆம் நாள், டெல்லி நாளிதழில் ஒரு செய்தி வெளியானது. அது நாள்பட்ட பிரச்சினை ஒன்று மேலெழும்பக் காரணமாக அமைந்தது. டெல்லி நகரத் தெருக்களில் 10 லட்சம் நாய்கள் வசிக்கின்றன. அவற்றுள் ஒன்று, சாவி ஷர்மா என்னும் ஆறு வயதுச் சிறுமியைக் கடித்ததில், அந்தக் குழந்தை இறந்துபோனாள்.

உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் இந்தப் பிரச்சினையை ஒரு வழக்காக எடுத்துக்கொண்டு விசாரித்தனர். தலைநகரில் உள்ள நாய்களை எல்லாம் அப்புறப்படுத்திக் காப்பகத்தில் வைத்துப் பராமரிக்குமாறு ஆகஸ்ட் 11 அன்று மாநகராட்சிக்கு ஆணையிட்டனர். தெருநாய்களால் குழந்தைகளும் முதியோரும் ஊனமுற்றோரும் படும் இன்னல்களையும் சுட்டிக்காட்டினர்.

ஆனால், இந்தத் தீர்ப்பு விலங்கு ஆர்வலர்கள் பலருக்கு உவப்பாக இல்லை. ‘நமது தெருக்கள் நாய்களுக்கும் சொந்தம்; அவற்றைத் தெருக்​களி​லிருந்து வெளியேற்றுவது உயிர்க்​கருணை ஆகாது’ என்றனர். மாநகரத் தெருக்​களில் புழங்கும் எல்லா நாய்களையும் பராமரிப்​ப​தற்கு நகராட்​சியில் காப்பகங்கள் உள்ளனவா என்றும் கேள்வி எழுப்​பினர்.

செல்வமும் செல்வாக்கும் கொண்ட அவர்களது குரல் சக்தி​மிக்கது. ஆகவே, மூன்று நீதியரசர்கள் கொண்ட பிறிதொரு அமர்வுக்கு வழக்கு மாற்றப்​பட்டது. இந்த அமர்வு, ஆகஸ்ட் 22 அன்று தீர்ப்பைத் திருத்தி எழுதியது: ‘இனி, நாய்கள் தெருக்​களில் தாராளமாக உலவலாம். நோயுற்ற நாய்களை மட்டும் காப்பகத்தில் பராமரித்தால் போதுமானது’.

பிரச்சினை பெரிது: இந்தியத் தெருக்​களில் சுமார் 6 கோடி நாய்கள் உரிமை​யாளர் இன்றி உலவுகின்றன என்கிறது உலக சுகாதார நிறுவனம். அதாவது, சராசரியாக 25 இந்தியக் குடிநபர்​களுக்கு ஒரு நாய். 2023இல் நாடெங்​கிலுமாக 37 லட்சத்​துக்கும் மேற்பட்டோரை நாய்கள் கடித்​திருக்​கின்றன என்கிறது அரசு. அதாவது, ஒவ்வொரு நாளும் 10,000 இந்தி​யர்​களைத் தெருநாய்கள் கடிக்​கின்றன. வெறிநோய் (ரேபிஸ்) பீடித்த நாய் கடித்தால் பிழைப்பது அரிது. அவ்விதம் இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 20,000 பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்​பிட்​டிருக்​கிறது.

2022இல் ஒரு காப்பீட்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை, சாலை விபத்து​களுக்கான இரண்டாவது பெரிய காரணி தெருநாய்கள் என்கிறது. தவிர, தெருநாய்​களால் அவதிக்​குள்​ளாகும் நடந்துசெல்​வோர், சைக்கிள்​-இருசக்கர வாகன ஓட்டிகள், விநியோகத் தொழிலா​ளர்கள் (gig workers), குழந்தைகள், முதிய​வர்​களின் எண்ணிக்கை குறித்து நம்மிடத்தில் எந்தப் புள்ளி​விவரமும் இல்லை.

எப்படிப் பெரிதானது? - தெருநாய்​களின் பிரச்சினை புத்தா​யிர​மாண்​டுக்குப் பிறகுதான் தீவிரமடைந்தது. அதற்கு முன்புவரை வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெற்றாக வேண்டும். இவற்றை ஊராட்​சிகள் வழங்கும். தெருக்​களில் நாய்களின் நடமாட்டம் மிகுந்​தால், ஒரு நாள் ‘நாய் வண்டி’ வரும். உரிமம் இல்லாத நாய்களை அது பிடித்​துப்​போகும். அவை காப்பகங்​களுக்குப் போகும், மிகுதியும் கருணைக் கொலைக்கு உள்ளாகும். மக்களின் பாதுகாப்​பையும் நாய்கள் படும் அல்லல்​களையும் கருதி, இவற்றைச் செய்யும் அதிகாரம் ஊராட்​சிகளுக்கு இருந்தது (விலங்கு வதை பாதுகாப்புச் சட்டம், PCA Act, 1960).

இந்த அதிகாரம் 2001இல் பறிக்​கப்​பட்டது. பறித்தவர் அப்போதைய கலாச்​சாரத் துறை அமைச்சர் மேனகா காந்தி. விலங்கு நலனோ நோய்ப் பரவல் தடுப்போ அவரது துறை சார்ந்தவை அல்ல. எனினும், அவர் விலங்குக் கருத்தடை விதியை (ஏபிசி [Animal Birth Control, ABC Rules, 2001]) அமலாக்​கி​னார்.

இதன்படி நாய்களைப் பிடித்து, அவற்றுக்குக் கருத்தடை செய்வித்து, தடுப்பூசி செலுத்தி, பிடிக்​கப்பட்ட தெருக்​களிலேயே மீண்டும் அவற்றை விட்டுவிட வேண்டும் (CNVR- capture, neuter, vaccinate and release). நாய்களைப் பிடித்துக் காப்பகங்​களில் அடைப்பதோ, அவசிய​மானால் கருணைக் கொலை செய்வதோ தடை செய்யப்​பட்டது. அப்போது முதல் வீட்டு நாய்களுக்கு உரிமம் பெறுவதும் அவசியமில்லை என்றானது. நமது நாட்டில் காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் (Wildlife Protection Act, 1972) கடுமை​யானது. ஆனால், அந்தச் சட்டமே ஒரு சிறுத்தையோ யானையோ ஆட்கொல்​லியாக மாறினால், அதைக் கொல்ல அனுமதிக்​கிறது.

ஆனால், ஏபிசி விதிகளின்படி, எந்த நாயையும் கொல்ல முடியாது. மேலை நாடுகளில் ‘தெரு​நாய்கள்’ என்றொரு சொல் வழக்கில் இல்லை. அவர்கள் stray dogs என்பார்கள். இதற்குக் கைவிடப்​பட்ட, உரிமை​யாளர் இல்லாத நாய் என்று பொருள் சொல்லலாம். ஏபிசி விதிகள், இதைத் ‘தெரு​நாய்’ என்கிற சொற்றொடரால் பதிலீடு செய்தன. இதனால், இந்த நாய்களுக்குச் சட்டரீ​தியான அங்கீ​காரமும் தெருக்​களில் குடியிருக்கும் உரிமையும் கிடைத்தன. நம் நாட்டில் சட்டங்கள் எப்படித் தவறாக இயற்றப்​படு​கின்றன என்பதற்கு இதுவும் ஓர் எடுத்​துக்​காட்டு.

ஆர்வலர்கள் சொல்வதென்ன? - உச்ச நீதிமன்றம் தெருநாய்களை அப்பு​றப்​படுத்த வேண்டும் என்று விதி எழுதி​ய​போது, நாடெங்​கிலும் விலங்கு நல ஆர்வலர்கள் கிளர்ந்​தெழுந்​தனர். அவர்கள் இந்த விதிக்கு எதிராகச் சமூக வலைத்​தளங்​களில் வைத்த வாதங்​களில் மூன்றைப் பரிசீலிப்​போம். முதலாவது வாதம், தெருநாய்​களுக்கு வாழ்வதற்கு உரிமை உண்டு. வாழ்வுரிமை எல்லா உயிர்​களுக்கும் உண்டு. ஆனால் நாய்கள் தெருவில் வசித்தால், அது நாய்களுக்கும் பாதுகாப்​பில்லை, மனிதர்​களுக்கும் பாதுகாப்​பில்லை.

மேலும், நாய்களின் மீது காட்டப்​படும் கருணை, வேறு பல காட்டு உ​யிர்கள் அற்றுப்​போவதற்குக் காரணமாகிறது. சென்னை கிண்டி தேசியப் பூங்காவில் உள்ள வெளிமான்கள், ராஜஸ்​தானில் கானமயில்கள், அஸ்ஸாமில் தங்க மந்திகள் (Golden langur), கர்நாடகத்​துக்கு வலசை வரும் பட்டைத்தலை வாத்துக்கள் முதலான பல அரிய காட்டு​யிர்​களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்குத் தெருநாய்களே காரணம் என்கிறார் சூழலிய​லாளர் சு.தி​யடோர் பாஸ்கரன்.

இரண்டாவது வாதம், நாய்களுக்குக் கருத்தடை செய்வித்தால் அதன் இனப்பெருக்​கத்தைக் கட்டுப்​படுத்​தி​விடலாம் என்பது. கடந்த கால் நூற்றாண்டாக ஏபிசி விதிகள் அமலில் இருக்​கின்றன. அவற்றால் நாய்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிய​வில்லை. மாறாக, அவை பல்கிப் பெருகி வருகின்றன என்பது அப்பட்டமான உண்மை. கருத்தடை செய்விக்​கப்​பட்​டால்கூட, அது உடனடி​யாகப் பலன் தராது; அப்போதும் விபத்து​களும் நாய்க்​கடிகளும் பல ஆண்டு​களுக்குத் தொடரவே செய்கின்றன.

தெருநாய்​களுக்கு உணவளிப்பது ஒரு கருணைச் செயல் என்பது மூன்றாவது வாதம். கருணை உள்ளவர்கள் நாய்களை வீட்டில் வளர்க்க வேண்டும் அல்லது காப்பகங்​களில் பராமரிக்க வேண்டும். அவற்றை வீதிகளில் விடக் கூடாது. கருணை​யாளர்கள் வழங்கும் உணவு நாய்களுக்குப் போதுமானதாக இருப்​ப​தில்லை. ஆகவே, அவை தெருவில் வீசப்​படும் கழிவையும் குப்பைகளையும் சாப்பிட்டு, நடமாடும் நோய்க் கிடங்குகளாக உலவுகின்றன.

என்ன செய்ய​லாம்? - தெருநாய்​களால் செல்வந்​தர்​களுக்குப் பெரிய பிரச்சினைகள் இல்லை. எளிய மக்களுக்​குத்தான் சிரமம். மேற்கு நாடுகளிலும் ஹாங்காங், சிங்கப்​பூர், ஜப்பான், தென்கொரியா முதலிய கிழக்​காசிய நாடுகளிலும் தெருநாய்களே இல்லை.

அவர்களது நடைமுறை​களில் இருந்து நாம் சிலவற்றைப் பெறலாம். முதலா​வதாக, வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்கும் நடைமுறையை மீண்டும் கொண்டுவர வேண்டும். ஆஸ்திரேலி​யாவில் வீட்டு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ பொருத்​தப்​படும். அப்படி அல்லாத நாய்கள் தெருவில் தென்பட்​டால், அதை ஊராட்சி அலுவல​கத்​துக்குத் தெரியப்​படுத்துவது குடிநபரின் கடமை.

அடுத்து, எல்லாத் தெருநாய்​களையும் பிடிக்க வேண்டும். பெருநோய் பீடித்த நாய்களைக் கருணைக் கொலை புரிய வேண்டும். அடுத்து, பிடிக்​கப்பட்ட நாய்களி​லிருந்து விலங்கு ஆர்வலர்கள் தங்களுக்கு விருப்பம் உள்ள நாய்களைத் தத்தெடுத்​துக் ​கொள்​ளலாம். அரசு இதை ஊக்கு​விக்க வேண்டும். எஞ்சிய நாய்களைக் காப்பகத்தில் பராமரிக்க வேண்டும். அவற்றுக்குக் கருத்தடை செய்து தடுப்​பூசியும் போட வேண்டும். இதற்கு, அவசியமான காப்பகங்​களைக் கட்ட வேண்டும்.

இந்தப் பணி பெரிது, அதிகச் செலவு பிடிக்​கக்​கூடியது. ஊராட்​சிகளிடமும் மாநில அரசிடமும் இதற்கான நிதி இராது. நாய்ப் பெருக்​கத்​துக்குக் காரணமான ஏபிசி விதிகளை வியந்து போற்றி வருகிற (கால்நடை வளர்ப்புத் துறையின் செய்திக் குறிப்பு, 1.4.2025) மத்திய அரசுதான் இதற்கான நிதியை முறையாக வழங்க வேண்டும்.

ஒரு நகரின் உள்கட்​டமைப்பு என்பது பாலங்கள், சாலைகள், மெட்ரோ ரயில்கள், மின்சாரம், தொழில்​நுட்பம் என்பன மட்டுமல்ல. அந்த நகரம் பாதுகாப்​பானதாக இருக்க வேண்டும். தெருநாய்கள் அதற்கு மோசமாகக் குந்தகம் விளைவிக்​கும். நாய்களுக்குத் தெருக்கள் சொந்தமில்லை. அவற்றைத் தெருக்​களி​லிருந்து அப்பு​றப்​படுத்த வேண்டும். அதற்கு அறிவியல்​ரீ​தியான வழிகளைக் கைக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால், அது நமது நகரங்​களைப் பாதுகாப்​பாகவும் துப்பு​ர​வாகவும் மாற்றும். குழந்தை​களின் மரணங்​களும் சம்பவிக்​காது.

- தொடர்புக்கு: Mu.Ramanathan@gmail.com

SCROLL FOR NEXT