மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் மூன்று புதிய மசோதாக்களை அறிமுகம் செய்துள்ளார். அதில் முக்கியமான மசோதா அரசியலமைப்புச் சட்டத்தின் 130-வது சட்ட திருத்த மசோதா 2025 ஆகும்.
பிரதமர், மாநில முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பதவிகளில் இருப்போர் 5 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ள குற்ற வழக்குகளில் சிக்கி 30 நாட்கள் சிறையில் இருந்தால், 31-வது நாள் அவர்களை பதவியிலிருந்து நீக்கலாம் என்பதே சட்ட மசோதாவின் சாராம்சம். இதன்படி பிரதமரை நீக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கும், முதலமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநர்களுக்கும், அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
யூனியன் பிரதேசங்களாக இருந்தால் துணைநிலை ஆளுநர்கள் பதவிநீக்கம் செய்வார்கள். இந்தச் சட்டத்திற்கு எதிராக அறிமுக நிலையிலேயே எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.
குற்ற வழக்குகளில் சிறைக்குச் செல்லும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தங்கள் பதவியிலிருந்து விலகாமல் நீடிப்பது, அரசியல் தலைவர்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை சீர்குலைப்பதால் இந்த சட்ட மசோதா கொண்டு வரப்படுவதாக அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.
டில்லி முதலமைச்சராக இருந்த அர்விந்த் கேஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், தமிழகத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி போன்றோர் வழக்குகளில் சிக்கி சிறைக்குச் சென்ற போதிலும் பதவிகளில் நீடித்ததையே அமித் ஷா மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார்.
மதிப்புமிக்க பதவிகளில் இருப்போர் அந்தப் பதவியிலும் இருந்து கொண்டு, சிறை வாசத்தையும் அனுபவிப்பது என்பது ஜனநாயகத்தில் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத முரண்பட்ட காட்சியாகும். அத்தகைய காட்சிகள் சமீபகாலமாக அதிக அளவில் அரங்கேறி வருவதே மத்திய அரசின் இந்த நகர்வுக்கு அடிப்படைக் காரணம்.
முன்பெல்லாம் அதிகாரத்தில் இருக்கும் தலைவர்கள் மீது குற்றச்சாட்டுகள் வந்தால் தார்மீக அடிப்படையில் பதவி விலகி விடுவார்கள். குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்ட பின்பே மீண்டும் பதவியில் அமர்வார்கள். நவீன அரசியல் யுகத்தில் அத்தகைய தார்மீக நெறிகள் குறைந்து, சிறை செல்லும் தலைவர்கள் சிரித்துக் கொண்டே கையசைத்தபடி செல்வதால் மக்களிடம் மரியாதையை இழக்கும் நிலை ஏற்படுகிறது.
இது ஒருபுறமிருக்க, மத்தியில் ஆளும் கட்சியாக இருப்பவர்கள் மாற்றுக் கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர் களையும், அமைச்சர்களையும் ஏதாவது வழக்கில் ஜோடித்து சிறைக்கு அனுப்பி பதவியிலிருந்து நீக்கும் அதிகார துஷ்பிரயோகம் நடக்கவும் வாய்ப்புண்டு என்ற எதிர்க்கட்சிகளின் கவலையை புறந்தள்ளி விட முடியாது.
மாநில அரசைக் கலைக்க உருவாக்கப்பட்ட சட்டப்பிரிவு 356-ன் மறுவடிவமாக இந்த மசோதா மாறிவிட வாய்ப்புண்டு. மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள மசோதா ஒரு கூர்மையான கத்தி. கத்தி நல்ல நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அது யார் கையில் இருக்கிறது என்பது முக்கியம். மருத்துவர் கையில் இருந்தால் வேறு விதமாகவும், திருடர்கள் கையில் இருந்தால் வேறு விதமாகவும் பயன்பட வாய்ப்புண்டு.