சென்னை மாநகராட்சியில் பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும், மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் ரிப்பன் மாளிகை முன்பாக 13 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அவர்கள் இரவோடு இரவாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
தற்காலிக ஊழியர்களாக பணிபுரியும் தொழிலாளர்கள் தாங்கள் சார்ந்துள்ள துறையில் பணி நிரந்தரம் கேட்பது வாடிக்கையான ஒன்றுதான். அந்த வகையில் தூய்மைப் பணியாளர்களும் தங்களுக்கு பணி நிரந்தரம் கோருகின்றனர். அதன்மூலம், தனியார் துறையின் கட்டுப்பாட்டுக்கு செல்வதில் இருந்து பாதுகாக்கப்படுவோம், கூடுதல் சம்பளம் கிடைப்பதன் மூலம் வாழ்க்கைத் தரம் உயரும் என்று அவர்கள் நினைப்பதில் தவறில்லை. அவர்களது போராட்டத்துக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவிப்பதையும் குறை சொல்ல முடியாது.
ஆனால், தூய்மைப் பணியாளர்கள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘‘குப்பை அள்ளுகிறவர்களை பணி நிரந்தரம் செய்து, அந்த தொழிலையே நீங்கள் செய்து கொண்டிருங்கள் என்று சொல்வது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. சாக்கடையை சுத்தம் செய்கிறவர்களே, சாக்கடையை சுத்தம் செய்யட்டும் என்கிற கருத்துக்கு இது வலு சேர்ப்பதாகவும் இருக்கிறது’’ என்று அவர் குறிப்பிட்டுள்ளது தூய்மைப் பணியாளர்களிடம் இருந்து கடும் விமர்சனத்தைப் பெற்றுள்ளது.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாமக தலைவர் அன்புமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் திருமாவளவனுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
தூய்மைப் பணியாளர்களின் பணி நிரந்தரம் என்ற குறுகிய கோரிக்கையைத் தாண்டி, ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்தை கொள்கையாக கொண்டுள்ள கட்சி என்ற அகண்ட பார்வையிலேயே திருமாவளவன் அந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.
சில குறிப்பிட்ட பணிகளைச் செய்வோர், தாழ்த்தப்பட்ட மக்களாக மட்டுமே இருப்பதால், அந்தப் பணிகளில் இருந்து வெளியில் வருவதன்மூலம் மட்டுமே அவர்கள் ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்து மாறி, சமூக அந்தஸ்து பெற்று, முன்னேற்றம் அடைய முடியும் என்ற சித்தாந்த ரீதியான கருத்தையே அவர் பிரதிபலித்துள்ளார். அவரது பரந்த சிந்தனையில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. இந்தக் கருத்தை அவர் பல மேடைகளில் தொடர்ந்து தெரிவித்து வருவதால், அதே கொள்கையை தூய்மைப் பணியாளர்கள் விஷயத்திலும் பொருத்திப் பார்த்து தனது எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தாழ்த்தப்பட்டோர் மட்டுமே செய்யும் பணிகள் இவை என்று சமூகத்தால் பட்டியலிடப்பட்டவை அனைத்திலிருந்தும் அவர்கள் வெளியேறி, அதைத்தவிர வேறு பணிகளில் ஈடுபடும்போது, அவர்கள் மீதான சமூகப் பார்வை மாறி ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்ற ஆழமான கருத்தின் அடிப்படையில் வெளிவந்துள்ள வார்த்தைகளாகவே அவரது பேச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
நீண்டகாலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுத்து வரும் திருமாவளவனின் கருத்தின்மையப் பொருளை உணராமல் மேம்போக்காக புரிந்து கொண்டு அவரை விமர்சிப்பது நியாயமல்ல.