சிறப்புக் கட்டுரைகள்

சொத்து வரி வசூலை வெளிப்படையாக்கலாமே?

எம்எஸ்

மதுரையில் சொத்து வரி முறைகேடு தொடர்பாக மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்.வசந்த் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். திமுக-வினர் நடத்திய இந்த முறைகேட்டில் அதிமுக-வினர் சிலருக்கும் தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. மத்திய குற்றப்புலனாய்வுத் துறை தனிப்படை அமைத்து விசாரித்து வரும் இந்த வழக்கின் முடிவில் யார் குற்றவாளிகள் என்பதை நீதிமன்றம் முடிவு செய்யவுள்ளது. இருந்தாலும், சொத்து வரிமுறைகேட்டை பொறுத்தமட்டில், தமிழக மக்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. அனைத்து மாநகராட்சி, பேரூராட்சி மற்றும்நகராட்சிகளில் பரவலாக நடைபெற்று வரும் ஒன்று தான்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் கட்சி பேதமின்றி தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் சொத்து வரியை குறைவாக நிர்ணயிப்பது நீண்டகாலமாகவே வாடிக்கையாக நடந்து வருகிறது. லஞ்சம் கொடுக்காதவர்களின் வீடுகளுக்கு கூடுதலாக வரி விதிப்பதும் சாதாரணமாக தமிழகம் முழுக்க பார்க்கக்கூடிய காட்சியாகும்.

மதுரை மாநகராட்சியைப் பொறுத்தமட்டில், வேண்டப்பட்டவர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு சொத்து வரியை குறைத்துக் காட்டியதில், ரூ.150 கோடி வரை அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகம் முழுக்க இந்தவிவகாரத்தை தோண்டியெடுத்து விசாரித்தால் பல லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவரும். சொத்து வரி வசூலிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘யுடிஐஎஸ்’ செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்ப முயல்கின்றனர்.

உண்மையான காரணம் நீதிமன்ற விசாரணையில் தெளிவாகும் என்று நம்புவோம். பெரும்பாலும் பொதுமக்களுடன் தொடர்புடைய அரசு துறைகளிலேயே லஞ்சம் அதிக அளவில் புழங்குகிறது. இந்த தொடர்பை துண்டிக்கும் நோக்கத்திலேயே நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இணையவழி பண பரிவர்த்தனை, செயலி வழி பரிவர்த்தனை போன்றவற்றை அரசு அறிமுகம் செய்கிறது. ஆனால், அதிலும் ஓட்டைகளை கண்டறிந்து ஊழலில் ஈடுபடுவது, எத்தனை தொழில்நுட்பங்கள் வந்தாலும் அவர்களது மனநிலை மாறாத வரைபயனில்லை என்பதையே காட்டுகிறது.

தற்போது இணைய வழியாக விண்ணப்பித்துவிட்டு பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதிகாரிகளை நேரில் சந்திக்க வேண்டும் என்ற நடைமுறை பல இடங்களில் பின்பற்றப்படுகிறது. இதற்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைத்து நேரடி தொடர்பே இல்லாமல் அனைத்தும் இணைய வழியாகவே நடைபெற வேண்டும்.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள வீடு, கடை, வணிக வளாகங்களின் மொத்த சொத்து வரி விவரங்களையும் இணைய தளத்தில் பகிரங்கமாக வெளியிட வேண்டும். யாருடைய சொத்துக்கு எவ்வளவு சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது என்பதை பொதுமக்களே பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் வெளிப்படைத்தன்மையை உருவாக்கினால், தவறு செய்தால் தெரிந்துவிடும் என்ற அச்சத்தின் காரணமாக நேர்மையான முறையில், சொத்து வரி நிர்ணயம் இருக்கும். வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதன் மூலம் லஞ்ச ஊழல் நடைமுறையும் முடிவுக்கு வரும்.

SCROLL FOR NEXT