வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களை புகைப்படம் மற்றும் காணொலியாக பதிவு செய்து பாதுகாக்கும் பழக்கம் மாற்றம் அடைந்து, தற்போது அன்றாட நிகழ்ச்சிகளை குறிப்பாக, குளிர் பானம் குடிப்பதைக் கூட, ‘செல்ஃபி’ எடுத்து நண்பர்களுக்குப் பகிர்வது இளைஞர்களின் பழக்கமாக மாறியிருக்கிறது.
மகிழ்ச்சியான நிகழ்வுகளை ‘செல்ஃபி’ வடிவில் பதிவு செய்து ஓய்வு நேரங்களில் பார்த்து மகிழ்வதும் நண்பர்களுக்கு பகிர்வதும் தவறில்லை. ஆனால், ‘செல்ஃபி’ எடுக்கிறேன் என்ற பெயரில் ஆபத்தான தருணங்களைக் கூட தன்னிலை மறந்து பதிவு செய்யும் போக்கு தற்போது இளைஞர்களிடம் அதிகம் பரவிவிட்டது.
கர்நாடக மாநிலம் பந்திப்பூர் தேசியப் பூங்கா எல்லைக்குட்பட்ட கூடலூர் மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர், காட்டு யானையைக் கண்டதும் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கியிருக்கிறார். அந்த வழியாகச் சென்ற காய்கறி லாரியில் இருந்து எடுத்த காய்கறி களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த காட்டு யானை முன்பாக நின்று ‘செல்ஃபி’ எடுக்க முயன்றுள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் யானை அவரை துரத்தியிருக்கிறது. ஓடும்போது தடுமாறி சாலையில் விழுந்தவரை யானை மிதிக்க முயன்றபோது. யானையின் கால் அதிர்ஷ்டவசமாக வாலிபரின் இரண்டு தொடைகளுக்கு நடுவே நின்றதால் உயிர் தப்பியிருக்கிறார்.
இந்த காணொலி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு கடும் விமர்சனங்களைப் பெற்றது. கர்நாடக வனத்துறை அதிகாரிகள் அந்த வாலிபரை தேடிப்பிடித்து, உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
வனப்பகுதிக்குட்பட்ட சாலையில் வாகனத்தை நிறுத்தியது. வன உயிரினங்களை தொந்தரவு செய்தது ஆகிய குற்றங்களின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இனிமேல் இதுபோல் செய்ய மாட்டேன் என்று வருத்தம் தெரிவிக்கும் பதிவும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. வன உயிரினங்களை தொந்தரவு செய்யும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் கர்நாடக வனத்துறை எடுத்துள்ள இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது.
பொதுவாகவே, ‘செல்ஃபி’ மோகம் அதிகரித்து வருவதும், ஆபத்தான இடங்களில் சாகசங்களை பதிவுசெய்ய முயன்று உயிரிழக்கும் சம்பவங்கள் நடப்பதை பலரும் சுட்டிக் காட்டியும் இத்தகைய சம்பவங்கள் குறைந்தபாடில்லை. வாழ்க்கையின் மகிழ்ச்சியான நிகழ்வுகளை பதிவு செய்வதுடன் நிற்காமல், சாகசங்கள் புரிய முயற்சிக்கும்போதும், மற்றவர்களுக்கு தங்களது பராக்கிரமங்களை காணொலியாக எடுத்து பகிர வேண்டும் என்று முயற்சிக்கும்போதும் அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன.
கர்நாடக சம்பவத்தில் யானையின் கால்களுக்கு மத்தியில் சிக்கிய நிலையிலும், அந்த வாலிபர் உயிர் பிழைத்திருப்பது மிகப்பெரிய அதிர்ஷ்டம். இதுபோன்ற சம்பவங்களில் கடுமையான நடவடிக்கை மூலமே, மற்றவர்களுக்கு விழிப்புணர்வை எடுப்பதன் ஏற்படுத்த முடியும். வரவிருக்கும் ஆபத்தைக்கூட உணராத நிலையில் மெய்மறந்து ‘செல்ஃபி’ எடுக்கும் பழக்கத்தை இளைய சமூகம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
இதுகுறித்து பள்ளிகளில் பாடத்திட்டத்திலேயே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதன்மூலம், வருங்கால தலைமுறை காணொலிகளை பதிவு செய்வதற்கும், சாகசங்கள் செய்வதற்கும், விபரீதங்களை வரவழைப்பதற்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து எச்சரிக்கையுடன் செயல்பட உதவ முடியும்.