சிறப்புக் கட்டுரைகள்

கருத்துச் சுதந்திரத்துக்கு துணை நிற்க வேண்டும்!

எம்எஸ்

‘பரிதாபங்கள்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்திவரும் இளைஞர்கள் கோபி - சுதாகர் இருவரும் சமூகத்தில் நிலவிவரும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் அன்றாடம் மக்கள் சந்திக்கும் இன்னல்களை நகைச்சுவை காணொலியாக தயாரித்து, அந்தந்த பாத்திரங்களைப் போலவே நடித்து அதன்மூலம் சமூக கருத்துகளை நாசூக்காக தெரிவித்து வருகின்றனர்.

அவர்கள் வெளியிடும் ஒவ்வொரு காணொலியும் பல லட்சம் பார்வைகளைப் பெற்றுமக்கள் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக அமைந்து வருகிறது. மக்களை சிரிக்க வைப்பதுடன் சிந்திக்க வைக்கும் கருத்துகளையும் அவர்கள் தங்கள் காணொலியில் இழையோடச் செய்வதால், அதைப் பார்ப்பவர்கள் மத்தியில் சமூக மாற்றம் ஏற்பட வழிவகுத்து வருவது மிகுந்த பாராட்டுக்குரியதாகும்.

கோபி - சுதாகர் இருவரும் இணைந்து சமீபத்தில் வெளியிட்ட ‘சொசைட்டி பாவங்கள்’ என்ற காணொலி சாதிய ஆதிக்க மனோபாவத்தில் திரியும் சிலரை விமர்சித்து வெளியிடப்பட்டுள்ளது. சாதி ஆதிக்க மனோபாவம் கொண்ட இளைஞர்கள் தங்களுக்குள் சில அடையாளங்களை ஆடைகள் வாயிலாகவும், சில குறிப்பிட்ட பொருட்களை கைகளில் அணிவதன் வாயிலாகவும் மறைமுகமாக காட்டிக்கொண்டு, மற்றவர்களை அடக்க முயற்சிப்பதையும் அந்த காணொலி வாயிலாக உணர்த்தியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, வளரும் இளைஞர்களை, அதே சாதியைச் சேர்ந்த சில மூத்தவர்கள் எப்படி தவறாக வழிநடத்தி அவர்களது வாழ்க்கையை பாழாக்குகின்றனர் என்பதையும் உணர்த்தியுள்ளனர். அதுமட்டுமின்றி, அப்படி தவறாக வழிநடத்தப்படும் இளைஞர்கள் கடைசியில் என்ன கதிக்கு ஆளாகிறார்கள் என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

மிகவும் உணர்வுப்பூர்வமான சாதிப் பிரச்சினையை நாசூக்காக கையாண்டு தவறிழைப்பவர்களின் நெற்றியில் சுத்தியல்கொண்டு அடிப்பதைப் போல் உணர்த்தியுள்ள விதமும் பாராட்டுக்குரியது.

குறிப்பாக, நெல்லையில் கவின் செல்வகணேஷ் என்ற ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த 27 வயது இளைஞர் சாதியின் பெயரால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ள இந்த சூழலில், அவர்கள் வெளியிட்டுள்ள காணொலி பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

சாதியின் பெயரால் இளைஞர்கள் தவறான சிந்தனைகளை உருவாக்கிக்கொண்டு திரிவதை கண்டித்தும், இதுபோன்ற குற்றங்களை
தடுக்கும் நோக்கத்திலும், அத்தகைய குற்றங்களை தூண்டுபவர்களைக் கண்டிக்கும் வகையிலும் வெளிவந்துள்ள இந்த காணொலி பாராட்டப்பட வேண்டியதாகும்.

ஆனால், அதற்கு மாறாக, இந்த காணொலியை வெளியிட்டதற்காக கோபி – சுதாகர் இருவருக்கும் கொலை மிரட்டல் வருவதாக வெளிவரும் செய்திகள் வருத்தத்துக்கு உரியதாகும்.

நாட்டில் நடக்கும் அவலங்களையும், அநீதிகளையும் நகைச்சுவை வாயிலாக பொதுமக்களுக்கு உணர்த்தும் பணியைச் செய்துவரும் கோபி - சுதாகர் இருவரும் போற்றத்தக்கவர்கள். அவர்கள் தங்கள் கருத்துகளை வெளியிடுவதற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.

அவர்களது கருத்து சுதந்திரத்தில் தலையிடவோ, அதை சாதியின் பெயரால் முடக்க நினைப்பதோ முற்றிலும் கண்டிக்கத்தக்கது. அதை அரசு ஒருபோதும் அனுமதிக்க கூடாது. அவர்கள் இருவருக்கும் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கி மிரட்டல் விடுப்போரைகைது செய்து சிறையில் அடைப்பதன் மூலமே கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க முடியும்.

SCROLL FOR NEXT