பிஹாரில் இந்த ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் நடந்து வருகின்றன. இதில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுவிட்டதாக கூறி, அந்த மாநில அரசியல் கட்சிகள் எதிர்ப்புதெரிவித்து வருகின்றன. அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கு ஆளும் கட்சியினர் ஒருபுறமும், தேர்தல் ஆணையம் மறுபுறமும் பதில் தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையே, பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுடன் தமிழகத்தை இணைத்து வெளியிடப்படும் விமர்சனங்கள் தற்போது நாடு முழுக்க பேசப்படும் விஷயமாக மாறியிருக்கிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் தொடங்கி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அமைச்சர் துரைமுருகன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தவாக நிறுவனர் வேல்முருகன் உள்ளிட்டோரும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
பிஹாரில் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டவர்கள் தமிழகத்தில் வாக்காளர்களாக இணைக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டை அனைவரும் தெரிவித்துள்ளனர். பிஹார் வாக்காளர் பட்டியலுக்கும் தமிழகத்துக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி பொதுவாக அனைவரது மனதிலும் தோன்றும்.
ஆனால், மத்தியில் ஆளும் பாஜக திட்டமிட்டு தமிழகத்தில் தங்களுக்கு ஆதரவை உருவாக்க பிஹார் வாக்காளர்களை அங்கே நீக்கிவிட்டு, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்கிறது என்ற கோணத்தில் தலைவர்கள் அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிமுடிவெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்படுகிறது. இது அர்த்தமற்ற தவறான பிரச்சாரம் என்று தேர்தல்ஆணையம் மறுத்துள்ளது.
பிஹார் உள்ளிட்ட வெளிமாநிலத்தவர் 75 லட்சம் பேர் தமிழகத்தில் இருக்க வாய்ப்புண்டு. அவர்களை தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்த்தால், தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கையில் 10 சதவீதத்துக்கும் அதிகம் அவர்கள் இருப்பார்கள் என்ற கருத்தை வைகோ குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், அவர்களது வாக்குகளைப் பயன்படுத்தி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக முயற்சி செய்கிறது என்ற அச்சத்தையே தமிழக தலைவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.
பிஹார், ஒடிசா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் தமிழகம், ஆந்திரா,கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பணிபுரிந்து வருகின்றனர். வாழ்வாதாரம் தேடி வந்த இடத்தில் தமிழகத்தில் உள்ள நலத்திட்டங்களை அவர்கள் பயன்படுத்தும் நோக்கில், ஆதார், குடும்ப அட்டை போன்ற ஆவணங்களைப் பெற்றுரேஷனில் வழங்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்டவற்றை வாங்குகின்றனர். மருத்துவ சிகிச்சைகளையும் இலவசமாக பெறுகின்றனர். குழந்தைகளை தமிழக பள்ளிகளில் சேர்க்கின்றனர். பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்தை அனுபவிக்கின்றனர்.
இதுபோன்ற திட்டங்கள் பிடித்துப் போய் அவர்கள் இங்கேயே தங்க விரும்பி, வாக்காளர்களாகவும் மாற விரும்பினால், அதை யாராலும் தடுக்க முடியாது. இந்திய குடிமகன் நாட்டின் எந்தப் பகுதியிலும் குடியிருக்க, பணிபுரிய அரசியலமைப்புச் சட்டம் உரிமை வழங்குகிறது. ஆனால், இது திட்டமிட்டு நடப்பதாக குற்றம் சாட்டினால், அதை நிரூபிக்க வேண்டிய கடமை குற்றம் சாட்டுபவர்களுக்கே உண்டு.