சிறப்புக் கட்டுரைகள்

தனிமை என்னும் உலகளாவிய பிரச்சினை | சொல்... பொருள்... தெளிவு

இந்து குணசேகர்

தனிமை - இன்றைய காலக்கட்டத்தின் முக்கியச் சவாலாக மாறியுள்ளது. அண்மையில், மக்களிடம் தனிமை உணர்வு அதிகரித்துவருவது குறித்து உலகச் சுகாதார நிறுவனம் (WHO) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், 2014 முதல் 2023 வரையில் உலக அளவில் ஆறு பேரில் ஒருவர் தனிமையை உணர்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமை​யானது வயது, பாலினம், பொருளாதார நிலை என எவ்வித வேறுபாடும் இல்லாமல் அனைவரையும் பாதிக்கும் ஓர் உலகளாவிய பிரச்சினை என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்​காட்​டி​யிருக்​கிறது. மேலும், தனிமை உணர்வானது மனநலத்தில் மட்டுமல்​லாமல், உடல்நலத்​திலும் பாதிப்பை ஏற்படுத்தி மரணத்தை ஏற்படுத்துவதாக இவ்வறிக்கை எச்சரித்​துள்ளது.

அதிகம் பாதிக்​கப்​படு​பவர்கள்: தனிமை உணர்வுக்கும் - தனித்து வாழ்தலுக்கும் வித்தி​யாசம் உண்டு. ஒருவர் குடும்பத்தை விடுத்துத் தனியாக வாழ்கிறார்; பிறருடன் பேசுவதைத் தவிர்க்​கிறார் என்றால், அது அவரின் சுயதேர்​வாகப் பார்க்​கப்​படு​கிறது. ஒருவர் தனியாக வசித்தாலும் தனிமை உணர்வு இல்லாமல் இருக்​கலாம். ஆனால், தனிமை உணர்வானது குடும்பத்​துடன் இணைந்து வாழும் சூழலிலும் ஒருவருக்கு ஏற்படலாம் என உளவியல் நிபுணர்கள் தெரிவிக்​கின்​றனர்.

இந்தியச் சமூக அமைப்பில் தனிமை உணர்வால் அதிகம் பாதிக்​கப்​படு​பவர்களாக இளைஞர்​களும் - முதியோர்​களும் உள்ளனர். தனிமை உணர்வைப் பற்றி விவரிக்​கும், உலகச் சுகாதார நிறுவனத்தின் ‘தனிமையி​லிருந்து சமூகத் தொடர்​புக்கு’ (From loneliness to social connection) அறிக்கை​, தனிமையின் பிடியில் அதிகமாகப் பாதிக்​கப்​பட்​ட​வர்களாக இந்த இரண்டு பிரிவினரைக் குறிப்பிடுகிறது.

அதன்படி, இளைஞர்கள் - குறிப்பாக, குறைந்த வருமானம் உள்ள நாடுகளைச் சேர்ந்​தவர்கள் தனிமையால் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக உள்ளனர். 13 முதல் 29 வயது வரையிலான இளைஞர்​களில் 17-21% பேர் தனிமையை உணர்கின்​றனர். குறிப்பாக, பதின்ம வயதினரிடையே இது அதிகமாக உள்ளது. குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் 24% பேர் தனிமையை உணர்கின்​றனர். இது அதிக வருமானம் உள்ள நாடுகளில் (11%) உள்ள எண்ணிக்கை​யை விட இரண்டு மடங்கு அதிகம்.

2014 – 2019 கால இடைவெளி​யில், ஆண்டுக்குச் சுமார் 8,71,000 பேர் தனிமை உணர்வால் மரணமடைந்துள்ளனர்; அதாவது, மணிக்கு 100 பேர் வரை உயிரிழந்​திருக்​கிறார்கள். மாற்றுத்​திற​னாளிகள், அகதிகள், பால் புதுமை​யர், சிறுபான்​மை​யினர் தனிமை உணர்வால் அதிகம் பாதிக்​கப்​படு​வ​தாக​வும், இவர்களுக்குச் சமூகத்​துடன் இணைந்து வாழும் வாய்ப்பு குறைவாக இருப்​ப​தால், மனம் - உடல் நலப் பிரச்சினைகள் அதிகரிப்​ப​தாகவும் உலகச் சுகாதார நிறுவனத்தின் அறிக்கை குறிப்​பிடு​கிறது.

உடல் நலப் பாதிப்புகள்: தனிமனிதர்​களின் உடல் - மன நலமானது சமூகத்தின் ஆரோக்​கி​யத்தையும் உள்ளடக்கியே இருக்கிறது; சமூக இணைப்பு ஏற்படுத்து​வதற்கான வாய்ப்புகள் தற்போது அதிக அளவு இருந்த​போ​தி​லும், மக்கள் தங்களைத் தனிமையாக​வும், தனித்து விடப்​பட்​ட​வர்​களாகவும் உணர்வதாக அறிக்கையில் கூறப்​பட்​டுள்ளது. டிஜிட்டல் பிணைப்பு - சமூக ஊடகப் பயன்பாடு அதிகரித்து​வரும் சூழலிலும், மக்களிடம் சமூக இணைப்பு குறைந்து வருவதாக உலகச் சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் ஆதனோம் தெரிவிக்​கிறார்.

தனிமை உணர்வானது பதற்றம், மன அழுத்தம், தூக்கமின்மை, தற்கொலை உணர்வு போன்ற மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்து​வதுடன் உடல்நலத்தையும் கடுமை​யாகப் பாதிக்​கிறது. உலகச் சுகாதார நிறுவனத்தின் அறிக்கை​யின்படி, தனிமை உணர்வு உள்ளவர்​களுக்கு 50% டிமென்​ஷியா, 30% இதய நோய்களுக்கான ஆபத்து அதிகமாக உள்ளது. மேலும், இது புகை​பிடித்தல், உடல் பருமன், உடற்ப​யிற்சி இன்மை​யையும் அதிகரித்து, நாள்பட்ட நோய்களுக்கும் வழிவகுக்​கிறது.

தனிமை உணர்வின் தாக்க​மானது கல்வி, வேலைவாய்ப்​பிலும் தாக்கத்தை ஏற்படுத்து​கிறது. தனிமை உணர்வால் பாதிக்​கப்பட்ட 22% பதின்​பரு​வத்​தினர் குறைந்த மதிப்​பெண்​களைப் பெறுவ​தாக​வும், இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதில் சிரமத்தை எதிர்​கொள்​வ​தாகவும் தெரிய​வந்துள்ளது.

முன்னெடுப்புகள் தேவை: தனிமை உணர்வைப் போக்க, சமூக இணைப்பை வளர்க்கும் திட்டங்கள் முன்னெடுக்​கப்பட வேண்டும் என உலக நாடுகளிடம் உலகச் சுகாதார நிறுவனம் இந்த அறிக்கை மூலம் வலியுறுத்து​கிறது. உதாரணமாக, பிரிட்டன் - ஜப்பான் போன்ற நாடுகள் தனிமைக்கு எதிராகத் தேசிய அளவிலான கொள்கைகளைச் செயல்​படுத்தி வருகின்றன. பிரிட்​டனில் 2018ஆம் ஆண்டிலும், ஜப்பானில் 2021ஆம் ஆண்டிலும் மக்களிடம் நிலவும் தனிமை உணர்வை நீக்கும் வகையில் அமைச்​சர்கள் நியமிக்​கப்​பட்​டனர்.

டென்மார்க், பின்லாந்து, ஜெர்மனி, ஜப்பான், நெதர்​லாந்து, ஸ்வீடன், பிரிட்டன், அமெரிக்கா போன்ற எட்டு நாடுகள் சமூகத் தொடர்பு குறித்த தேசியக் கொள்கைகளை ஏற்றுக்​கொண்​டுள்ளன. இந்தத் தேசியக் கொள்கைகள், சமூக ஒற்றுமையை மேம்படுத்​த​வும், சமூகத் தனிமையைக் குறைக்​க​வும், தனிமையை நீக்கும் உத்தி​களுடன் கட்டமைக்​கப்​பட்டு ​உள்ளன. இவற்றின் மூலம் வலுவான மனித உறவுகளை வளர்க்​க​வும், பிணைக்​கப்பட்ட சமூகங்களை உருவாக்​கவும் இந்நாடுகள் முயன்​று​வரு​கின்றன.

தீர்வுகள்: தனிமை உணர்வைப் பொது சுகாதாரப் பிரச்சினையாக அறிவித்து, சமூகத் தொடர்பு முயற்சி​களைச் சுகாதார அமைப்பு​களுடன் ஒருங்​கிணைக்​கலாம். மக்கள் கூட்டமாக இயங்கும் வகையில் பூங்காக்கள், நூலகங்கள், நடைபாதைகளை உருவாக்​கலாம். பல்வேறு குழுக்களை (இளைஞர்கள், முதிய​வர்கள், புறக்​கணிக்​கப்பட்ட சமூகங்கள்) இலக்காகக் கொண்ட நடவடிக்கைகள், தன்னார்வத் திட்டங்கள், பண்பாட்டு நிகழ்வுகள் போன்ற சமூக ஈடுபாட்டுக்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

ஜப்பானில் முதிய​வர்​களிடம் நிலவும் தனிமையை நீக்க சிறியவர் முதல் பெரியவர் வரை பல்வேறு வயதினரை உள்ளடக்கிய சமூகத் திட்டங்களை அந்நாடு செயல்​படுத்தி வருவது குறிப்​பிடத்​தக்கது. தனிமை உணர்வு தீவிரமாக இருக்​கும்​பட்​சத்​தில், உளவியல் நிபுணரின் உதவியை நாடும் விழிப்பு​ உணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். தனிமை பற்றிய ஆராய்ச்சிகளுக்கு, சமூகத் தொடர்பில் உள்ள பிரச்சினை​களைத் தீர்ப்​ப​தற்கு அரசுகள் நிதி ஒதுக்க வேண்டும்.

டிஜிட்டல் தொழில்​நுட்பம், சமூக ஊடகங்கள், மின்னஞ்சல், காணொளி அழைப்புகள், பொழுது​போக்குச் செயலிகள் மூலம் உலகெங்​கிலும் உள்ள மக்களை இணைப்​ப​தற்குப் பெரும் வாய்ப்புகள் உருவாகி​யுள்ளன. இருப்​பினும், இந்தத் தொழில்​நுட்​பங்கள் மனித உறவுகளை மேம்படுத்து​வதற்குப் பதிலாகத் தனிமையை அதிகரித்து​வரு​கின்றன.

சமூக ஊடகங்​களில் அதிக நேரம் செலவிடுவது மேலோட்டமான தொடர்​பு​களையே உருவாக்கு​வ​தாக​வும், ஆழமான-நேரடி மனிதத் தொடர்​பு​களுக்கு இவை தடையாக இருப்​ப​தாகவும் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்​கின்றன. இவற்றைக் கவனத்தில் கொண்டு, தொழில்​நுட்ப வளர்ச்சி​யுடன் நேரடி சமூகத் தொடர்​புகளை அதிகரிப்பது ​காலத்தின் கட்​டாய​மாகி​யுள்ளது.

SCROLL FOR NEXT