சிறப்புக் கட்டுரைகள்

காட்டுப் பன்றிகளை கொல்வது நியாயமா?

எம்எஸ்

மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் காட்டு விலங்குகளின் தொல்லையை அடிக்கடி சந்தித்து வருவது வாடிக்கையாக உள்ளது. காட்டு விலங்குகள் பயிர்களை நாசம் செய்வதன் மூலம் பெரும் நஷ்டமடைவதையும் எடுத்துக்கூறி வனத்துறையிடமிருந்து நஷ்டஈடு கேட்கும் நிலையும் அதிகரித்தவண்ணம் உள்ளது.

சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் நடந்த குறைதீர் கூட்டத்திலும் விவசாயிகள் இந்தப் புகாரை தெரிவித்துள்ளனர். ‘‘காட்டுப் பன்றிகளால் பயிர்கள் நாசம் செய்யப்படுவதாகவும், காட்டுப் பன்றிகளை கொன்றாலோ, காடுகளுக்குள் துரத்தியடித்தாலோ விவசாயிகள் மீது வழக்குப் பதியாமல் இருந்தால் போதும். இப்பிரச்சினையை விவசாயிகளே பார்த்து கொள்வார்கள். அதிகாரிகள் தலையிடாமல் இருந்தால் போதும்’' என்றெல்லாம் கூறியுள்ளனர்.

வனவிலங்கு தொல்லைகளுக்கு முடிவுகட்டாவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக தென்காசியில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ‘‘விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காட்டுப் பன்றிகள் சுட்டுப் பிடிக்கப்படும்’’ என்று திருநெல்வேலியில் வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவித்துள்ளார். வன விலங்குகளின் இருப்பிடத்தை நாம் நெருங்கிச் செல்கிறோமா அல்லது வன விலங்குகள் நம்மை நெருங்கி வருகின்றனவா என்பது விவாதத்திற்குரியதாகும்.

வன விலங்குகளால் காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் விவசாயம் செய்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை மறுக்க முடியாது. அவர்களது இழப்பீட்டுக்கு அரசு சார்பில் நஷ்டஈடு வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. பயிர்களை நாசம் செய்து விடுகின்றன என்பதற்காக யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட மற்ற உயிரினங்களை மனிதர்கள் அழிக்க முயற்சிப்பது இயற்கைக்கு முரணான விஷயமாகும்.

அண்டை மாநிலமான கேரளாவும் காட்டுப் பன்றிகள் தொல்லையை சந்தித்து வருவதால், உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் பன்றிகளை சுட்டுக் கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான பன்றிகளை அவர்கள் சுட்டுக் கொன்று வருகின்றனர். அதேசமயம் விலங்குகளை கொல்வதற்கு எதிரான குரல் ஆங்காங்கே எழுந்தவண்ணம் உள்ளது. இந்த நடவடிக்கைகளை எதிர்த்து வழக்குகளும் தொடரப்படுகின்றன. விலங்குகளைக் கொல்லாமல் மாற்று வழிகளை ஆராயும் முயற்சிகளும் ஒருபுறம் நடைபெற்று வருகின்றன. கேரள மாநிலம் மூணாறு வனப்பகுதியில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் சோதனை முயற்சியாக 2 ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது.

மஞ்சள் பயிரிடப்பட்டுள்ள பகுதிகளில் யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன உயிரினங்கள் நடமாட்டத்தை தவிர்க்கின்றன என்ற உண்மை தெரியவந்துள்ளது. வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு கிடைப்பது ஒருபுறம் இருக்க, ஏக்கர் ஒன்றிலிருந்து 5 டன் மஞ்சள் கிடைப்பதன் மூலம் விவசாயிகளுக்கு வருவாயும் கிடைத்துள்ளது. இதையடுத்து சின்னார் வனச்சரணாலயம், இரவிகுளம் தேசியப் பூங்கா, ஆனைமுடி தேசியப் பூங்கா பகுதிகளில் 55.56 ஏக்கர் அளவுக்கு மஞ்சள் பயிரிட்டு வன விலங்குகளிடமிருந்து விவசாயப்பயிர்களைக் காக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. காட்டுயிர்களை கொல்வதற்கு மாற்றாக, இதுபோன்ற மாற்றுத் திட்டங்களை தமிழக அரசும் முன்னெடுத்து விவசாயிகளுக்கு வழிகாட்ட வேண்டும்.

SCROLL FOR NEXT