சிறப்புக் கட்டுரைகள்

கிட்னி திருட்டில் கடும் நடவடிக்கை தேவை

எம்எஸ்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு பகுதிகளில் ஏழ்மை நிலையில் உள்ள விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து கிட்னி திருட்டு நடைபெற்று வருவதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியளிக்கிறது. பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் அரசு மருத்துவரே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதன்பேரில், வழக்குப் பதிவு செய்து மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவது வரவேற்கத்தக்கது. உடல்உறுப்பு மாற்று சிகிச்சைக்கென தனிச்சட்டம் இயற்றப்பட்டு, அதற்குரிய விதிகளைப் பின்பற்றியே உடல் உறுப்புகளைப் பெற முடியும். ஆனால், இடைத்தரகர்கள் ஏழை மக்களின் வறுமையைப் பயன்படுத்தி அவர்களுக்கு பணத்தாசை காட்டி அவர்களது உடல் உறுப்பைத் திருடுவது என்பது நாகரீக சமூகத்தில் சகித்துக் கொள்ள முடியாதது.

அதுவும் விசைத்தறி தொழிலாளர்களைக் குறிவைத்து இயங்கும் இடைத்தரகர்கள் கிட்னிக்கு ரூ.3 லட்சம் வரை தருவதாக பேரம் பேசி, ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி அப்பாவி மக்களை கோவை, சேலம், திருச்சி, கரூர், பெரம்பலூர் மற்றும் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பிரபல மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று கிட்னியை திருடியிருக்கின்றனர்.

அப்படி திருடப்படும் கிட்னி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு 50 லட்சம் ரூபாய் வரை விற்கப்பட்டுள்ள தகவல் மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது. இதைப் பார்க்கும்போது எங்கோ ஒரு இடத்தில் நடந்த தனித்த நிகழ்வாக தெரியவில்லை. திட்டமிட்டு பெரிய வலைப்பின்னல் இதன் பின்னணியில் இயங்கி வருவதையே நடந்துள்ள சம்பவங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் இந்த சம்பவம் குறித்து தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். ‘‘சட்டத்தை மீறி கிட்னி திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தமிழக சுகாதாரத்துறை மா.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு மட்டும் இச்சம்பவத்தை தடுத்து நிறுத்த போதுமானதாக இல்லை. காவல்துறை விசாரிக்கச் சென்றபோது கிட்னி திருட்டில் ஈடுபட்டதாக கூறப்பட்ட இடைத்தரகர் தலைமறைவாகி இருக்கிறார்.

கிட்னியை திருடுவதற்கு மருத்துவமனைகளை பயன்படுத்தியுள்ளனர். மருத்துவர்களின் உதவியின்றி கிட்னியை எடுக்க முடியாது. மீண்டும் அந்த கிட்னியை வெவ்வேறு மாநிலங்களுக்கு விற்பனை செய்வதற்கும் அங்கு மீண்டும் வேறு நபருக்கு பொருத்துவதற்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் உதவி தேவை.

இது தமிழகத்துடன் மட்டும் தொடர்புடைய பிரச்சினை அல்ல. பல மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் சட்டத்தை மீறி கிட்னி திருட்டில் ஈடுபட்டிருப்பதால் மத்திய அரசு உதவியுடன் நாடு முழுக்க செயல்படும் வலைப்பின்னலை கண்டறிந்து அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர தமிழக அரசு முயற்சிகள் எடுக்க வேண்டும்.

இந்த வலைப்பின்னலையே ஒட்டுமொத்தமாக அழித்தால் மட்டுமே ஏழை மக்களை இதுபோன்ற கிட்னி திருடர்களிடமிருந்து காப்பாற்ற முடியும்.

SCROLL FOR NEXT