சிறப்புக் கட்டுரைகள்

வரலாறு கண்டிராத விநோத வழக்கு..!

எம்எஸ்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று கூடவுள்ள நிலையில், அங்கு விவாதிக்கப்படவுள்ள முக்கியமான பல பிரச்சினைகளில் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான பதவி நீக்கம் கோரும் தீர்மானமும் கொண்டு வரப்பட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. கடந்த மார்ச் மாதம் டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் பணக் கட்டுகள் எரிந்த நிலையில் எடுக்கப்பட்ட விவகாரம் நாட்டையே உலுக்கியது.

உடனடியாக அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதுடன் நீதித்துறை பணிகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். மூன்று நீதிபதிகள் அடங்கிய உள் விசாரணைக்குழு முதற்கட்ட விசாரணை நடத்தி அளித்த அறிக்கையின் அடிப்படையில், அவரை பதவிநீக்கம் செய்யும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பரிந்துரை அளித்துவிட்டார். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இதில் விநோதம் என்னவென்றால் உச்ச நீதிமன்ற உள் விசாரணையை எதிர்த்தும், தலைமை நீதிபதி அனுப்பிய பரிந்துரையை எதிர்த்தும் நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்றத்திலேயே வழக்கு தொடர்ந்துள்ளார். தங்களுக்கு எதிரான வழக்கை தாங்களே விசாரிப்பது என்பது இந்தியவரலாற்றில் உச்ச நீதிமன்றம் இதுவரை காணாத ஒன்றாகும்.

இதற்கிடையே, நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது டில்லி காவல்துறையும், அமலாக்கப் பிரிவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து முறையாக குற்றவியல் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கையும் உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

சர்ச்சைக்குரிய நீதிபதி ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது விருப்ப ஓய்வில் செல்ல வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டபிறகும், அவர் அதை ஏற்காததால் வேறு வழியின்றி பதவிநீக்க பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்திருப்பதால் உச்ச நீதிமன்றமே இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது நீதித்துறை வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாக மாறியிருக்கிறது.

நீதிபதி பதவிநீக்க தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றுவது சாதாரணமான நிகழ்வல்ல. ‘Special Majority’ எனப்படும் மொத்த உறுப்பினர்களின் பெரும்பான்மை மற்றும் தீர்மானத்தின்மீது பங்கெடுக்கும் உறுப்பினர்களின் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை ஆதரவளித்தால் மட்டுமே தீர்மானம் நிறைவேறும். அதன்பிறகு குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டால் மட்டுமே பதவி பறிபோகும்.

நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக நீதிபதிக்கு எதிராக இத்தகைய தீர்மானம் கொண்டு வரப்பட்டது, தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி ராமசாமி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது நடந்தது. அந்த தீர்மானம் பெரும்பான்மை ஆதரவு இல்லாமல் நிறைவேற்றப்படவில்லை. இதுபோன்ற தர்மசங்கடமான சூழ்நிலைகளை நீதித்துறையும், நாடாளுமன்றமும் சந்திக்காமல் இருக்க வேண்டுமென்றால் நீதிபதிகள் நியமனத்தில் கூடுதல் அக்கறை காட்டுவது மட்டும் போதாது!

நீதித்துறை மேலும் தெளிவான கண்காணிப்பு வழிமுறைகளை உண்டாக்குவதோடு, சீரான இடைவெளிகளில் அந்த கண்காணிப்பை உறுதி செய்வதும் முக்கியம்! மக்களின் இறுதி நம்பிக்கையாக உள்ள நீதித்துறை ஒருபோதும் அந்த மக்கள் நம்பிக்கையை இழப்பதற்கு இடம் கொடுத்து விடவே கூடாது!

SCROLL FOR NEXT