கேரளாவைச் சேர்ந்த சுனிதா என்ற 37 வயதுப் பெண் தன்னை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று அறிவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள செய்தி அதிமுக-வினர் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
‘‘எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் நான் பிறந்தேன். சூழ்நிலை காரணமாக கேரளாவில் ரகசியமாக வாழ வேண்டியதாகி விட்டது. அவ்வப்போது போயஸ் தோட்டத்திற்கு வந்து ஜெயலலிதாவைச் சந்தித்திருக்கிறேன். டிஎன்ஏ பரிசோதனைக்கும் தயார்’’ என்றெல்லாம் அவர் மனுவில் கூறியிருப்பது நம்பகத்தன்மைக்கு உரியதாக இல்லை. இருந்தாலும் வழக்கு என்று வந்துவிட்டால் நீதிமன்றங்கள் உரிய ஆவணங்களைப் பரிசீலித்து, வாத பிரதிவாதங்களைக் கேட்ட பிறகே தீர்ப்பளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.
இதற்கு பதில் சொல்வதற்கு எம்ஜிஆர், ஜெயலலிதா இருவருமே இப்போது உயிருடன் இல்லை. மறைந்த பிரபலங்களை தொடர்புபடுத்தி ஒரு சர்ச்சை வரும்போது அதற்கு யார் பதிலளிப்பது என்ற கேள்விக்கு நீதிமன்றங்கள்தான் பதிலளிக்க வேண்டும்.
கடந்த 2018-ம் ஆண்டு, இதேபோன்று பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற 38 வயதான பெண் தன்னை ஜெயலலிதாவின் மகள் என்று கூறிக் கொண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மறைந்த ஜெயலலிதாவுக்கு வைணவ சம்பிரதாயப்படி இறுதிச் சடங்கு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், ஜெயலலிதாவின் வாரிசாகதன்னை அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டு மனு தாக்கல்செய்தார்.
டிஎன்ஏ சோதனை நடத்தவும் கோரிக்கை வைத்தார். அப்போது வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசுவழக்கறிஞர்கள் ஆஜராகி, அம்ருதா பிறந்ததாக சொல்லப்படும் 1980-ம் ஆண்டு ஜெயலலிதா பிலிம்பேர் விருது விழா ஒன்றில் பங்கேற்ற புகைப்படத்தை ஆதாரமாக தாக்கல் செய்து, அப்போது அவர் கர்ப்பிணியாக இருந்ததற்கு ஆதாரமில்லை என்று வாதிட்டனர். பின்னர் உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. அதேபெண் உச்சநீதிமன்றம் சென்றபோது அங்கும் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
அரசியல் தூண்டுதலுடனும் இறந்தவர்களை இழிவுபடுத்தும் நோக்கத்துடனும், சொத்துகளை அபகரிக்கும் எண்ணத்துடனும் தொடரப்படும் இதுபோன்ற வழக்குகளின் பின்புலத்தில் இருப்பவர்கள் சட்டத்தின் தண்டனைக்கு ஆளாகாமல் தப்பிவிடுவது வருத்தத்திற்குரியது.
மறைந்த தலைவர்கள் உயிருடன் இருக்கும்போது, யாராவது இத்தகைய குற்றச்சாட்டை சுமத்தினால், அவர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்து சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத் தருவதற்கும், நஷ்ட ஈடாக பெரும் தொகையை வசூலிக்கவும் சட்டத்தில் இடமுண்டு.
ஆனால், அதே தலைவர்களின் மரணத்திற்குப் பின் இதுபோன்று இழிவுபடுத்தும் செயல்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் ஓட்டைகளில் இருந்து தப்பி விடுகின்றனர். இதற்கு இடமளித்தால் புகழுடன் வாழ்ந்து மறைந்த எந்த தலைவரைப் பற்றி வேண்டுமானாலும் அவதூறு பிறப்பிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்தது போல் ஆகிவிடும்.
மறைந்த தலைவர்களின் சார்பாக யார் வேண்டுமானாலும் மான நஷ்ட வழக்கு தொடர்ந்து அவதூறு பரப்புவோருக்கு தண்டனை பெற்றுத் தர முடியும் என்றிருந்தால் மட்டுமே இதுபோன்ற அத்துமீறிய செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.