தமிழ்த் திரையுலகில் வளர்ந்துவரும் இளம் நடிகரான கலையரசன் ‘மெட்ராஸ், மதயானைக் கூட்டம், வாழை’ போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர். அவர் தொலைக்காட்சி ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டியளித்தபோது, “தமிழக திரைத்துறையில் சாதி இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால், சாதி பாகுபாடு மிக மோசமாக உள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இருப்பதால் எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன. சிலர் என்னை நடிக்க அழைப்பதற்கு யோசிக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளது திரையுலக வட்டாரத்தில் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
சாதி பாகுபாடு திரைத் துறை மட்டுமின்றி, அனைத்து துறைகளிலும் இருப்பது உண்மையே. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இருந்தாலும், திரைத் துறையில் சமீபகாலமாக சாதி பாகுபாடு எல்லை கடந்து சென்று கொண்டிருப்பதையே வெளிவரும் படங்கள் உணர்த்துகின்றன. அதை உறுதிப்படுத்தும் வகையிலேயே நடிகர் கலையரசனின் கருத்தும் அமைந்துள்ளது.
தமிழகத்தில் பிறந்துள்ள ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சாதி பின்னணியில் தான் பிறந்திருப்பார்கள். அதை வெளிக்காட்டும் போது தான் சர்ச்சை உருவாகிறது. ஒரு திரைப்படத்தில் நடிகர் சூர்யா பேசும் வசனத்தில், “எல்லோருக்கும் ஒரு சாதி பின்னணி இருக்கும். அதை நல்லவர்கள் யாரும் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள்” என்று சொல்வார்.
அதைப்போல நல்லவர்கள் யாரும் இன்றைக்கும் தங்கள் சாதி பின்புலத்தைப் பற்றி உயர்வாகவோ, தாழ்வாகவோ காட்டிக் கொள்வதில்லை. எல்லா மனிதர்களையும் சமமாகவே கருதுகின்றனர். ஆனால், ஒரு சிலர் ஒரு குறிப்பிட்ட சாதியை சுட்டிக் காட்டி, உயர்த்தியோ, தாழ்த்தியோ திரைப்படங்களை உருவாக்கும் போது சர்ச்சைக்குரியதாக மாறிவிடுகிறது.
குறிப்பிட்ட ஒரு சாதி மற்றொரு சாதியால் ஒடுக்கப்படுவதாகவும், ஒடுக்குதலை உடைத்தெறிந்து கிளர்ந்தெழுவதாகவும் திரைப்படங்களில் காட்டும்போது, நேரடியாகவோ குறியீடுகளின் வழியாகவோ மற்ற சாதிகளை புண்படுத்தும் போக்கு கூடவே கூடாது.
அதுபோலவே, குறிப்பிட்ட ஒரு சாதிக்கு ஆதரவாக கிட்டத்தட்ட ஒரு அரசியல் கட்சியைப் போல ரசிகர்களை ஒருங்கிணைப்பதும் தேவையற்ற சர்ச்சைகளில் கொண்டு போய் விடுகிறது. இதனால் தான் திரைப்படங்களை வெளியிடும்போது சாதியை மையப்படுத்தி ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் விவாதங்கள் நடப்பதும், அதில் அறுவெறுக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்தி சாதிச் சண்டையாக கூட முடிகிறது.
எந்த சாதிக்கும் ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ குரல் கொடுக்க நினைப்பவர்கள் அதை ஆவணப்படமாக எடுக்கிற போது பிரச்சினை வருவதில்லை. எல்லோரும் பார்த்து ரசிக்கக்கூடிய திரைப்படமாக எடுக்கும்போது இதுபோன்ற சிக்கல்கள் எழத்தான் செய்கின்றன. அதுவும்போக, திரை விழாக்களிலும் சாதி தொடர்பாக பேசி திரைக் கலைஞர்கள் தங்களை வேறு விதமாக அடையாளம் காட்டிக் கொள்வதும் காரணமாகி விடுகிறது.
அனைத்து மக்களுக்குமான பொதுவான ஊடகமாகவே திரைத்துறை நீடிக்க வேண்டும். கலைக்கு சாதி இல்லை என்ற புரிதல் படைப்பவர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒருசேர வரும்போது தான் அங்கே உண்மையான கலை தழைக்கும்.