தற்போது 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள பொருட்களை 5 சதவீத பட்டியலுக்கு மாற்றுவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக வெளிவரும் தகவல்கள் நடுத்தர மக்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
நடுத்தர மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் நெய், வெண்ணெய், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், உறையிடப்பட்ட இளநீர், குடை, பழச்சாறு, ஜாம், அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், சோதனை செய்ய பயன்படுத்தப்படும் சிறிய மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் 12 சதவீத வரிவிதிப்பு பட்டியலில் வருகின்றன. இவை அனைத்தும் சாதாரண மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் என்பதால் இத்தகைய பொருட்களின் வரிவிகிதத்தை 12 சதவீத பட்டியலில் இருந்து 5 சதவீத பட்டியலுக்கு மாற்றியமைப்பது நடுத்தர மக்களின் சுமையை வெகுவாக குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அடுத்து நடக்கவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கடந்த கூட்டம் 2024-ம் ஆண்டு டிசம்பரில் ஜெய்சால்மரில் நடந்தது. ஆறு மாதங்களை கடந்துவிட்டதால் இந்த மாதம் கூட்டம் நடைபெறும் என்றும் அதில் புதிய முடிவு எடுக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இதுவரை வசூலான தொகையில் அதிகபட்சமாக கடந்த ஏப்ரலில் 2.36 லட்சம் கோடி கிடைத்துள்ளது. அதற்கடுத்த மே மாதம் 2.01 லட்சம் கோடி கிடைத்த நிலையில், ஜூன் மாதத்தில் 1.85 லட்சம் கோடியாக ஜிஎஸ்டி வருவாய் குறைந்துள்ளது.
ஜிஎஸ்டி வருவாயை அள்ளித்தரும் மாநிலங்களான மகாராஷ்டிரா (6 சதவீதம்), கர்நாடகா ( 8 சதவீதம்), தமிழ்நாடு (4 சதவீதம்) என இந்த மாதம் வரிவசூல் ஒற்றை இலக்கத்துக்கு குறைந்துவிட்டதே மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து மத்திய அரசை சிந்திக்க வைத்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நடுத்தர மக்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்திற்கு வருமான வரி செலுத்திவிட்டு, மீதமுள்ள சொற்பதொகையை அத்தியாவசிய பொருட்களை வாங்க பயன்படுத்துகின்றனர். அந்த தொகையை செலவழிக்கும் இடத்திலும் ஜிஎஸ்டி என்ற பெயரில் வரியாக வசூலிக்கப்படும்போது சிரமத்தை சந்திக்கின்றனர். மக்களின் சுமையைக் குறைக்க மத்திய அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.
அதுமட்டுமின்றி, தலைக்கு தேய்க்கப்படும் எண்ணெய், பற்பசை, சோப்பு, ஐஸ்கிரீம் ஆகியவற்றிற்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படுவதும் நியாயமற்றது. இவற்றை யும் குறைந்த வரி பட்டியலுக்கு மாற்றி நடுத்தர மக்களை விடுவிக்க வேண்டும்.
ஜிஎஸ்டி வரி விதிப்பில் 12 சதவீத பட்டியலையே நீக்கிவிட்டு, 5 , 18, 28 சதவீதம் என மூன்று பட்டியலை மட்டும் வைத்துக் கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இந்த மாற்றத்தால் மத்திய அரசுக்கு ரூ.3,000 முதல் ரூ.4,000 கோடி வரை வரி இழப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த வரி இழப்பை வேறு ஏதாவது வகையில் மத்திய அரசு சரிக்கட்டி நடுத்தர மக்களின் சுமையைக் குறைப்பது அவசியம்.