சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த இளைஞர் அஜித்குமார் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழக மக்களின் மனசாட்சியை உலுக்கிய சம்பவமாக அமைந்துள்ளது.
நகை திருட்டு புகார் வந்தால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, குற்றம் சாட்டப்படுபவர்களை அழைத்து விசாரித்து உண்மையை கண்டறிய முயற்சி செய்வதுதான் காவலர்களின் பணி. அந்த விசாரணைக்கும் எல்லை உண்டு. ஆனால், முதல் தகவல் அறிக்கைகூட பதிவு செய்யாமல், விசாரணை எல்லைகள் அனைத்தையும் மீறி, உயிர் போகும் அளவுக்கு அடித்து துன்புறுத்தும் செயல் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அத்தகைய கொடுஞ்செயலை அரங்கேற்றி, தமிழக காவல் துறையினர் தங்கள் பெயருக்கு இழுக்கை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.
புகார் கொடுப்பவர்களின் செல்வாக்கு. புகாருக்கு ஆளானவர்களின் எளிய பின்புலம் ஆகியவற்றை வைத்து, அதற்கேற்ப சட்டத்துக்கு அப்பாற்பட்டு வலியவர்களை குளிர்விக்கவும், எளியவர்களை நசுக்கவும் காவலர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்திருப்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது. சட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள தாங்கள் எந்த அளவுக்கு எல்லை மீறுகிறோம் என்பதையே உணராத நிலைக்கு அவர்கள் சென்றுவிட்டது வருத்தத்துக்குரியது.
இச்சம்பவத்தில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சிகள் அனைவரும் அரசின்மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருவது இயற்கையானதே. ஒருவர் குற்றவாளி என்று நீதிமன்றத்தில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகும் வரை, அவர் நிரபராதி என்ற கோணத்தில்தான் விசாரணை இருக்க வேண்டும் என்பது நமது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை. அந்த அணுகுமுறையை தாண்டி காவலர்கள் அரக்கர்களாக மாறும்போது பொதுமக்களின் கோபத்துக்கு ஆளாகின்றனர்.
இந்த விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே அரசின் நடவடிக்கை நியாயமானதாகவே அமைந்துள்ளது. சிவகங்கை மாவட்ட எஸ்.பி. காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார், டிஎஸ்பி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அத்துமீறலில் ஈடுபட்ட காவலர்கள் அனைவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதுதவிர, வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதுடன், சிபிஐ-க்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அமைச்சர் பெரியகருப்பன் வாயிலாக நேரடியாக முதல்வர் ஸ்டாலினே தொடர்பு கொண்டு பேசி, சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்ததுடன், வீட்டுமனை பட்டா மற்றும் அஜித்குமாரின் தம்பிக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். திமுக சார்பிலும் ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.
தவறு இழைத்த காவலர்களை தாங்கிப் பிடித்தாலோ, உண்மைகளை மறைக்க முயன்றாலோ அரசின் மீது குறை சொல்லலாம். தவறை ஒப்புக்கொண்டு பரிகாரம் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசின் மீது குறை சொல்வதில் நியாயமில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ‘‘எந்த ஆட்சி நடந்தாலும் காவல் துறையினரின் அணுகுமுறை இதுதான்’’ என்று கூறியிருப்பது காவல் துறையினர் சிந்தித்துப் பார்க்க வேண்டிய கருத்தாகும். நாகரிக சமூகத்துக்கேற்ப மாற வேண்டியது காவல் துறையே!