சிவகாசி அருகே சின்னக்காமன்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று வெடித்து சிதறியதில் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் 8 பேர் உயிரிழந்துள்ளதும், மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் வருத்தமளிக்கும் செய்தியாகும்.
பட்டாசு ஆலைகளில் அடிக்கடி இதுபோன்ற வெடிவிபத்து சம்பவங்கள் நடந்ததால், அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்களை மத்திய, மாநில அரசுகளும், நீதிமன்ற தீர்ப்புகளும் பரிந்துரைத்துள்ளன. இவை எல்லாவற்றையும் மீறி பட்டாசு ஆலைகளில் தீவிபத்து நடப்பதும், தொழிலாளர்கள் உயிரிழப்பதும் தொடர்கதையாக இருந்து வருவது அனைவரையும் ஏமாற்றமடையச் செய்கிறது. இதுபோன்ற விபத்து சம்பவங்கள் நடந்தவுடன் உயிரிழந்தோர் குடும்பத்திற்கும், காயமடைந்தவர்களுக்கும் நிவாரணம் அறிவிப்பதுடன் அரசு தன் கடமையை முடித்துக் கொள்வது நல்லதல்ல.
சிவகாசியில் 8,000-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகளில் 8 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும்,மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பங்குவகிக்கும் இந்த பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு அம்சங்கள் மீது நாம் அக்கறை செலுத்தாமல் இருப்பது பொறுப்பற்ற செயலாகவே அமையும். வெடி பொருட்களை சேகரித்து வைப்பது, கையாளுதல், தொழிலாளர்களுக்கானபாதுகாப்பு கவச உடைகள், ரசாயனப் பொருட்களை கையாளுதல், தீயணைப்பு சாதனங்கள், அவசரகால அணுகுமுறை என ஒவ்வொரு விஷயத்திலும் ஏராளமான கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தையும் பூர்த்தி செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே பட்டாசுதயாரிக்க அனுமதி வழங்கப்படுகிறது. இந்த பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் அவ்வப்போது நேரில் சென்று சரிபார்க்க வேண்டும் என்ற விதிமுறையும் வகுக்கப்பட்டுள்ளது. விதிமீறல் இருப்பது தெரிந்தால், உடனடியாக அபராதம் விதிப்பதற்கும், பட்டாசு ஆலையை மூட உத்தரவிடவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வளவு கட்டுப்பாடுகளையும் மீறி தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் விபத்து நடக்கிறதென்றால், எங்கு தவறு நடக்கிறது என்று கண்காணிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும்,உயர் அதிகாரிகளுக்கும் உண்டு. கடந்த ஆண்டு சிவகாசியில் இதேபோன்று நடந்த பட்டாசு விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். அப்போது தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவின்பேரில்,மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளைக் கொண்டகுழு பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தியதில் ஏராளமான விதிமீறல்கள் இருப்பதைக் கண்டறிந்து அறிக்கை அளித்தது.
ஆனால், அதன்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றவிவரங்கள் வெளியிடப்படவில்லை. நாட்டின் வளர்ச்சிக்குபங்களிக்கும் பட்டாசு ஆலைகளின் மூலம் கிடைக்கும் பலனைமட்டும் அனுபவிப்பதோடு நின்றுவிடாமல், அந்த ஆலைகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை உருவாக்குதற்கு தேவையான உதவிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம், அந்த ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு மட்டுமின்றி, பொதுமக்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்; பட்டாசு தொழில் மேலும் பாதுகாப்பான முறையில் வளர்ச்சியடைந்து உயிரிழப்புகள் ஏதுமின்றி நாட்டின் வளர்ச்சிக்கும் உதவும்.