ஆண்டுக்கு இரண்டு முறை 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ அறிவித்திருப்பது புதிய மாற்றமாக வந்துள்ளது. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு இதுவரை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தேர்வெழுதும் நடைமுறை இருந்து வந்தது. தோல்வியடையும் மாணவர்களுக்கு மட்டுமே ஓரிரு மாதங்களில் இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது பிப்ரவரி மற்றும் மே மாதம் என இரண்டு முறை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்த சிபிஎஸ்இ ஒப்புதல் அளித்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கை-2020 அமல்படுத்தப்பட்டதன் தொடர்ச்சியாக, மாணவர்களுக்கு உள்ள தேர்வு பயத்தைக் குறைக்கும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப் போவதாக வரைவு அறிக்கையை கடந்த பிப்ரவரி மாதம் சிபிஎஸ்இ வெளியிட்டு இருந்தது. பெற்றோர் மற்றும் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்ட பின்பு இத்திட்டத்தை வரும் 2026 கல்வியாண்டு முதல் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த புதிய மாற்றத்தின்படி முதல் முறை நடக்கும் தேர்வு மட்டுமே கட்டாயம் என்றும், இரண்டாவது முறை நடைபெறும் தேர்வில் மாணவர்கள் விரும்பினால் பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கணிதம், அறிவியல், சமூக அறிவியல், மொழிப்பாடம் இதில் ஏதாவது 3 பாடங்களில் மதிப்பெண்ணை உயர்த்திக் கொள்ள இரண்டாவது நடைபெறும் தேர்வில் பங்கேற்கலாம். அதிக மதிப்பெண் எடுக்கும் தேர்வு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு அவை சான்றிதழில் இடம்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் 10-ம் வகுப்பை முடித்துவிட்டு 12-ம் வகுப்பில் சேரும்போது அவர்கள் குறிப்பிட்ட பாடங்களில் எடுத்த மதிப்பெண் அடிப்படையிலேயே, 12-ம் வகுப்பில் பாடப்பிரிவுகள் ஒதுக்கப்படுகின்றன. ஒரு சில பாடங்களில் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் கூடுதல் மதிப்பெண் எடுக்க முடியாத நிலையில், தாங்கள் விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர முடியாத நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டுவிடும். அத்தகைய மாணவர்களுக்கு இதுபோன்ற இரண்டாவது வாய்ப்பு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
அதேநேரம், நீட், ஜேஇஇ உள்ளிட்ட திரும்பிய பக்கமெல்லாம் போட்டித் தேர்வுகள் உள்ள நிலையில் தேர்வுகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு மாற்றாக அதிகரிப்பது மாணவர்களுக்கு சுமையாக அமைந்து விடாதா? என்ற கேள்வியையும் தவிர்க்க முடியாது. மே மாதம் நடைபெறும் இரண்டாவது தேர்வு கட்டாயமில்லை, மாணவர்கள் விரும்பினால் அந்த தேர்வை எழுதி தங்கள் மதிப்பெண்ணை உயர்த்திக் கொள்ளலாம் என்பது ஆறுதலளிக்கும் விஷயம்.
ஆனால், பத்தாம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் இளம் பருவத்தில் உள்ள மாணவர்களுக்கு தங்களுடன் படிக்கும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் இருந்து வரும் நெருக்கடிகள் ஏராளம். மற்றவர்களின் மதிப்பெண்களுடன் ஒப்பிட்டு, கூடுதல் மதிப்பெண் எடுக்க வேண்டி அழுத்தம் வருவது நிச்சயம். தற்போது இரண்டாவது முறை தேர்வு நடைபெறுவதால் மாணவர்களின் விருப்பத்திற்கு மாறாக, அவர்களை கட்டாயப்படுத்தி மதிப்பெண்ணை அதிகமாக்க தேர்வெழுத வைக்க வாய்ப்புண்டு. அதுபோன்ற நெருக்கடிகள் வளரிளம் மாணவர்களுக்கு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வதும் அவசியம்.