கட்டணங்களை உயர்த்தப் போவதாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு நாடு முழுவதும் உள்ள 3 கோடிக்கும் அதிகமான ரயில் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளின் டிக்கெட்டுகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசா வீதமும், குளிர்சாதன வசதியற்ற மற்றும் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட்களுக்கு 1 பைசா வீதமும் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை 1 முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புறநகர் ரயில் டிக்கெட்கள் மற்றும் மாதாந்திர பயண அட்டை பெறுவோருக்கு கட்டண உயர்வு இல்லை என்று அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. நகர்ப்புறங்களில் புறநகர் ரயில்களில் அலுவலகம் மற்றும் வேறு பணிகளுக்காக சென்று வருவோர் எண்ணிக்கை அதிகம். சாதாரண மக்கள் பயணிக்கும் இந்த ரயில்களில் பயணம் செய்வதற்கு மிகவும் சொற்பமான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அந்த கட்டணத்திலும் உயர்வு இல்லை என்ற அறிவிப்பு ஏழை, எளிய மக்களின் மீது சுமையை ஏற்றக் கூடாது என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகவே தெரிகிறது.
இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கான கட்டணத்தில் மாற்றம் எதுவும் இல்லை என்று அறிவிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. இருந்தாலும் நெடுந்தூரம், அதாவது 500 கிலோ மீட்டருக்கு அதிகமான பயணத்துக்கான டிக்கெட்களில் கிலோ மீட்டருக்கு 0.5 பைசா என்ற அளவில் உயர்வு அறிவித்திருப்பது மிகவும் சொற்பமானதே. சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் பயணி 700 கிலோ மீட்டர் தொலைவுக்கு 35 ரூபாய் மட்டுமே கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும். தனியார் பேருந்துகளில் பண்டிகை நாட்களில் ரூ.3,000 முதல் ரூ.7,000 வரை கட்டணக் கொள்ளை நடைபெறும் சூழலில், ரயில்வே நிர்வாகம் உயர்த்தியுள்ள கட்டண விகிதம் நியாயமானதே.
தத்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் ஆதார் விவரங்களை வழங்குவது கட்டாயம் என்ற நடைமுறையும் வரும் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. டிக்கெட் முன்பதிவில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க இந்த கட்டுப்பாடு கொண்டு வருவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது மட்டுமின்றி, ஜூலை 15-ம் தேதி முதல் ஆதார் அடிப்படையில் ‘ஓடிபி’ எண்ணைப் பெற்று, அதை பதிவு செய்தால் மட்டுமே டிக்கெட் எடுக்க முடியும் என்ற கூடுதல் கட்டுப்பாடும் அமலாகவுள்ளது.
தத்கல் டிக்கெட்கள் 5 நிமிடங்களுக்குள் காலியாகிவிடும் நிலை இருக்கும்போது, ‘ஓடிபி’ எண்ணைப் பெற்று அதை பதிவிடுவது காலதாமதத்தை ஏற்படுத்தி நடைமுறைச் சிக்கலுக்கு வழிவகுக்கும். புதிய நடைமுறை அமலுக்கு வந்ததும் அதிலுள்ள சிக்கல்களைக் கேட்டறிந்து மாற்றங்களைச் செய்வது அவசியம்.
பயணிகள் நலன்கருதி ரயில்வே நிர்வாகம் கொண்டு வரும் மாற்றங்கள் நியாயமானதாக இருந்தாலும், பெருகிவரும் மக்கள்தொகையின் தேவைக்கேற்ப ரயில் போக்குவரத்து இல்லை என்ற குறை நீடிக்கவே செய்கிறது. இரண்டு வழித்தடங்கள் இருக்கும் இடங்களில் நான்கு வழித்தடங்கள் அமைத்தால் மட்டுமே அதிகரித்துவரும் தேவையை சமாளிக்க முடியும்.