தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் மதுரைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தபோது, அவர் கண்ணில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக பந்தல்குடி கழிவுநீர் கால்வாயை அதிகாரிகள் அலங்காரத் துணி கொண்டு மறைத்திருந்த சம்பவம் அப்போதே விமர்சனத்துக்கு உள்ளானது. அதேபோன்று, சென்னை சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் துணை முதல்வர் உதயநிதி கலந்துகொள்ள சென்றபோது, ஒருபுறம் பக்கிங்காம் கால்வாய் இருப்பதையும், மறுபுறம் குடிசைகள் இருப்பதையும் மறைக்கும் வகையில் அலங்காரத் திரை அமைக்கப்பட்டுள்ளது.
சுத்தம், சுகாதாரமற்ற நிலையில் ஓடிக் கொண்டிருக்கும் கால்வாயும், ஏழை, எளிய மக்கள் வசிக்கும் குடிசைப் பகுதியும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் கண்களில் பட்டுவிடக் கூடாது என்று திரையிட்டு மறைப்பது என்ன நியாயம்?
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் முதல்முறை பதவி வகித்தபோது, அகமதாபாத்தில் 2020-ல் ‘ஹவுடி ட்ரம்ப்’ என்ற நிகழ்ச்சி நடந்தது. அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் பிரதமர் மற்றும் அமெரிக்க அதிபரின் கண்களில் அங்குள்ள குடிசைப்பகுதிகள் பட்டுவிடக் கூடாது என்பதற்காக வழியெங்கும் இருந்தஅகமதாபாத் குடிசைப் பகுதிகளை 7 அடிக்கு சுவர் அமைத்துவண்ணம் தீட்டி மறைத்திருந்தனர்.
அதேபோன்று, 2023-ல் புதுடெல்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடந்தபோது, அங்குள்ள ஏழைகள் வசிக்கும் குடிசைகள் உலகத் தலைவர்களின் கண்களில் படக்கூடாது என்பதற்காக பச்சை நிற திரைச்சீலைகள் கொண்டு வழிநெடுக மறைக்கப்பட்டன. சீன அதிபர் மாமல்லபுரம் வந்தபோதும் இதே செயல் நடந்தது. இச்சம்பவங்களை அப்போது விமர்சிக்காத எதிர்க்கட்சிகளே இல்லை என்று சொல்லலாம். அதேபோன்ற ஒரு நிகழ்வு தான் தற்போது தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியிலும், துணை முதல்வர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியிலும் நடந்திருக்கிறது.
மக்களின் வறுமை, ஏழ்மை மற்றும் சிரமங்கள் பிரதமர், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் பார்வையில் படும்போதுதான் அவர்களின் துயரங்களை போக்க திட்டங்களைத் தீட்ட முடியும். அதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு விடியல் பிறக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் கண்களில் அந்த மக்களின் துயரங்கள் படக்கூடாது என்ற எண்ணமே ஜனநாயக நாட்டில் தவறான அணுகுமுறை மட்டுமின்றி, மக்களாட்சி தத்துவத்துக்கே எதிரானது.
சென்னையில் உள்ள கூவம், பக்கிங்காம் கால்வாய்களை சுத்தப்படுத்த ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்படுகிறது. அந்த நிதி எங்கே போகிறது என்பது விடைகாண முடியாத கேள்வி. குடிசைப் பகுதிகளை அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றுவதற்கு உருவாக்கப்பட்டுள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் திட்டங்களை அதிகப்படுத்தி, கூடுதல் நிதி ஒதுக்கி குடிசைகளில் வசிப்பவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும், சுகாதாரமற்ற நீர்வழித்தடங்களை சுத்தமாக்க திட்டங்கள் வகுத்து,கண்டிப்புடன் செயல்படுத்துவதும் மட்டுமே இப்பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்க முடியுமே தவிர, அலங்காரத் திரை கொண்டு மறைத்தல் எந்த வகையிலும் தீர்வாகாது.