சிறப்புக் கட்டுரைகள்

அதிகரிக்கும் சிறார் குற்றச்செயல்கள் | சொல்... பொருள்... தெளிவு

இந்து குணசேகர்

கடந்த மார்ச் மாதம் வெளிவந்த ‘அடலசன்ஸ்’ (Adolescence) என்கிற பிரிட்டிஷ் ஒடிடி குறுந்தொடர் பரவலான கவனத்தை ஈர்த்தது. 13 வயதான ஜேமி என்கிற சிறுவன், தனது வகுப்புத் தோழியைக் கொலை செய்துவிடும் கதையை இத்தொடர் விவரிக்கிறது. பிரிட்டனில் மட்டுமல்லாமல் உலகளவில் நிகழும் சிறார்களின் குற்றச்செயல்கள் குறித்த விவாதத்தை ஏற்படுத்திய தொடர் இது.

வன்முறைக் குற்றத்தில் சிறார் ஈடுபடுவதற்கான சிக்கலான உளவியல் - சமூகக் காரணங்களை இத்தொடர் ஆராய முற்பட்டதை ஆய்வாளர்கள் பலரும் வரவேற்றனர். காரணம், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில ஆண்டு​களாகச் சிறார்​களின் குற்றச்​செயல்கள் அதிகரித்து வருவதாகத் தரவுகள் எச்சரிக்​கின்றன. இந்தக் குற்றச்​செயல்​களில் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் ஆகியவையும் அடங்கும்.

உலகளவில்... 2016 - 2022 காலக்​கட்​டத்தில் பிரிட்​டனில் குற்றச்​செயல்​களுக்​காகக் கைதுசெய்யப்பட்ட சிறாரின் எண்ணிக்கை 50.56%இலிருந்து 57.27%ஆக அதிகரித்​துள்ளது. அதே கால இடைவெளியில் அமெரிக்​காவில் 27.8 % - 32.6% ஆகவும், கனடாவில், 32.57% - 42.38% ஆகவும், இந்தியாவில் 32.57% - 44.92% ஆகவும் இந்த எண்ணிக்கை அதிகரித்​துள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், இந்திய மக்கள்​தொகையில் சுமார் 33% சிறார் (18 வயதுக்கு உட்பட்​ட​வர்கள்) உள்ளனர்.

இதில் 6-7% பேர் குற்றச்​செயல்​களில் ஈடுபட்​டுள்ள​தாக​வும், ஈடுபட்​டோரில் 80% பேர் சிறுவர்கள், 20% பேர் சிறுமிகள் எனவும் தெரிய​வந்தது. குறிப்பாக, போதைப் பொருள் பயன்பாடு காரணமாகத் தமிழ்நாடு போன்ற தென்னிந்திய மாநிலங்​களில் குற்றச்​செயல்​களில் சிறார் ஈடுபடுவது அதிகரித்​துள்ளதாக அந்த ஆய்வு சுட்டிக்​காட்​டியது.

இந்தியாவில்: இந்தியாவில் 2016-2022 காலக்​கட்​டத்தில் குற்றச்​செயல்​களுக்​காகக் கைது செய்யப்பட்ட சிறார்​களின் எண்ணிக்கை படிப்​படியாக அதிகரித்​துள்ளது. அந்த வகையில் 2016இல், வன்முறைக் குற்றச்​செயல்​களுக்​காகக் கைது செய்யப்பட்ட சிறார்​களின் எண்ணிக்கை 32.5%. 2022இல் இந்த எண்ணிக்கை 49.5% ஆக அதிகரித்​துள்ளது.

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத் தரவின்படி, 2017 - 2022 காலக்​கட்​டத்​தில், இந்தியாவில் பதின்​பரு​வத்​தினரால் நடந்த வன்முறைக் குற்றங்​களில் 20% மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ந்தவை. அடுத்​தடுத்த இடங்களில் மகாராஷ்டிரம் (18%), ராஜஸ்தான் (9.6%), சத்தீஸ்கர் (8.4%), டெல்லி (6.8%), தமிழ்நாடு (5.85%) ஆகியவை உள்ளன. டெல்லி பரப்பளவில் சிறிய பகுதியாக இருந்​தா​லும், அங்கு நடைபெறும் குற்றச் செயல்கள் முறையாகப் பதிவுசெய்​யப்​படு​வதால் இப்பட்​டியலில் இடம்பெற்றுள்ளது.

தமிழ்​நாட்​டில்... தமிழ்​நாட்டில் சிறார் குற்ற வழக்குகள் அதிகரித்​துள்ளன. 2021இல் பதிவான வழக்கு​களுடன் (2,212) ஒப்பிடும்​போது, 2022இல் கூடுதல் எண்ணிக்கையில் (2,607) வழக்குகள் பதிவாகி​யுள்ளன; தமிழகத்​தில், 16.4% இளம் வயதினர் குற்றச்​செயல்​களில் ஈடுபடு​கின்​றனர். சிறார் குற்றங்​களில், தென்னிந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தேசியக் குற்ற ஆவணக் காப்பகத் தரவுகளின்படி, 2022இல் தமிழகத்தில் கீழ்க்கண்ட குற்றப்​பிரிவு​களின்கீழ் சிறார்கள் மீது வழக்குகள் பதிவுசெய்​யப்​பட்டுள்ளன.

அவற்றின் விவரம்: திருட்டு - 548 வழக்குகள், தாக்குதல் - 425 வழக்குகள், வேகமாக வாகனம் ஓட்டுதல் - 208 வழக்குகள், கொலை - 102 வழக்குகள், கொலை முயற்சி - 101 வழக்குகள். பெருநகரங்களை எடுத்​துக்​கொண்​டால், 2022இல் டெல்லிக்கு அடுத்​த​படியாக, சென்னையில் அதிகபட்​ச​மாகச் சிறார் குற்றங்கள் பதிவாகி​யுள்ளன. சென்னையில் 2021இல் பதிவான குற்றச் சம்பவங்கள் 496. இந்த எண்ணிக்கை 2022இல் 521ஆக அதிகரித்​துள்ளது.

காரணங்கள்: பெற்றோர் - குழந்தை​களுக்கு இடையே ஏற்படும் இடைவெளி, குடும்பப் பிரச்சினைகள், போதை - மது போன்ற தீய பழக்கவழக்​கங்​களுக்கு அடிமை​யாதல், கல்வியி​லிருந்து இடைநிற்றல், வறுமை, இணைய​தளங்​களின் தாக்கம், வன்முறையைக் கொண்டாடும் மனநிலை போன்றவை சிறார் குற்றச்​செயல்​களில் ஈடுபட முக்கியக் காரணங்களாக அமைவதாக உளவியல் மருத்​துவர்கள் தெரிவிக்​கின்​றனர். இதன் பொருட்டே பதின்​பருவச் சிறார்​களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்​கு​மாறும் மருத்​துவர்கள் வலியுறுத்து​கின்​றனர்.

மாற்றத்​துக்கு உள்ளான சட்டங்கள்: ஐ.நா. அவை 1959இல் குழந்தை​களுக்கான உரிமைகள் பிரகடனத்தைக் கொண்டு​வந்தது. இதில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கையெழுத்​திட்டன. இச்சட்​டத்​தின்படி, சிறார்கள் குற்றம் இழைத்​திருந்​தா​லும், அவர்களைச் சிறையில் அடைக்க முடியாது. மாறாக, அவர்களுக்குப் பாதுகாப்பு, பராமரிப்பு, பயிற்சி, கல்வி, மறுவாழ்வு ஆகியவற்றை வழங்க இச்சட்டம் வலியுறுத்து​கிறது.

டெல்லி நிர்பயா கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்யப்​பட்டது அனைவரிடத்​திலும் அதிருப்தியை ஏற்படுத்​தியது. இதைத் தொடர்ந்து கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற கடும் குற்றச்​செயல்​களில் ஈடுபடும் சிறார்​களுக்குக் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனத் தொடர்ந்து குரல் எழுப்​பப்​பட்டது.

இதன் அடிப்​படை​யில், சிறாருக்கான நீதிச் சட்டம் இந்தியாவில் மாற்றத்​துக்கு உள்ளானது. சிறார் நீதிச் சட்டம் (குழந்தை பராமரிப்பு - பாதுகாப்புச் சட்டம்) 2015இல் அறிமுகப்​படுத்​தப்​பட்டது. இச்சட்டம் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற கொடிய குற்றங்​களில் ஈடுபடுபவர் 16 வயதுக்கு மேற்பட்​டவராக இருந்​தால், அவர் 18 வயதை நிறைவு செய்தவர் எனக் கருதி, அவரை விசாரணைக்கு உட்படுத்த அனுமதிக்​கிறது. சிறார் நீதி வாரியம் குற்றம் சாட்டப்​பட்டவரை ஆய்வு செய்து இதுகுறித்து முடிவெடுக்​கும்.

மேலும், சிறார் நீதிச் சட்டத்தில் குற்றச்​செயல்​களில் ஈடுபடும் சிறாருக்கு, நல்லொழுக்​கங்​களைக் கற்பித்து, உளவியல்​ரீ​தியாக ஆரோக்​கியமான மாற்றத்தைத் தரும் நோக்கத்​துக்​காகவே கூர்நோக்கு இல்லங்கள் ஏற்படுத்​தப்​பட்டன. ஆனால், கூர்நோக்கு இல்லங்​களில் ​இருந்து விடுதலை​யாகும் சிறார்கள் மீண்டும் குற்றச் செயல்​களில் கைது செய்யப்​படும் அவலநிலை தொடர்​வ​தாக​வும், சில சிறார்கள் கூர்நோக்கு இல்லங்​களி​ல் இருந்து தப்பிச் செல்லும் நிகழ்வுகள் தொடர்​வ​தாகவும் சமூகச் செயல்​பாட்​டாளர்கள் தெரிவிக்​கின்​றனர்.

பதின்​பரு​வத்தை எதிர்​கொள்ளல்: குழந்தை வளர்ப்பில் பதின்​பருவம் சிக்கலான ஒரு காலக்​கட்டம் என்பதால், குழந்தை​களின் நடவடிக்கைகளைப் பெற்றோர் உன்னிப்​பாகக் கண்காணிப்பது அவசியம். குழந்தை​களுடன் தொடர்ந்து உரையாடி, அவர்களின் உணர்வு​களைப் புரிந்து​கொள்ளப் பெற்றோர் முயல வேண்டும். சிறார்​களுக்கு விளையாட்டு, இசை, ஓவியம் போன்ற ஆக்கபூர்வமான செயல்​களில் ஈடுபட வாய்ப்​பளிக்க வேண்டும். மேலும் நண்பர்கள், சமூகம் மூலம் அளிக்​கப்​படும் இணைநிலை​யினரின் அழுத்​தத்தை (Peer Pressure) எதிர்​கொள்ளும் மனநிலையை வளர்க்க ஊக்கு​விக்க வேண்டும்.

பள்ளிகள் மனநல ஆலோசகர்களை நியமித்துப் பதின்​பருவக் காலத்தில் மாணவர்கள் எதிர்​கொள்ளும் மன அழுத்தம், பதற்றத்தைக் கையாள உதவலாம். சிறார் நீதிச் சட்டத்தைத் திறம்பட அமல்படுத்துவது, கூர்நோக்கு இல்லங்​களில் மறுவாழ்வுத் திட்டங்களை மேம்படுத்துவது போன்ற நடவடிக்கை​களில் அரசு இறங்க வேண்டும்.

SCROLL FOR NEXT