சிறப்புக் கட்டுரைகள்

கர்நாடகா Vs ஆந்திரா - மாம்பழ சண்டை..!

எம்எஸ்

கர்நாடகாவில் விளையும் மாம்பழங்களை ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதற்கு ஆந்திரா தடை விதித்திருப்பது புதிய சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் விளையும் தோத்தாபுரி மாம்பழங்கள், கடந்த ஆண்டு டன் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வரை விலைபோனது.

இந்த ஆண்டு விலை சரிந்து ரூ.12 ஆயிரமாக குறைந்தது. கிலோ ரூ.5 என்ற அளவில் விற்பனையானதால் ஆந்திர விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினர். அதை சமாளிக்க ஆந்திர மாநில அரசு தோத்தாபுரி மாம்பழத்தின் விலையை கிலோ ஒன்றுக்கு ரூ.8 என நிர்ணயித்து, ரூ.4 மானியமும் வழங்கியதால் ஆந்திர விவசாயிகளுக்கு ரூ.12 கிடைத்துள்ளது. இந்தநிலையில், கர்நாடக மாம்பழங்களின் வருகை ஆந்திர மாநில மாம்பழ விவசாயிகளை பாதிப்படைய செய்துள்ளதால், அவர்களைக் காப்பாற்ற கர்நாடக மாம்பழங்களுக்கு சித்தூர் மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக காரணம் கூறப்பட்டுள்ளது.

இந்த தடையால் கர்நாடக மாம்பழ விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறி கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதி, தடையை நீக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார். கர்நாடக தலைமைச் செயலரும் ஆந்திர தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால்,ஆந்திராவில் இந்த ஆண்டு 5.5 டன் மாம்பழங்கள் விளைச்சல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் விலை கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர் என்றும், தடையை நீக்கி கர்நாடக மாம்பழங்களை அனுமதித்தால் இன்னும் விலை குறையும் என்பதால் தடையை நீக்க முடியாது என்றும் ஆந்திர மாநில அரசு அறிவித்துவிட்டது.

உள்ளூர் விவசாயிகளின் நலன்காக்க கர்நாடக மாம்பழங்களுக்கு ஆந்திர அரசு தடை விதித்தது நியாயமாக தென்பட்டாலும், இந்தியாவை பொறுத்தமட்டில் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு சென்று வியாபாரம் செய்யும் உரிமை விவசாயிகள் உள்ளிட்ட அனைவருக்கும் உண்டு. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில் இதுவும் ஒன்று.

அந்த வகையில் ஆந்திர மாநில அரசு விதித்துள்ள தடையால் கர்நாடக மாநில மாம்பழ விவசாயிகளின் அடிப்படைஉரிமை பாதிக்கப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை. விலை குறைவாக எங்கு கிடைக்கிறதோ அங்கு பொருளை வாங்கி, தேவைப்படும் இடத்தில் சற்று கூடுதலாக விற்பனை செய்து லாபம் ஈட்டுவதுதான் வர்த்தகத்தின் அடிப்படை கோட்பாடாகும். ஆனால், விவசாயிகளின் நலன் காக்கிறேன் என்ற பெயரில் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு விற்பனைக்கு வரும் பொருளை தடை செய்வது நாட்டின் ஒற்றுமைக்கே ஊறு விளைவிக்கும் செயலாக அமைந்துவிடும்.

இதற்கு போட்டியாக கர்நாடகமும் வேறு ஒரு பொருளுக்கு தடை விதிக்க ஆரம்பித்தால், அதுவே இருமாநில வர்த்தகப் போராக மாறிவிடும். வெவ்வேறு நாடுகளிடையே நடைபெறும் வர்த்தகப் போர் போன்று, ஒரே நாட்டில் மாநில அளவில் நடைபெற அனுமதிப்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. இந்த விஷயத்தில் மத்திய அரசு மவுனம் காக்காமல் உடனடியாக தலையிட்டு சமரச தீர்வை ஏற்படுத்துவது அவசியம்.

SCROLL FOR NEXT