ஆந்திரத்தைச் சேர்ந்த 9 வயதுப் பழங்குடிச் சிறுவன், அவனது பெற்றோர் வாங்கிய ரூ.15,000 முன்பணத்துக்காக வாத்து மேய்க்கக் கொத்தடிமைத் தொழிலாளியாக வேலைசெய்ய அழைத்துச்செல்லப்பட்டு, அங்கே சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2030க்குள் இந்தியாவில் கொத்தடிமை முறையை ஒழிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், கொத்தடிமை முறையைத் தடுப்பதிலும், அத்தொழிலாளர்களை மீட்பதிலும் நிலவும் சுணக்கம் காரணமாக இலக்கை எட்ட முடியாத சூழல் உருவாகி உள்ளது.
கொத்தடிமை முறை: ஒருவர் கொடுத்த கடனுக்காகக் கடன் வாங்கியவரையோ, அவரின் குடும்ப உறுப்பினர்களையோ, அவரைச் சார்ந்திருப்போரையோ பணியாளர்களாக, குறிப்பிட்ட காலத்துக்கு அல்லது கால வரையறை இல்லாமல்; குறைந்த ஊதியத்துக்கு அல்லது ஊதியமே அளிக்காமல் வேலையில் அமர்த்தி அடிமைகள்போல் நடத்துவது கொத்தடிமை முறை எனப்படுகிறது. நவீனக் கால அடிமை முறையாகக் கருதப்படும் கொத்தடிமை முறையில் பெரும்பாலான தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினரைக்கூடத் தொடர்புகொள்ள முடியாத சூழல் உள்ளது.
விவசாயம், கால்நடை மேய்த்தல், செங்கல் சூளைகள், கட்டிடப் பணி, வீட்டுப் பணி, பாலியல் தொழில் போன்றவற்றில் கொத்தடிமைத் தொழிலாளர் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்தியாவில் கொத்தடிமை முறையை ஒழிக்க, 1976இல் கொத்தடிமைத் தொழிலாளர் முறை (ஒழிப்பு) சட்டம் இயற்றப்பட்டது. எனினும், 50 வருடங்கள் கடந்தும் கொத்தடிமை முறை நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்வது சட்ட அமைப்பில் நிலவும் தோல்வியைச் சுட்டிக்காட்டுகிறது.
அமைப்புசாராத் தொழிலாளர்கள்: பிப்ரவரி 2025இல் மத்திய அரசு வெளியிட்ட தரவுகளின்படி, 1978 முதல் இந்தியாவில் 2,97,038 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்; இதற்காக ரூ.106.3 கோடி செலவிடப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அமைப்புசாராத் தொழிலாளர்கள். இவர்கள், தங்களுக்கு எனத் தொழிற்சங்கம் இல்லாமல் உரிமைகளை இழந்து, சுரண்டல்களை எதிர்கொள்கின்றனர்.
தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் (The National Sample Survey Organization of India) அறிக்கையின்
படி, 39 கோடி பேர் அமைப்புசாராத் துறைகளில் பணிபுரிகின்றனர் எனத் தெரிய வந்துள்ளது. சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு 2024இல், இந்திய வேலைவாய்ப்பு குறித்து அறிக்கை வெளியிட்டது. அதில் அமைப்புசாராத் துறையில் தரம் குறைந்த (குறைந்த ஊதியம், பாதுகாப்பற்ற சூழல்) வேலைகளே அதிகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலங்கள் நிலவரம்: இந்தியாவில் இதுவரை விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களில் ஏறக்குறைய 84% பேர் கர்நாடகம், தமிழ்நாடு, ஒடிஷா, உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளனர். மத்தியத் தொழிலாளர் - வேலைவாய்ப்பு அமைச்சகம் 2018இல் வெளியிட்ட தரவின்படி, நாட்டில் மறுவாழ்வு பெற்ற 3.13 லட்சம் கொத்தடிமைத் தொழிலாளர்களில், அதிகபட்சமாக கர்நாடகத்தில் 66,281 பேரும், தமிழ்நாட்டில் 65,673 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 42,279 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.
காலநிலை மாற்றம், சாதியப் பாகுபாடு, வறுமை காரணமாகச் சொந்த மாநிலங்களைவிட்டுப் பிற மாநிலங்களுக்குக் கொத்தடிமைத் தொழிலாளர்களாக நகரும் நிலைக்குப் பலரும் தள்ளப்பட்டுள்ளதாகச் சமூகச் செயல்பாட்டாளர்கள் கருதுகின்றனர். பட்டியல் சாதி மக்கள், பழங்குடி மக்கள் கொத்தடிமைத் தொழிலில் அதிகம் ஈடுபடுத்தப்படுவதாகவும், கொத்தடிமை முறையை அடையாளம் காண, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் போதிய பயிற்சி இல்லாததால் தொழிலாளர்களை மீட்பதில் தாமதம் நீடிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இலக்கை எட்டவில்லை: 2016இல் அப்போதைய மத்தியத் தொழிலாளர் - வேலைவாய்ப்புத் துறை அமைச்சரான பண்டாரு தத்தாத்ரேயா, கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு முறையின் ஒரு பகுதியாக 2030ஆம் ஆண்டுக்குள் 1.84 கோடி கொத்தடிமைத் தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டு, மறுவாழ்வு அளிக்கப்படுவர் எனத் தெரிவித்தார். 2021இல், மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் முகமது ஜாவேத் கேள்வி எழுப்பினார். இதற்கு, 2016 - 2021க்கு இடைப்பட்ட காலத்தில் 12,760 தொழிலாளர் கள் மீட்கப்பட்டதாக மத்திய அரசு பதிலளித்தது.
இதன்மூலம், ஏறக்குறைய 1.83 கோடி பேர் இன்னும் கொத்தடிமைத் தொழிலில் சிக்கித் தவிப்பது தெரியவந்துள்ளது. மத்திய அரசு மிகத் தீவிரமாக மீட்பு நடவடிக்கையில் இறங்கினால் மட்டுமே, நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் இந்த அவலத்தை முழுமையாக அகற்ற முடியும். கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்பதிலும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதிலும் இந்தியா நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியுள்ளதைக் கள நிலவரம் உணர்த்துகிறது.
நிவாரணத்தில் தாமதம்: 2022இல், கொத்தடிமை முறையிலிருந்து மீட்கப்படும் தொழிலாளிக்கு ரூ.30,000 உடனடியாக வழங்கும் வகையில் அரசின் மறுவாழ்வுத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. இதன்படி, மீட்கப்படும் ஆண்களுக்கு ரூ.1 லட்சம், பெண்கள், குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம், திருநர்கள் - பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு ரூ.3 லட்சம் மொத்த நிவாரணமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனுடன் வீடு, விவசாய நிலம், குறைந்த விலையில் குடியிருப்புகள் வழங்கப்பட வேண்டும் எனச் சட்டம் சொல்கிறது. எனினும் மீட்கப்படும் தொழிலாளர்களுக்கு விடுவிப்புச் சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் தாமதம் செய்வதால், தொழிலாளர்கள் பலரும் தங்கள் நிவாரணங்களைப் பெறக் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்பது மட்டுமல்லாமல், அத்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், இனி வரும் காலத்தில் மத்திய/மாநில அரசுகள் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், வறுமையின் காரணமாக மீண்டும் கொத்தடிமை முறையில் அத்தொழிலாளர்கள் சிக்கிக்கொள்ளும் அவலநிலை ஏற்படக்கூடும். கொத்தடிமைத் தொழிலாளர் நடைமுறைகளைத் துரிதமாக அடையாளம் கண்டு, அவற்றைத் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் தொடர் ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம் கொத்தடிமை முறையை வரும் காலத்தில் குறைக்க முடியும்.