சிறப்புக் கட்டுரைகள்

ரிசர்வ் வங்கி அறிவிப்பு தான் வெளியாகுது... வட்டி குறையலையே..!

எம்எஸ்

ரிசர்வ் வங்கி மூன்றாவது முறையாக ‘ரெப்போ ரேட்’ வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. ‘ரெப்போ ரேட்’ என்பது ரிசர்வ் வங்கி இதர வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமாகும். இந்த வட்டி குறைந்தால் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வட்டியும் குறையும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு.

ஐந்து ஆண்டுகளாக 6.50 சதவீதம் என்ற அளவில் இருந்த ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் கடந்த பிப்ரவரியில் 0.25 சதவீதமும், ஏப்ரலில் 0.25 சதவீதமும் குறைக்கப்பட்டது. தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் 0.5 சதவீதம் வட்டியைக் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த வட்டி விகிதத்தைக் குறைப்பதன் மூலம், வங்கிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். அதன்மூலம் வாடிக்கையாளர்களிடம் அவர்கள் வசூலிக்கும் வட்டியும் குறையும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பு.

இந்த அறிவிப்பு மூலம் வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும்; மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும்; நுகர்வு அதிகரித்து பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் என்றெல்லாம் பொருளாதார அறிஞர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், உண்மையில் என்ன நடக்கிறது என்பதை ரிசர்வ் வங்கி முறையாக கண்காணிக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏற்கெனவே இரண்டு முறை வட்டி குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டும் பெரும்பாலான வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் வட்டியைக் குறைக்கவில்லை. தற்போது மூன்றாவது முறையாக வட்டி குறைந்துள்ள போதும், வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் வட்டியை வங்கிகள் குறைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைத்தால், வங்கிகள் அதற்கேற்ப வட்டியைக் குறைக்க வேண்டிய கட்டாயமில்லை என்றும், வங்கிகள் விரும்பினால் வட்டியைக் குறைத்து வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுக்கலாம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கட்டாய உத்தரவு போட்டாலே அமல்படுத்த தயங்குபவர்கள், விரும்பினால் குறைத்துக் கொள்ளலாம் என்றால் குறைப்பார்களா என்ன?

இதுதவிர, வங்கிகள் பண இருப்பு வைத்துக் கொள்ளும் அளவான CRR அளவையும் ரிசர்வ் வங்கி 100 புள்ளிகள் குறைத்துள்ளதால் வங்கிகளிடம் கூடுதலாக 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க கையிருப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

கடன் வழங்க வங்கிகள் தயாராக இருந்தாலும் வாங்கும் சக்தியும், அதை திருப்பிச் செலுத்தும் சக்தியும் மக்களிடம் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். மக்களின் நுகர்வு குறைந்துள்ளதால், கடந்த 4 ஆண்டுகளில் குறைந்த பொருளாதார வளர்ச்சியாக 6.5 சதவீதம் அளவுக்கு இந்த காலாண்டில் பதிவாகி உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி நான்காம் இடத்தை அடைந்தாலும், அது மக்களிடம் தனிநபர் வருவாயில் பிரதிபலிக்கவில்லை என்பதால் என்ன தவறு நடக்கிறது என்பதை கொள்கை வடிவமைப்பாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். மக்களிடம் வாங்கும் சக்தியை அதிகரித்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை உயர்த்த நல்ல நோக்கத்தில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகள் முறையாக அமல்படுத்தப்பட்டு, அந்த நோக்கம் நிறைவேறுகிறதா என்பதைக் கண்காணிப்பதும் அவசியம்.

SCROLL FOR NEXT