இந்தியாவில் உள்ள நகரங்கள் ஒரு நாளில் மட்டும், ஏறக்குறைய 7,236 கோடி லிட்டர் கழிவுநீர் உற்பத்தியாவதற்குக் காரணமாக இருக்கின்றன; இதில் 28% மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது. நம் நாட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் முறையாகச் செயல்படுவதில்லை. குறிப்பாக, மழைக்காலங்களில் தண்ணீரைச் சுத்திகரிக்க முடியாமல், அடிக்கடி மின்வெட்டுகளால் அவற்றின் இயக்கம் தடைபடுவதாகவும், கன உலோகங்கள் - மருத்துவக் கழிவுகளைச் சுத்திகரிக்க முடியாமல் திணறுவதாகவும் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இத்தகைய சூழலில், இந்தியாவில் கழிவுநீர் முதன்மையான பிரச்சினைகளில் ஒன்றாக மாறியுள்ளது.
கழிவுநீர் மாசு: இந்திய ஆறுகளில் பெரும்பாலானவை மாசுபட்ட நிலையில் இருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. மக்கள்தொகைப் பெருக்கம், தொழிற்சாலை - நகரமயமாக்கல் வளர்ச்சி போன்றவற்றின் காரணமாக நீராதாரங்களில் கழிவுநீர் கலப்பது அதிகரித்துவருகிறது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) 2018இல் ஆய்வு ஒன்றை நடத்தியது.
அதன் முடிவில், இந்தியாவில் உள்ள 323 ஆறுகளில் 13% கடுமையான அளவில் மாசுபட்டுள்ளதாகவும், 17% மிதமான அளவில் மாசுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், நகரங்களிலிருந்து வரும் வீட்டுக் கழிவுநீரே இந்தியாவில் நீர்நிலைகள் மாசுபடுவதற்கு முக்கிய ஆதாரமாக இருப்பதாகவும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியது. இதன் அடிப்படையில், கழிவுநீர் சுத்திகரிப்புக்கு இந்தியா மேம்பட்ட புதிய வழிகளைக் கண்டறிய வேண்டும் என நிபுணர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
தொற்றுநோய்களில் 21% அசுத்தமான தண்ணீருடன் தொடர்புடையவை என உலக வங்கி குறிப்பிடுகிறது. அந்த வகையில் மாசடைந்த நீர் வயிற்றுப்போக்கு, தொற்றுநோய், ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படக் காரணமாகிறது. மாசடைந்த நீரால் உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் 17 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். குறிப்பாக, 90% இறப்புகள் (பெரும்பாலானவர்கள் குழந்தைகள்) இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏற்படுகின்றன.
தரவுகள் என்ன கூறுகின்றன? - மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 2018இல், ஆறுகளில் உள்ள நீரின் தரத்தை நிர்ணயிக்க ஆய்வு ஒன்றை நடத்தியது. இதற்கு Biochemical oxygen demand (நீரில் மட்கக்கூடிய கரிம வேதிப்பொருள்களைக் கண்டறிவதற்கான வேதியியல் சோதனை) முறை பின்பற்றப்பட்டது. இந்த ஆய்வில், மாசு அதிக அளவு கண்டறியப்பட்டதுடன் அபாயகரமான வேதிப்பொருள்கள், கன உலோகங்கள், ஆர்சனிக், ஃபுளூரைடுகளும் ஆற்று நீரில் இருப்பதும் தெரியவந்தது.
இந்தியாவில் புனித நதியாகக் கருதப்படும் கங்கையில் ஏராளமானோர் நீராடுவதால் மாசடைந்த நிலையிலேயே அந்நதி உள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) அளிக்கும் தகவலின்படி, 2025ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளாவின் முதல் வாரத்தில் (ஜனவரி 12 முதல் 20 வரை), லட்சக்கணக்கான மக்கள் நீராடினர்.
இதன் காரணமாக கங்கை நதியில் ஃபீகல் கோலிஃபார்ம் (faecal coliform) என்கிற பாக்டீரியா கிருமியின் அளவு 100 மில்லி லிட்டருக்கு 1.8 முதல் 49,000 எம்பிஎன் (Most Probable Number) வரையும், யமுனை நதியில் 2,000 முதல் 33,000 எம்பிஎன் வரையும் பதிவாகியது. நன்னீரில் கழிவுநீர் கலப்பதால் ஃபீகல் கோலிஃபார்ம் பாக்டீரியா உருவாகிறது. இந்த பாக்டீரியா உடல்நலனில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. மேற்கூறிய கோலிஃபார்ம் பாக்டீரியா அளவு 100 மில்லிலிட்டருக்கு 2,500 எம்பிஎன் என்கிற பாதுகாப்பான வரம்பைவிட அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கங்கை நதியின் மாசுபாட்டில் 71%க்கும் அதிகமானவை கங்கை நதி, அதன் துணை நதிகளின் அருகில் அமைந்துள்ள நகரங்கள் - மாநகரங்களின் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரிலிருந்து வருகின்றன. இந்த மாசு கங்கையின் தரத்தையும் நீரோட்டத்தையும் பாதிக்கிறது.
அரசின் திட்டங்கள்: 2014இல் மத்திய அரசால் நமாமி கங்கை திட்டம் (Namami Gange Programme) கொண்டுவரப்பட்டது. கங்கை நதியில் மாசைக் குறைப்பதும் அதற்குப் புத்துயிர் அளிப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள். இத்திட்டத்தின்கீழ், 550 கோடி லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்புத் திறனை உருவாக்குவதற்கும், மறுசீரமைப்பதற்கும், 5,134 கி.மீ. நீளக் கழிவுநீர் வலையமைப்பை அமைப்பதற்கும் ரூ.24,581 கோடியில் 161 கழிவுநீர் மேலாண்மைத் திட்டங்களை அரசாங்கம் அனுமதித்தது. இருப்பினும், 2022ஆம் ஆண்டு வரை 32% கழிவுநீர் மட்டுமே சுத்திகரிக்கப்பட்டுள்ளது.
1,00,000க்கும் குறைந்த மக்கள்தொகை கொண்ட இந்திய நகரங்கள், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரில் குறைந்தது 20%ஐ மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்று ஸ்வச் பாரத் திட்டம் 2.0 கூறுகிறது; அடல் மிஷன் - நகர்ப்புற மாற்றுப் புத்துணர்ச்சித் திட்டம் (AMRUT 2.0), நகரங்கள் தங்களுக்குத் தேவையான மொத்த நீர்த் தேவையில் 20 சதவீதத்தையும் தொழில் துறை நீர்த் தேவையில் 40 சதவீதத்தையும் கழிவுநீர் மறுசுழற்சி மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீரைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், இயந்திரத்தனமான அணுகுமுறை, நகரங்களின் பங்களிப்புக் குறைவு காரணமாக இத்தகைய திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படாத நிலை நீடிக்கிறது.
தீர்வுகள்: கழிவுநீர் சுத்திகரிப்பைப் பொறுத்தவரை உள்ளூர்ப் பகுதியின் நிலப்பரப்பு, பருவநிலை, பொருளாதாரம் - நீண்டகால வாழ்வாதாரத்துக்கு ஏற்ற திட்டங்களை வகுக்க வேண்டும். இல்லை என்றால், எந்த நோக்கத்துக்காகச் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறாத சூழலே நீடிக்கும். எனவே, கழிவுநீர் சுத்திகரிப்பில் திறனுள்ள திட்டங்களை வகுப்பது அவசியம்.
பெரிய நகரங்களில் உள்ள குடியிருப்புகளில் கழிவுநீரைச் சுத்திகரித்துக் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தலாம். பிற தேவைகளுக்கும் சுத்திகரித்த நீரைப் பயன்படுத்தினால் கோடைக்காலத்தில் குடிநீரைப் பெருமளவு சேமிப்பதற்கு வழி ஏற்படும். முதன்மையாக, இந்தியா முழுவதும் பரவலாக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் தற்போதைய சுத்திகரிப்புத் திறன் அளவு என்ன, கழிவுநீர் சுத்திகரிப்பில் 2027 - 2030 இலக்குகளை அடைய எவ்வளவு கூடுதல் திறன் தேவைப்படுகிறது, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் - கிராமப்புற நிர்வாக அமைப்புகள் பரவலாக்கப்பட்ட சுத்திகரிப்பு முறைகளைச் செயல்படுத்துவதற்கு உள்கட்டமைப்பு வசதி தொழில்நுட்பத் திறனைக் கொண்டுள்ளனவா என்பதையெல்லாம் அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
டெல்லியைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் அறிவியல் - சுற்றுச்சூழல் மையம் (CSE), இந்தியாவில் 2050ஆம் ஆண்டுக்குள் கழிவுநீர் உற்பத்தி 75 - 80% அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது. இதைக் கவனத்தில் கொண்டு கழிவுநீர் சுத்திகரிப்பில் நிலவும் பின்னடைவைச் சரிசெய்யும் நடவடிக்கையில் அரசு முனைப்புக் காட்ட வேண்டும்.