மதுவால் ஏற்படும் துன்பத்தில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குரல் கொடுத்துள்ளார்.
“தமிழக இளைஞர்கள் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இளைஞர்கள் குடியால் பாதிக்கப்படக் கூடாது. மது ஒழிப்புக் கொள்கையை தேசியக் கொள்கையாக மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். மகாத்மாவை தேசத் தந்தையாக ஏற்றுக் கொண்டுள்ள நாம், அவரது உயிர்மூச்சு கொள்கையான மதுவிலக்கை பொருட்படுத்துவதில்லை. தமிழக அரசு மட்டுமல்ல மற்ற மாநில அரசுகளும் மதுவை வருமானத்துக்கான வழியாகவே பார்க்கின்றன. யார் கெட்டுப் போனால் நமக்கென்ன என்ற அலட்சியப் போக்கே இதற்கு காரணம். இளைஞர்கள் பலர் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி வாழ்க்கையை பாழாக்கி வருகின்றனர்” என்று தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி, மதுவுடன் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டமும் அதிகரித்து விட்டது. முன்பெல்லாம் நகர்ப்புறங்களில் மட்டுமேகிடைத்து வந்த போதைப் பொருட்கள் இப்போது பள்ளி வளாகங்கள் மற்றும் கிராமப்புறங்களில்கூட சர்வ சாதாரணமாக கிடைக்கிறது என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
பட்டியலின மக்களின் முக்கிய பிரதிநிதிகளில் ஒருவராக இருந்துவரும் திருமாவளவன், மது ஒழிப்பு குறித்து பல மேடைகளில் பேசிவந்தாலும், தற்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவர் இந்த கருத்தை வெளியிட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், இந்த ஆட்சியில் இதுவரை 596 கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தமட்டில், தேர்தல் நெருங்கும் நேரங்களில் எல்லாம் மதுக்கடைகளை மூடுவது குறித்த குரல் எழுந்து வருவது வாடிக்கை. தமிழகத்தில் தற்போது 5,400-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.48,000 கோடி அளவுக்கு வருவாய் கிடைத்து வருகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.145 கோடிக்கு மது விற்பனைநடக்கும் நிலையில், மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவதாக அரசு கூறிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவே!
மதுவின் தீமைகள் குறித்து உண்மையிலேயே தன் இதயத்தின் ஆழத்தில் இருந்துதான் திருமாவளவன் பேசுகிறார் என்றால், அவர் உடனடியாக ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும். இந்த ஆட்சி முடிவதற்குள் படிப்படியாக மதுக் கடைகளை மூடுவதுடன் அடுத்துவரும் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் முற்றிலுமாக மதுக்கடைகளே இல்லாமல் செய்வோம் என்று திமுக உறுதியளிக்குமா? என்ற கேள்வியை திருமாவளவன் எழுப்ப வேண்டும். அப்படி உத்தரவாதம் அளிக்காதபட்சத்தில் திமுக கூட்டணியில் தொடர விருப்பமில்லை என்றும் அறிவிக்க வேண்டும்.
ஒருவேளை ஆளும் திமுக வாக்குறுதி அளித்தால் அதை தேர்தலுக்குப் பிறகு நிறைவேற்றிக் காட்டும் பொறுப்பையும் விடுதலைச் சிறுத்தைகள் ஏற்கும் என்றும் திருமாவளவன் அறிவிக்க வேண்டும். சொல், செயல், சிந்தனை மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்ததுதான் விசிக என்று நிரூபிக்க திருமாவளவனுக்கு இது ஒரு மிக நல்ல வாய்ப்பு.