சிறப்புக் கட்டுரைகள்

'ஆவின்' தந்த கள்ளிப்பால்!

கே.சந்துரு

1960-களில் மாதவரத்தில் பால் பண்ணை அமைத்து சென்னை நகரத்துக்கு பால் வழங்க ஆரம்பித்தது தமிழக அரசு. பால் பண்ணையில் வேலை செய்த ஊழியர்கள், தோழர் சி.கெ.மாதவன் தலைமையில் தொழிற்சங்கம் அமைத்து தங்களுக்கு உரிய வேலை நிலைமைகளை வழங்குமாறு போராடினர்.

1968-ல் மாதவரம் பால் பண்ணை உலகப் புகழ் பெற்றது. அப்போது நடந்த வேலை நிறுத்தத்தை முறியடிப்பதற்காக சிறைக் கைதிகளை மாதவரத்துக்கு அழைத்து வந்து பால் புட்டிகளைக் கழுவ வைத்தனர். சர்வதேச தொழிலாளர் சட்டங்களின்படி சிறைக் கைதிகளைக் கொண்டு வேலை நிறுத்தத்தை உடைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

விரைவில் அரசு நிறுவனம் பால்வள நிறுவனமாக மாற்றப்பட்டது. பின்னர் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையமாக மாறியது. அப்போதுதான் தங்களது தொழில் பெயராக 'ஆவின்' உருவாக்கப்பட்டது. 1980-ம் வருடம் நவம்பர் 19-ம் தேதி தொழிலாளர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்தனர். எம்.ஜி.ஆர். அரசு 1,100 தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்தது.

தொழிலாளர்கள் வேலைநீக்கத்தை எதிர்த்து தொழிலாளர் நீதிமன்றம் செல்வதற்கு அரசு அனுமதி மறுத்தது. ஏனென்றால் பால்வள அமைச்சரும் தொழிலாளர் நல அமைச்சரும் ஒரே நபராக இருந்ததுதான். அவர்தான் கே.ஏ.கிருஷ்ணசாமி. அதையெதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொழிற்சங்கம் தொடர்ந்த வழக்குக்கு ப.சிதம்பரம் கட்டணமின்றி ஆஜராகி வெற்றி பெற்றார்.

1983-ல் தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிராக, தொழிலாளர்கள் நீதிமன்றம் செல்வதை தடுக்கும் விதமாக எம்.ஜி.ஆர். அரசு மேல்முறையீடு செய்தது. இரு நீதிபதிகள் அமர்வு அரசின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது. ஆக தொழிலாளர்கள் நீதிமன்றம் செல்லும் அனுமதிக்கே ஐந்து ஆண்டுகளைக் கழித்தனர்.

1986-ம் வருடம் தொழிலாளர் தீர்ப்பாயத்தில் தொடங்கிய வழக்கு ஏறத்தாழ 11 வருடங்கள் கழித்து தொழிலாளர்கள் சார்பாக தீர்ப்பளிக்கப்பட்டது. தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்தது தவறு என்றும், 1,070 தொழிலாளர்களுக்கும் 25 விழுக்காடு பாக்கி சம்பளம் கொடுத்து வேலையில் அமர்த்த வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டது.

17.2.1997 தீர்ப்பை எதிர்த்து ஆவின் நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அப்போது கருணாநிதி தலைமையிலான ஆட்சி நடைபெற்றது. தீர்ப்பாயத்தின் உத்தரவை நிறைவேற்றாமல் பட்டினி இருக்கும் 1,070 தொழிலாளர்களிடமும் தனித்தனியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு அவர்கள் பணித் தொடர்ச்சியில்லாமல் தற்காலிக ஊழியர்களாக வேலைக்கு அமர்த்த அரசு உத்தரவிட்டது மிகவும் கேவலமான தொழிலாளர் விரோத செயலாகும். ஏற்கெனவே 17 ஆண்டுகள் வேலையின்றி அவதிப்பட்ட தொழிலாளர்கள் வறுமை காரணமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தற்காலிக ஊழியர்களாக மாறினர்.

ஆனால் இரண்டு தொழிலாளர்கள் ஜி.உலகராஜ், என். கிருஷ்ணமூர்த்தி இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததனால் அவர்களுக்கு மறுபடியும் வேலையளிக்க ஆவின் நிர்வாகம் மறுத்தது. தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய மறுத்து நீதிபதி அரிபரந்தாமன் 16.4.2015-ல் உத்தரவிட்டார். மறுபடியும் ஆவின் நிர்வாகம் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மேல்முறையீடு செய்தது. மேல்முறையீடு செய்வதற்கு காலதாமதமானதனால் அதற்கும் விதிவிலக்கு அளிக்கக் கோரி 2018-ல் தாக்கல் செய்த மனு இன்று வரை விசாரணைக்கு வரவில்லை.

இச்சமயத்தில்தான் அடிமை ஒப்பந்தத்தில் இரு தொழிலாளர்கள் கையெழுத்திட மறுத்ததுடன், தங்களுக்கு தீர்ப்பாய உத்தரவு அடிப்படையில் சம்பளம் வழங்க வேண்டும், பணிமறுத்த காலத்துக்கு ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரி தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் (2017). அந்த வழக்கில் தொழிலாளர் நீதிமன்றம் அவ்விரு ஊழியர்களுக்கும் அவர்கள் ஏற்கெனவே ஓய்வூதிய வயதை அடைந்துவிட்டதால் வழங்க வேண்டிய முழு சம்பளத் தொகையையும் கணக்கிட்டு (தலா ரூ.12 லட்சம்) வழங்க உத்தரவிட்டது (6.2.2020).

அதை எதிர்த்து ஆவின் நிர்வாகம் 2020-ல் தொடர்ந்த வழக்கில் 29.5.2025-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் மரியா கிளீட் தீர்ப்பளித்தார். ஆவின் நிர்வாகம் தொடர்ந்த ஆறு ரிட் மனுக்களையும் தள்ளுபடி செய்ததுடன் நிர்வாகம் ஒவ்வொரு தொழிலாளருக்கும் ரூ.20,000/- அபராதத் தொகையாக வழங்க வேண்டுமென்று குறிப்பிட்டார்.

தன்னுடைய 42 பக்க நீண்ட தீர்ப்பில் ஆவின் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கை சாடியதுடன் கடந்த 45 ஆண்டுகளாக தொழிலாளர்கள் தங்கள் உரிமைக்குப் போராட வேண்டிய அவலத்தையும் சுட்டிக் காட்டியுள்ளார். ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாத அரசுகளின் தொழிலாளர் விரோதப் போக்கை தோலுரித்துக் காட்டிய நீதிபதி, தொழிலாளர் சட்டங்கள் எப்படி ஊழியர்களை அலைக்கழிக்க வைக்கின்றன என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை தொழிலாளர்களுக்கு கள்ளிப்பால் அளித்த ஆவின் நிர்வாகம் இந்த தீர்ப்பையாவது நிறைவேற்றுமா? அதுமட்டுமின்றி தொழிலாளர்களின் வறுமையை சாக்கிட்டு அடிமை சாசனம் பெற்ற இதர 1,000 தொழிலாளர்களுக்கும் இதே அடிப்படையில் நீதி வழங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

SCROLL FOR NEXT