சிறப்புக் கட்டுரைகள்

போர்ச் சூழலில் விமானப் பயணிகளின் கனிவான கவனத்துக்கு..

ஜி.எஸ்.எஸ்

விமானம் மேலெழும்போதும் (take-off), கீழிறங்கும் நேரத்திலும் (landing) விமானத்தின் ஜன்னல் திரைகள் (window shades) திறந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதுதான் பொதுவான விதிமுறை. ஆனால், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் சமீபத்தில் ஓர் உத்தரவை வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி, பாதுகாப்புக் காரணங்களால் எல்லையோரத்தில் உள்ள விமான நிலையங்களிலிருந்து (defence airfields) பயணிகளை ஏற்றிச் செல்லும் விமானங்கள் 10,000 அடி உயரத்தைத் தாண்டும்வரை, அவற்றின் ஜன்னல் திரைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். அதேபோல் அங்கு கீழிறங்கும் விமானங்கள் பூமியிலிருந்து 10,000 அடி உயரத்தை அடைந்ததிலிருந்து தரை இறங்கும்வரை அவற்றின் ஜன்னல் திரைகள் மூடப்பட்டு இருக்க வேண்டும். இந்த உத்தரவு ஹெலிகாப்டர்களுக்கும் பொருந்தும்.

அதென்ன பாதுகாப்பு சார்ந்த விமான நிலையங்கள் (defence airfields)? இவை இந்திய ராணுவம், விமானப் படை மற்றும் கடற்படையால் இயக்கப்படுகிற விமான நிலையங்கள். ராணுவப் பயிற்சி, பாதுகாப்பு நடவடிக்கைகள் அல்லது அவசர சேவைகள் போன்றவற்றுக்காகப் பயன்படுத்தப்படும் விமான நிலையங்கள்.

பொதுமக்கள், முக்கியப் பிரமுகர்கள் (சில சமயம்) பயன்படுத்தக்கூடிய சார்ட்டர்ட் விமானங்கள் அல்லது ஆபத்துக் கால விமானங்கள் போன்றவை இந்த விமான நிலையங்களில் இருந்து இயங்கக்கூடும். ஆக்ரா, பேலூர் போன்ற இடங்களில் இந்திய விமானப் படையின் விமான நிலையங்கள் உள்ளன. கொச்சி, விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் கடற்படையின் விமான நிலையங்கள் உள்ளன.

அதேநேரம், நாட்டின் சில பகுதிகளில் வணிக விமானங்கள் இயங்கும் அதே விமான நிலையத்தில் ராணுவ விமானங்களும் தரையிறங்க, மேலேறப் பயன்படுத்தப்படுகின்றன. லே, ஸ்ரீநகர், சண்டிகர், புணே, ஜாம்நகர் போன்றவை அவற்றில் சில.

எதற்காக இந்த உத்தரவு? - யாரும் விமானத்திலிருந்து ராணுவத் தளங்களைப் படம் பிடிப்பதைத் தடுக்க வேண்டும். ராணுவத் தளவாடங்களை எடுத்துச் செல்லும் விமானங்களை வெளியில் இருப்பவர்கள் பார்வையிட முடியாமல் செய்ய வேண்டும். ஆக, ராணுவ ரகசியம், பாதுகாப்பு போன்ற பல காரணங்களுக்காக இந்த உத்தரவு இடப்பட்டிருக்கிறது.

பொதுவாகவே, விமானப் பயணிகள் போர்ச்சூழல் காரணமாகப் பல புதுவிதமான சூழல்களுக்குத் தங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டும். நாடுகளுக்கு இடையே மோதல் நடைபெறும் சூழலில் முடிந்தவரை அதன் எல்லைப் பகுதிகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமான ஆவணங்களை எளிதில் எடுக்கும் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

உங்கள் பயணத் திட்டத்தை நெகிழ்வுத்தன்மை கொண்டதாக வைத்துக்கொள்வது நல்லது; அதாவது, பயணத் தேதி அன்று உங்கள் விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டால் அல்லது விமானம் மிகத் தாமதமாகக் கிளம்பினால் என்ன செய்யலாம் என்பதற்கான மாற்றுத் திட்டத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

2019இல் பாலாகோட் விமானத் தாக்குதலைத் தொடர்​ந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் விமானங்கள் மாதக்கணக்கில் ரத்து செய்யப்பட்டன. டெல்லியில் இருந்து ஐரோப்பாவுக்குச் செல்லும் விமானங்கள் தங்கள் பாதைகளை மாற்றிக்கொண்டன. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 2024இல் பகைமை உச்சத்தில் இருந்தபோது வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் மாற்று வழியில் பயணித்ததால் பயண நேரம் மிக அதிகமானது. இவையெல்லாம் பழைய உதாரணங்கள்.

சிக்கல்களைத் தவிர்க்க... குறிப்பிட்ட நாளில் பயணம் செய்யாவிட்டால் கட்டணத்தைத் திருப்பி அளிக்கக்கூடிய அல்லது வேறு நாளைக்குப் பயணத்தை மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடிய தேர்வுகளைக் கொடுக்கும் பயணச் சீட்டுகளை வாங்கலாம். இல்லையென்றால், போர்ச்சூழல் காரணமாக நீங்களாகவே பயணத்தை ரத்துசெய்தால் மொத்தக் கட்டணத் தொகையும் பறிபோய்விடும்.

பயணக் காப்பீடு எடுக்கும்போது அதில் ‘தீவிரவாதத்துக்கு எதிரான காப்பீடு’ சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். விமான நிலையத்துக்கு வழக்கமான காலத்தைவிடச் சற்று முன்னதாகவே சென்றுவிடுவது நல்லது. ஏனென்றால், அப்போது உங்கள் ஆவணங்களையும் உடைமைகளையும் சரிபார்க்கச் சற்று அதிக நேரம் எடுத்துக்கொள்ளப்படும். அதாவது, மேலும் தீவிரமாகப் பரிசோதிப்பார்கள்.

விமானப் பயணத்தின்போது செய்யப்படும் அறிவிப்புகளை அலட்சியம் செய்யாமல் கூர்ந்து கவனிக்க வேண்டும். குறிப்பாக, விமானம் குலுங்கினாலும் எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கிறது என்றாலும் முடிந்தவரை அமைதியாக இருந்து, விமான ஊழியர்கள் கூறும் ஆலோசனைகளை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும். அவசர காலத்தில் வெளியேறுவதற்கான வாயில்கள் எங்கு உள்ளன என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.

நவீன விமானங்கள் (தயாரிக்கப்பட்டு 10 வருடங்களைத் தாண்டாதவை என்று வைத்துக்கொள்ளலாம்) மிதமான தாக்குதலைத் தாக்குப்பிடிக்கக்கூடும். தாக்குதலால் ஏதேனும் பழுது உண்டானால் தரையிறங்கும்வரை அது தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வாய்ப்பு அதிகம்.

நாம் செல்லும் விமானத்தின் வயது என்ன என்பதை அறிய ‘பிளேன்ஸ்பாட்டர்ஸ்’ (Planespotters.net), ‘ஏர்ஃப்ளீட்ஸ்’ (Airfleets.net) போன்ற வலைத்தளங்கள் உதவும். பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சரிவரப் பின்பற்றும் விமான சேவைகள் எவை என்பதை ‘ஏர்லைன்ரேட்டிங்ஸ்’ (Airlineratings.com) என்கிற வலைத்தளத்தில் சரிபார்த்துக்கொள்ள முடியும்.

நீங்கள் பயணிக்கும் விமான சேவை, அயோஸா (IOSA-IATA Operational Safety Audit) என்கிற சர்வதேச அமைப்பின் சான்றிதழைப் பெற்றிருக்​கிறதா என்பதை உறுதிசெய்து​கொள்​ளலாம். இதைப் பெற வேண்டு​மா​னால், உலக அளவிலான பாதுகாப்புத் தரங்களை அது எட்டி​யிருக்க வேண்டும்.

போர்ச் சூழல் நிலவும் பகுதி​களைத் தவிர்க்கும் விமான சேவைகள் உண்டு. எரிபொருள் செலவை மிச்சப்​படுத்த வேண்டும் என்பதற்​காகத் தயங்காமல் அந்தப் பகுதிகள் மீது விமானத்தைச் செலுத்தும் விமான சேவைகளும் உண்டு. சர்வதேச விமானப் பயணம் குறித்து MyGov அல்லது வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிடும் எச்சரிக்கைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

- தொடர்புக்கு: aruncharanya@gmail.com

SCROLL FOR NEXT