ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள தெனாலி நகரில் ‘பைக் ரேஸ்’ என்ற பெயரில் அதிவேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டிச் சென்ற மூன்று இளைஞர்களை காவல்துறையினர் பிடித்து, நடுரோட்டில் உட்கார வைத்து பொதுமக்கள் முன்னிலையில் லத்தியால் தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தை காணொலியாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். இளைஞர்களுக்கு காவல்துறையினர் தாங்களாகவே நடுரோட்டில் தண்டனை வழங்கியது தவறான செயல் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று கூறி சமூக ஆர்வலர்களும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டப் பிரிவினரும் மனித உரிமை ஆணையத்தில் புகார் பதிவு செய்துள்ளனர். சட்டமீறலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு காவல்துறையினர் தாங்களே பொது இடத்தில் தண்டனை கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
அதேசமயம், இளைஞர்கள் ‘பைக் ரேஸ்’ நடத்தி சாலையில் இதர வாகனங்களில் செல்லும் முதியோர், பெண்களை அச்சுறுத்துகின்றனர். அதிக ஒலி எழுப்பிக் கொண்டு, இளைஞர்கள் அதிவேகத்தில் கடந்து செல்லும்போது ஏற்படும் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கே பொதுமக்களுக்கு நீண்டநேரம் பிடிக்கும் அளவுக்கு நவீனகால ஆபத்தாக இது உருவெடுத்துள்ளது.
சென்னை நகரில் ‘பைக் ரேஸ்’ நடத்துவதற்கு தடை விதித்திருந்தாலும், நள்ளிரவு நேரங்களில் இளைஞர்கள் ஒன்றுகூடி தங்கள் வாகனங்களை அதிவேகமாக இயக்கி பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றனர். மேம்பாலங்களில் இரவு நேரங்களில் தடுப்புகள் வைத்து காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அதிவேகமாக வாகனம் ஓட்டும் செயல் குறைந்தபாடில்லை.
சென்னையில் சில தினங்களுக்கு முன்புகூட கோயம்பேடு மேம்பாலத்தில் ‘பைக் ரேஸ்’ நடத்திய இளைஞர்களை கைது செய்து, வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ஆனால், அவர்களது செயல்களைத் தடுப்பதற்கு இந்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. இளைஞர்கள் அதிக சக்திவாய்ந்த வாகனங்களில் வேகமாக கடந்து செல்கின்றனர்.
150 முதல் 200 கி.மீ. வேகம் வரை செல்லக் கூடிய அவர்களது வாகனங்களை விரட்டிப் பிடிக்கும் அளவுக்கு காவல்துறையிடம் வாகனங்கள் இல்லை. அவர்களைத் தடுக்க காவல்துறை முயற்சி எடுப்பதற்குள், கண்ணிமைக்கும் நேரத்தில் இளைஞர்கள் அதிவேகத்தில் கடந்து சென்று விடுவதால் இந்த குற்றச் செயல்கள் சட்டத்தின் பிடிகளில் சிக்குவதில்லை.
இளைஞர்களை விரட்டிப் பிடிப்பது சாத்தியமில்லை என்றாலும், அவர்களது அதிவேக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிவேக திறன்கொண்ட வாகனங்களின் உற்பத்திக்கு கட்டுப்பாடு விதிப்பது, வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தை தாண்டிச் செல்ல முடியாதபடி, வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்துதல், அதிக ஒலிப்பான் பொருத்துவதற்கு தடை விதித்தல் ஆகியவற்றுடன் இன்னும் கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டு வருவதன் மூலமே இதுபோன்ற பொதுமக்களை அச்சுறுத்தும் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
அதுமட்டுமின்றி, இளைஞர்கள் அதிவேக சக்தி கொண்ட வாகனங்களை வாங்க அனுமதிக்கும் பெற்றோரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து குற்றத்திற்கு பொறுப்பேற்கச் செய்வதன்மூலம் இத்தகைய குற்றங்களைத் தடுக்க முடியும்.