பெங்களூரு நகர குடியிருப்பு ஒன்றில் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர் இந்தியில் பேசாததால் கார் நிறுத்தும் வசதியை வழங்க மறுத்துள்ளது சர்ச்சையாக மாறியுள்ளது. அந்த குடியிருப்பில் கார் நிறுத்துவதற்கான வசதி இருந்தும் இந்தியில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசிய காரணத்திற்காக குடியிருப்பு காவலர்கள் கார் நிறுத்தும் வசதியை வழங்க மறுத்ததை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் அவர் பதிவு வெளியிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் ஆங்கிலத்தை கட்டாயமாக்கி விடலாம் என்று அவர் தெரிவித்த ‘கமென்ட்’ விவாதப் பொருளாக மாறி, அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் மக்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதேபோன்று, கர்நாடகாவில் பணியாற்றும் வங்கி மேலாளர் ஒருவரை கன்னடத்தில் பேச வற்புறுத்தி வாடிக்கையாளர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. மும்பையிலும் மராட்டிய மொழியில்பேசும்படி சண்டை போடும் காட்சிகள் சமீபத்தில் வெளிவந்தன.
ஒவ்வொருவரும் தங்களது தாய்மொழி மீது அதிக பற்று வைத்திருப்பதை மறுக்க முடியாது. அதேநேரம் வேற்று மொழியை தாய்மொழியாக கொண்டவர்களிடம் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் எல்லை தாண்டும்போது சர்ச்சையாகி விடுகிறது. உலகிலேயே பாப்புவா நியூ கினி நாட்டில் அதிகபட்சமாக 840 மொழிகள் பேசப்படுகின்றன. அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் 780 மொழிகள் பேசப்படுகின்றன.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 8வது பிரிவில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக இடம்பெற்றுள்ளன. தமிழ், மலையாளம், தெலுங்கு, சமஸ்கிருதம் உள்ளிட்ட 11 மொழிகள் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு உள்ளன. கடந்த 2001 மக்கள் தொகை கணக்கீட்டின்படி, இந்தியாவில் கணிசமான எண்ணிக்கையில் மக்களால் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 122 என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோல பல்வேறு மொழிகளைக் கொண்ட நாட்டில் ஒவ்வொருவரும் தங்களது தாய்மொழியில் மட்டுமே மற்றவர்கள் தங்களுடன் பேச வேண்டும் என்று நிர்பந்திக்க ஆரம்பித்தால் நிலைமை என்னவாகும் என்று சிந்திக்க வேண்டும்.
இன்றைக்கு பெங்களூருவில் பணியாற்றும் வங்கி மேலாளர் கன்னடம் கற்றுக் கொண்டு வாடிக்கையாளரிடம் பேச வேண்டும் என்றால், 6 மாதத்தில் குஜராத்திற்கோ, ஒடிஷாவுக்கோ, பஞ்சாபிற்கோ பணிமாற்றலாகும் போது குஜராத்தியும், ஒடியாவும், பஞ்சாபியும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், அவர் செல்லும் இடங்களிலெல்லாம் மொழிகளை கற்றுக்கொண்டே போகவேண்டும் என்று வற்புறுத்துவதும் ஏற்புடையதல்ல.
ஒவ்வொருவரும் தாய்மொழிப்பற்றுடன் இருப்பதில் தவறில்லை. ஆனால், மற்றவர்களின் தாய்மொழியையும் மதித்தால் மட்டுமே நல்லிணக்கமான சூழல் இருக்கும். ஒருவரின் மொழிப்பற்றுக்கும் எல்லை உண்டு. மொழிப்பற்று என்பது மொழி வெறியாக மாறி மற்றவர்களைப் புண்படுத்தும் நிலைக்கு போவது கூடாது.
குறிப்பாக, இன்றைய தொழில்நுட்ப காலகட்டத்தில் இருவேறுமொழிகள் பேசுவோரின் உரையாடலை உடனுக்குடன்மொழிபெயர்த்து வழங்க மொபைல் போனிலேயே வசதிகள் வந்துவிட்ட நிலையில், அந்த வசதிகளைப் பயன்படுத்தி மொழிப்பற்றை கட்டுக்குள் வைப்பதே சிறந்தது.