கோப்புப்படம் 
சிறப்புக் கட்டுரைகள்

கற்பித்தலும் சர்வதேச தரத்துக்கு மாறலாமே?

எம்எஸ்

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த பள்ளிக் கல்வித்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று ‘LEVEL UP’ எனப்படும் ஆங்கில அறிவை அதிகரிக்கும் திட்டமாகும்.

ஆறு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆங்கில மொழியில் வாசித்தல், பேசுதல் மற்றும் எழுதுதல் ஆகிய திறன்களை அதிகரிக்கச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கம். இதன்மூலம் மாணவர்கள் பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வி முடித்து வேலைவாய்ப்பு தேடிச் செல்லும்போது எளிதில் வேலைவாய்ப்புகளைப் பெற ஆங்கில அறிவு உதவும் என்ற நல்ல நோக்கத்தில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி முடித்து வேலைதேடிச் செல்லும் இளைஞர்களிடம் இன்றைய தொழில்துறையினர் எதிர்பார்க்கும் திறன் இருப்பதில்லை என்ற குறைபாட்டை தொழில்துறையினர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்கள் சுட்டிக்காட்டும் திறன் குறைபாடுகளில் ஆங்கில அறிவு முக்கிய இடம் வகிக்கிறது.

இந்தி வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு ஆங்கிலத்தை நாம் தேர்வு செய்துள்ள நிலையில், அந்த ஆங்கில அறிவை திறம்பட கற்பிப்பது அவசியம். 12 ஆண்டுகள் பள்ளியில் ஆங்கிலம் பயிலும் ஒரு மாணவரால் ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என்பது அந்த மாணவரிடம் உள்ள குறைபாடாக கருத முடியாது.

புதிய மொழி உட்பட எந்த விஷயத்தையும் கற்றுக் கொள்ளும் திறன் இளம் பருவத்தினருக்கு அதிகம் உண்டு. குறிப்பிட்ட கால வரையறைக்குள் ஒரு மொழியை அவர்கள் கசடற கற்றுக் கொள்ள வைக்கிறோமா என்றால் இல்லை. பள்ளிக் கல்வி முடித்து வெளியேறும் மாணவர்கள் ஆங்கிலப் புலமையுடன் வெளிவருவதற்கான சரியான வழிமுறையை உருவாக்கி அதன் வழியில் கற்பிப்பதே பிரச்சினைக்கு தீர்வாக அமையும்.

பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முன்னணி மாநிலமாக இருப்பதுடன், அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடாமல் அண்டை நாடுகளுடன் பொருளாதார வளர்ச்சியில் போட்டி போட்டு வருகிறோம் என்று தமிழக அரசு பெருமையோடு குறிப்பிடும் நிலையில், கல்வித் தரத்தையும் ஏன் சிறந்த நாடுகளோடு ஒப்பிட்டு, சர்வதேச தரத்திற்கு கல்வி வழங்கக் கூடாது? மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைப்படி, சிபாரிசு செய்யப்படும் மும்மொழித் திட்டத்தை ஏற்க மறுக்கும் அதே நேரத்தில் அனைத்து உயர்கல்வி படிப்புகளையும் முழுமையாக தமிழில் அளிப்பதற்கு நாம் தயாராக இருக்கிறோமா என்ற கேள்வியை கட்டாயம் எழுப்பிக் கொள்ள வேண்டும்.

அதேசமயம், தமிழ் தவிர வேறு மொழிகளுக்கு கல்வியில் அனுமதியில்லை என்ற முடிவை தமிழக அரசு எடுக்குமானால், ஆங்கில அறிவை மாணவர்களுக்கு வளர்த்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. மாநிலம் தாண்டி வேறு எங்குமே தமிழக மாணவர்கள் படிப்பதற்கோ பிழைப்பதற்கோ செல்லவே முடியாத நிலை எதிர்காலத்தில் ஏற்படும். எனவே, தமிழ்வழிக் கல்வி நிலையங்களில் கூட ஆங்கிலத்தில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதற்கேற்ப தரமான ஆங்கிலக் கல்வியை அளிக்கக்கூடிய ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து நியமிக்க வேண்டும்.

SCROLL FOR NEXT