சிறப்புக் கட்டுரைகள்

மெரினா: அரசு சொத்துகளை பராமரிப்பது அவசியம்

எம்எஸ்

ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய கடற்கரையான மெரினாவை மெருகேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. காற்று வாங்க வரும் பொதுமக்கள் அமருவதற்கு மூங்கில் நிழற்குடை, நீண்ட நாற்காலி, மூங்கில் குடில் ஆகியவை உருவாகி வருகின்றன. இவையனைத்தும் சுற்றுச் சூழலுக்கு கேடுவிளைவிக்காத வண்ணம் மூங்கில் குச்சிகள் மூலம் கலைநயத்துடன் உருவாக்கப்படுகிறது. குப்பைத் தொட்டிகூட மூங்கிலால் செய்யப்பட்டு அழகான முறையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இவற்றை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு துணை முதல்வர் உதயநிதி திறந்து வைக்க உள்ளார்.

சென்னை மாநகர மக்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்கு மையமாக திகழும் மெரினாவை அழகுபடுத்துவதில் அதிமுக, திமுக இரண்டு அரசுகளும் சளைத்தவை அல்ல. இருள்சூழ்ந்த பகுதிகளுக்கு உயர்கோபுர விளக்குகள் அமைத்தது, கிரானைட் நாற்காலிகள், உருளைக்கல், ‘செல்ஃபி பாயின்ட்’, சர்வீஸ் சாலை அமைத்தது, கார் நிறுத்தும் வசதி, கடற்கரை மணலில் உள்ள பாட்டில்கள் மற்றும் குப்பைகளை அகற்ற சிறப்பு டிராக்டர்கள், மணற்பகுதியில் போக்குவரத்து காவலர்கள் ரோந்து செல்ல சிறப்பு மோட்டார் வாகனம், எச்சரிக்கை ஒலிபெருக்கி கருவி, மக்களுக்கு உதவ தற்காலிக காவல் நிலையம் உள்ளிட்ட ஏராளமான வசதிகளை இரண்டு அரசுகளும் உருவாக்கிக் கொடுத்து அழகான மெரினா கடற்கரையை மெருகேற்றி மென்மேலும் பெருமை சேர்த்துள்ளது பாராட்டுக்குரியது.

அந்த வரிசையில் தற்போது சுற்றுச்சூழலை பாதிக்காத மூங்கில் குடில்கள் அமையவிருப்பது கடற்கரையின் பொலிவை மேலும் கூட்டும் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில், வசதிகள் என்று வரும்போது அதை தவறாக பயன்படுத்தும் சங்கடமும் கூடவே வருகிறது. பொதுமக்கள் அமர்ந்து ஓய்வெடுக்கவும், கடலின் அழகை ரசிக்கவும் அமைக்கப்படவுள்ள இந்த குடில்கள் மற்றும் சாய்வு நாற்காலிகளில் காதல் ஜோடிகள், சமூக விரோதிகள் அமர்ந்து கொண்டு தவறான செயல்களில் ஈடுபடும் சூழ்நிலையும் ஏற்படும்.

இத்தகைய திட்டங்களை செயல்படுத்தும்போது, அரசால் உருவாக்கப்படும் வசதிகளை தவறாக பயன்படுத்துவோரை தடுப்பதற்கான அம்சத்தையும் சேர்க்க வேண்டும். மாலை நேரங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு, தவறான காரியங்களில் ஈடுபடுவோரை துரத்தியனுப்ப இளைஞர்களைக் கொண்ட தன்னார்வலர் குழுவை அமைக்கவேண்டும்.

அதுமட்டுமின்றி, அரசால் உருவாக்கப்படும் வசதிகள்மற்றும் சொத்துகள் எங்குமே முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குறை நீண்டகாலமாக இருந்து வருகிறது.பூங்காங்கள், கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களில் உருவாக்கப்படும் வசதிகள், உபகரணங்களை பராமரிப்பதற்கு எந்த வழிமுறையும் வகுக்கப்படுவதில்லை. மக்களின் வரிப்பணத்தில் கோடிகளைக் கொட்டி பொது இடங்களில் உருவாக்கப்படும்

வசதிகளில் சிறிய அளவில் ஏற்படும் சேதங்கள்கூடசரி செய்யப்படுவதில்லை. அவை செயலிழந்து பயனற்றதாகும் வரை வேடிக்கை பார்க்கும் நிலையே உள்ளது. பொது இடங்களில் உள்ள அரசு சொத்துகளை பராமரிக்கவும் பழுதுபார்க்கவும் தனித் துறை உருவாக்கினால்கூட பொருத்தமாக இருக்கும்.

SCROLL FOR NEXT