பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தம் ரூ.85 லட்சம் வழங்க கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி அளித்துள்ள தீர்ப்பு நாட்டில் நடக்கும் பலாத்கார சம்பவங்களுக்கு முடிவுகட்டுவதற்கான தொடக்கம்.
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் வெளிவந்துள்ள தீர்ப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்த குற்றம் 2016 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் நடந்தது. ஆனாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் பல்வேறு சமூக காரணங்களுக்காக புகார் அளிக்க முன்வரவில்லை. 2019-ம் ஆண்டு 19 வயதே ஆன பாதிக்கப்பட்ட பெண் துணிச்சலுடன் அளித்த புகார் காரணமாகவே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. குற்றப் பின்னணியில் அப்போதைய ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் இருந்ததால் அரசுக்கு மகளிர் அமைப்புகள் மூலம் நெருக்கடி ஏற்பட்டு வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. பின்னர் சிபிஐ-க்கும் மாற்றப்பட்டது.
இதன்பிறகே குற்றவாளிகள் அரசியல் செல்வாக்கையும் மீறி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். பாதிக்கப்பட்ட 8 பெண்களும் துணிச்சலுடன் வந்து, நடந்த கொடூரத்தை நீதிமன்றம் ரகசியமாக நடத்திய விசாரணையில் தெளிவுபடுத்தினர். பெண்கள் உள்ளிட்ட 48 சாட்சிகளும் எந்த குளறுபடியுமின்றி சாட்சியம் அளித்துள்ளனர்.
இதன் அடிப்படையிலேயே சிபிஐ-யால் இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர முடிந்துள்ளது. ஆனால், உண்மையில் அனைத்து பாலியல் வழக்குகளிலும் இதுபோன்று நடப்பதில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் முதல்கட்டமாக புகார் தருவதற்கே முன்வருவதில்லை. அதற்கு பல சமூக காரணங்கள் கூறப்படுகின்றன.
பெண்களுக்கு எதிரான கொடுமைகளைச் செய்பவர்கள் இந்த பலவீனத்தைதான் தங்கள் ஆயுதமாக கையில் எடுக்கின்றனர். பாலியல் வன்முறையில் ஈடுபட்டால் பெண்கள் அவமானத்துக்குப் பயந்து வெளியில் சொல்ல மாட்டார்கள். காணொலி பதிவு செய்துவிட்டால், அதைக் காட்டி மிரட்ட முடியும் என்ற துணிச்சல் குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு ஏற்படுகிறது.
வன்முறை, சீண்டல், பாலியல் அத்துமீறல் என எந்தக் குற்றமாக இருந்தாலும் பெண்கள் துணிச்சலுடன் புகார் தர முன்வர வேண்டும். இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை உறுதி என்ற செய்தி, குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு சென்றடைந்தால் மட்டுமே பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்களின் எண்ணிக்கை குறையும். இதற்கு முதலில் பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளுக்கு அந்த துணிச்சலை புகட்டி வளர்க்க வேண்டும்.
வெளி உலகத்துக்கு பயந்து ஓடி ஒளியும் வகையில் அவர்களை துணிச்சலற்றவர்களாக வளர்க்கக் கூடாது. சமீபகாலமாக பள்ளிகளில் பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காவல்துறை மற்றும் சமூக நலத்துறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இருந்தாலும், நடைபெறும் பாலியல் சம்பவங்களுடன் ஒப்பிடும்போது, இதுபோன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகள் போதாது என்பது தெளிவாகிறது.
பள்ளி, கல்லூரிகளில் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்தும், அத்தகைய சூழ்நிலை வரும்போது எப்படி துணிச்சலுடன் அணுகி காவல்துறையில் புகார் அளிப்பது என்பது குறித்த ஊக்கத்தை அவர்களுக்கு அளிப்பதும் அவசியம்.