சிறப்புக் கட்டுரைகள்

‘ரீல்ஸ்’ தலைமுறை: கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு தேவை!

எம்எஸ்

சென்னை பரங்கிமலை மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்காக தண்டவாளத்தைக் கடந்த கல்லூரி மாணவர்கள் முகமது நபூல், சபீர் அகமது ஆகிய இருவரும் அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

20 வயதே நிரம்பிய அவர்கள் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படித்து வந்துள்ளனர். படிப்பை முடித்துவிட்டு நல்ல வேலையில் சேர்ந்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக துவங்க வேண்டிய அந்த மாணவர்கள் எதிர்பாராத வகையில் உயிரிழந்தது வருத்தமளிக்கும் விஷயம். அவர்கள் இருவரும் கிரிக்கெட் விளையாடும் ஆர்வத்தில் மொபைல் போனில் பேசிக் கொண்டே அலட்சியமாக தண்டவாளத்தைக் கடந்ததே இந்த துயர சம்பவத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

இளைஞர்கள் பாதுகாப்பு அம்சங்களை துளியும் பொருட்படுத்தாமல் அலட்சியமாக நடந்து கொள்வதே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. இன்றையதொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மக்கள் தொகைஎண்ணிக்கையைவிட அதிக எண்ணிக்கையில் மொபைல் போன்கள் புழக்கத்துக்கு வந்துவிட்டன.

ஒன்றுக்கு இரண்டாகமொபைல் போன்களை வைத்துக் கொண்டு இளைய சமுதாயம் தங்களது பெரும்பான்மை நேரத்தை அதில் செலவிடுகிறது. அதிலும் பொழுதுபோக்குக்காகவும் மற்றவர்களிடம் இருந்து ‘லைக்’குகளை பெறுவதற்காகவும் ‘ரீல்ஸ்’ உருவாக்கும் கலாச்சாரம் சர்வ சாதாரணமாகிவிட்டது.

நடுரோட்டில் சாலையில் நாற்காலி போட்டு அமர்ந்து ரீல்ஸ் எடுப்பது, போக்குவரத்து சிக்னலில் வாகனங்களுக்கு மத்தியில் நடனமாடுவது, நீச்சல் தெரியாமலேயே ஆழமான ஆறு, குளம், கிணறுகளில் குதிப்பது, ஓடும் ரயில் முன்பாக ‘செல்பி’ எடுப்பது, ஆபத்தான காட்டு விலங்குகளிடம் நெருங்கிச் சென்று ‘செல்பி’ எடுப்பது, பைக் ரேஸ் சாகசங்களில் ஈடுபட்டு ரீல்ஸ் எடுப்பது, பயன்படுத்தும் மின்னணு பொருட்களை தீயிட்டு கொளுத்தி காணொலி உருவாக்கும் சவால் என இளைய தலைமுறை தங்களது உயிரைப் பணயம் வைத்து செய்யும் காரியங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

வாழ்க்கைக்கு பொழுதுபோக்கு அவசியம் தான். அதேநேரம், உயிருக்கு ஆபத்தான சவால்களை உருவாக்குவதும், விபரீதங்களைச் செய்வதும் எல்லை மீறிய செயல்களாகவே கருதப்படும்.

இவையனைத்தும் இன்றைய நவீன காலகட்டத்தில் பள்ளிக் குழந்தைகள், இளைஞர்களை பாதிக்கும் செயல் என்பதால், பள்ளி, கல்லூரிகளில் இருந்தே இதுபோன்ற சாகச செயல்களின் விபரீதங்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பள்ளி பாடத்திட்டத்திலேயே ஆபத்தான ‘செல்பி’ எடுப்பது, சாகசம் என்ற பெயரில் உயிரைப் பணயம் வைப்பது போன்ற செயல்களை தவிர்ப்பது எப்படி என்பதை பள்ளி மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பாடமாக உருவாக்கி, அவர்களின் மனதில் இதுபோன்ற செயல்களின் தீமைகளை பதியவைக்கவேண்டும்.

கல்லூரிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளின்போது, மொபைல் போன்களை நல்ல வழியில் பயன்படுத்துவது எப்படி? சாகசம் என்ற பெயரில் விபரீதங்களில் ஈடுபடாமல் இருப்பது எப்படி? என்பது குறித்து அதற்குரிய நிபுணர்களைக் கொண்டு விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்துவது இன்றைய காலகட்டத்துக்கு தேவையான ஒன்றாக உருவெடுத்துள்ளது.

SCROLL FOR NEXT