சிறப்புக் கட்டுரைகள்

தவறுகளை தட்டிக்கேட்க முடியாதபடி கம்யூனிஸ்ட்டுகளை திமுக சரிக்கட்டி வைத்திருக்கிறதா? - டி.ராஜா நேர்காணல்

ஆர்.ஷபிமுன்னா

ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது திமுக ஆட்சி. கடந்த நான்காண்டுகளில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிரணிக் கட்சிகள் ஆட்சிக்கு எதிராக அள்ளித் தூற்றுகின்றன. திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளோ, “சொன்னதைச் செய்திருக்கிறது திமுக... இன்னும் செய்ய வேண்டிய காரியங்களும் இருக்கின்றன” என பட்டும் படாமல் ஆட்சிக்கு ஈயம் பூசுகின்றன. இந்த நிலையில், திருப்திகரமான ஆட்சியைத் தந்திருக்கிறதா திமுக, இந்தியா - பாகிஸ்தான் போர் உள்ளிட்டவை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாவிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக உருவான இந்தியா - பாகிஸ்தான் போர் சூழல் குறித்து..?

இது குறித்தான எங்கள் கட்சியின் நிலைப்​பாட்டை ஏற்கெனவே தெளிவுபடுத்தி உள்ளோம். என்றைக்குமே போர் ஒரு தீர்வா​காது. இதை இருநாடு​களும் கருத்தில் கொள்ள வேண்டும். இப்பிரச்​சினைக்கு ராஜாங்க மற்றும் அரசியல் ரீதியாக பேச்சு​வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். தீவிர​வாதம் என்பது இருநாடு​களுக்கும் பொது எதிரி. எனவே, தீவிர​வாதத்தை ஒழிப்பது என்பது இருநாடு​களுக்குமே ஒரு பொது நோக்கமாக இருப்பது அவசியம். போரின் தாக்கத்தால் இரண்டு பக்கமும் உயிர் சேதம், பொருட் சேதம் உள்ளிட்ட பலவிதமான நாசவிளைவுகள் ஏற்படும். பாகிஸ்தான் தனது மண்ணில் தீவிர​வா​திகள் செயல்பட அனுமதிக்கக் கூடாது.

மூன்றாவது முறையாக தொடரும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி எப்படி உள்ளது?

இவர் முதல்முறை பிரதமரான போது, “நான் பிரதமர் இல்லை... பிரதம சேவகன்” என ஆர்எஸ்எஸ் பாணியில் சொன்னார். குறைந்​தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம் எனச் சொன்னார்கள். குறைந்​தபட்ச நிர்வாகம், மினிமமாகி இப்போது, மைனஸ் என்றாகி விட்டது. மக்களின் உரிமைகள் பறிப்பு, அரசியல் சட்டத்தின் மீதான தாக்குதல் எனத் தொடரும் அரசில், மோடி அளித்த வாக்குறு​திகள் அனைத்தும் பொய் என நிரூபணமாகி விட்டது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, கறுப்புப் பணத்தைக் கைப்பற்​றுதல் என அளித்த வாக்குறு​திகள் பற்றிய பேச்சு இப்போது முற்றிலும் இல்லை.

விவசா​யிகளுக்கு இருமடங்கு லாபம் என்பதும் மாறி இப்போது குறைந்​தபட்ச ஆதார விலைக்காக போராட வேண்டிய நிலை ஏற்பட்​டுள்ளது. சமூகநீதி, இட ஒதுக்கீடு போன்ற பேச்சுகளுக்கே இடமில்​லாமல் போய் விட்டது. மூன்றாவது முறையாக அவர் பிரதமராக வந்ததற்கு மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லாமல் போனது போன்றவையே காரணம். பிரதமர் மோடியின் ஆட்சி ஒரு மக்கள் விரோத ஆட்சி. மோடி அரசின் ஆதரவில் அதானி, அம்பானி போன்றவர்கள் தான் சர்வதேச அளவில் வளர்ச்சி பெற்றுள்​ளனர்.

எதிர்க்கட்சிகள் கட்டமைத்த இண்டியா கூட்டணியின் தற்போதைய நிலை என்ன?

இண்டியா கூட்டணி இன்றும் உள்ளது. ஆனால், அதை மேலும் வலுவாக்க வேண்டும். இதில், தேர்தலுக்கான தொகுதி பங்கீடுதான் முக்கிய​மானது. மக்களவை தேர்தலில் போதுமான தொகுதி உடன்பாடு எதிர்க்​கட்​சிகளுக்கு இடையில் ஏற்பட​வில்லை. தொகுதிப் பங்கீடு அனைவருக்கும் ஏற்புடைய பரஸ்பர நம்பிக்​கை​யுடன் அமைந்​திருந்தால் மூன்றாவது முறையாக மோடி பிரதமராகி இருக்க முடியாது. மக்களவை தேர்தலின் முடிவுகள் மாறி எதிர்க்​கட்​சி​களின் பிரதி​நி​தித்​துவம் நாடாளு​மன்​றத்தில் கூடி இருக்​கும். இதே காரணத்தால் தான் டெல்லி​யிலும் பாஜக ஆட்சியை பிடித்தது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி எப்படி உள்ளது? நடப்பது நல்லாட்சி என உங்களால் இம்முறை மக்கள் மத்தியில் தைரியமாகப் பேசி வாக்குக் கேட்கமுடியுமா?

தொகுதி மறுவரையறை, இந்தி திணிப்பு, புதிய கல்விக் கொள்கை, மத்திய அரசிடம் நிதி பெறுதல், மக்கள் நலத்திட்​டங்கள், விவசா​யத்​திற்காக தனி பட்ஜெட் என முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சிறந்தவை. இவை, இந்தி​யாவின் கூட்டாட்சி நெறிமுறைகளை தூக்கிப் பிடிப்​பவையாக உள்ளன. இந்தியா என்பதே ஓர் ஒன்றியம் தான் என அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. எனவே, ஒன்றிய அரசாக டெல்லி​யிலுள்ள மோடி அரசு ஒருதலைபட்சமான முடிவுகளை எடுக்கக் கூடாது. அதை மாநில அரசுகளிடம் இந்தியைப் போல் திணிக்​கவும் கூடாது. இந்தியை எதிர்த்தால் கல்விக்கான நிதி இல்லை என்பதெல்லாம் மாபெரும் தவறுகள். இதையெல்லாம் சுட்டிக்​காட்டி செயல்​படு​வ​தால்தான் இந்தி​யாவில் ஸ்டாலின் ஒரு முன்மாதிரி முதலமைச்​ச​ராகக் கருதப்​படு​கி​றார். எனவே, வரும் சட்டப்​பேரவை தேர்தலில் கூட்ட​ணிக்காக தைரியமாக வாக்குக் கேட்போம்.

தமிழகத்தில் திமுக கூட்டணி உடனான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறவு எப்படி இருக்கிறது?

எங்கள் கட்சியின் மதிப்​பீட்​டின்படி, தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது. இதற்கு பொதுமக்கள் ஆதரவும் உள்ளது. எனவே, திமுக-வுடன் எங்கள் உறவு மிகவும் வலுவாக உள்ளது. முதல்வர் ஸ்டாலினின் ஆட்சிக்கு உடன்பட்​டுத்தான் சிபிஐ, சிபிஎம் ஆகிய இரு கட்சிகளும் அவரது அணியில் தொடர்​கி​றோம்.

திமுக ஆட்சியின் தவறுகளை கம்யூனிஸ்ட்டுகள் தட்டிக் கேட்பதில்லை என்றும், அந்தளவுக்கு தோழர்களை திமுக ‘சரிக்கட்டி’ வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறதே?

இது ஒரு தவறான குற்றச்​சாட்டு. மக்கள் நலன்களை காப்ப​தி​லும், மக்கள் பிரச்​சினைக்கு தீர்வு காண்ப​திலும் கம்யூனிஸ்ட்​டுகள் எப்போதும் பின்வாங்கு​வ​தில்​லை.

2021 சட்டப்பேரவை தேர்தலில் சிபிஐ, சிபிஎம் கட்சிகளுக்கு தலா ஆறு இடங்களை ஒதுக்கியது திமுக. இம்முறையும் அதே எண்ணிக்கை தானா... அல்லது தொகுதிகளின் எண்ணிக்கையைக் கூட்டிக் கேட்பீர்களா?

இது பற்றி இப்போதே எதுவும் கூற இயலாது. இதன் மீதான மதிப்​பீட்டை உரிய நேரத்தில் எங்கள் கட்சியின் மாநில நிர்வாகம் தலைமைக்கு பரிந்​துரைக்​கும். அதுகுறித்து நாம் கட்சியின் மாநில நிர்வாகத்​துடன் ஆலோசனை நடத்தி தேர்தல் நேரத்தில் தகுந்த முடிவெடுப்​போம்.

அரசியலின் காலச் சூழலுக்கு ஏற்ப கம்யூனிஸ்ட்களும் இம்முறை தமிழக ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பார்களா?

பிரதமர் தேவகவுடா அமைச்​சர​வையில் கம்யூனிஸ்ட்​டு​களின் முதல் ஒன்றிய அமைச்​சர்களாக காம்ரேட் இந்திரஜித் குப்தா, சதுரானந்த் மிஸ்ரா ஆகியோர் இருந்​தனர். தற்போது, கேரளாவின் எல்டிஎஃப் ஆட்சியில் சிபிஐ, சிபிஎம் ஒன்றாகத்தான் அதிகாரத்தில் உள்ளோம். சிபிஐ கட்சியைச் சேர்ந்த 4 பேர் அமைச்​சர்​களாகவும் பதவி வகிக்​கின்​றனர். எனவே, அதிகாரத்தில் பங்கு என்பது அப்போதைய அரசியல் சூழல், மாநிலத்தில் அமையும் சட்டமன்​றத்தின் நிலை, நாடாளு​மன்​றத்தில் கட்சியின் பிரதி​நித்​துவம் போன்றவற்றின் அடிப்​படையி​லானது. தமிழகத்தில் தேர்தல் முடிவு​களுக்கு பின் முடிவு செய்ய வேண்டிய இதைப் பற்றி இப்போதே பேசுவது கருதுகோளாகி விடும்.

இம்முறை அரசுக்கு எதிரான அதிருப்திகள் திமுக கூட்டணிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்கிறார்களே..?

திமுக ஆட்சி கொள்கை ரீதியாக​வும், அரசியல் ரீதியாகவும் மிகவும் வலுவாக உள்ளது. பாஜக-வுடன் அதிமுக ஒன்று சேர்ந்​திருப்பதை தமிழக மக்கள் நிராகரிப்​பார்கள். பாஜக-​விடம் சரணடைந்தது ஏன் என அதிமுக தான் விளக்க வேண்டும். பாஜக-வின் மதவெறி மற்றும் பெருநிறுவன அதிபர்​களுக்கு ஆதரவான அரசியலை தமிழ்​நாட்டு மக்கள் ஏற்கமாட்​டார்கள். அதனால் தான் பாஜக-வை கடந்த காலங்​களில் பலமுறை நிராகரித்​துள்​ளனர்.

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அமித் ஷா சொல்லிவிட்டார். ஆனால், கூட்டணி ஆட்சி இல்லை என்கிறார் இபிஎஸ். இந்தக் குழப்பம் எங்கு போய் நிறுத்தும் என நினைக்கிறீர்கள்?

தமிழ்​நாட்டு மக்கள் பாஜக-வுக்கு வாக்களிப்​பார்கள் என யார் சொன்னது? அப்படி அவர்களாகவே நினைத்துக் கொண்டு கூட்டணி ஆட்சி எனக் கூறிவிட்டார் என்கி​றார்கள். கற்பனையின் அடிப்​படையில் பாஜக எடுக்கும் முடிவுக்கு பலன் கிடைக்​காது. இந்தக் குழப்​பத்​திற்கு அக்கட்​சிகளால் மட்டுமே பதில் கூற முடியும்.

அதிமுக கூட்டணிக்காக, மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலையையே மாற்றிவிட்டதே பாஜக?

இது அவர்களுடைய உட்கட்சிப் பிரச்​சினை. இதை அவர்களே விளக்​கலாம். ஆனால், வெளியி​லிருந்து பார்ப்​பவர்​களுக்கு பாஜக-வில் பல்வேறு குழப்​பங்கள் இருப்​பதையே இது காட்டு​கிறது.

தமிழக கூட்டணி விஷயத்தில் வழிக்கு வந்தது பாஜக என்கிறீர்களா... அதிமுக என்கிறீர்களா?

தமிழகத்தில் அதிமுக ஆட்சி செய்த கட்சி. இவர்களுக்கு பாஜக-வுடனும் கூட்டணி உறவு இருந்​திருக்​கிறது. தமிழகத்​திற்கு பாஜக எப்படி வஞ்சனை செய்கிறது என்பதை அதிமுக-வும் கண்டிருக்​கிறது. இப்படி அனைத்​தையும் அறிந்​து​கொண்டு பாஜக-வுடன் அவர்கள் கூட்டணி வைக்க வேண்டிய நிர்பந்தம் என்ன என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. அண்ணாவின் கொள்கைகளை தாங்கி நிற்கும் அதிமுக என்ற கட்சி மதவெறி​கொண்ட பாஜக-வின் காலடியில் விழுந்​துள்ளது. ஆனால், அரசியல் விழிப்​புணர்வு பெற்ற தமிழக மக்களை இனியும் ஏமாற்ற முடியாது.

அதிமுக, திமுக கூட்டணிகளுக்கு எதிராக மீண்டும் மக்கள் நல கூட்டணி உருவாகும் சூழல் இருக்கிறதா?

இப்போது தமிழ்​நாட்டில் திமுக கூட்டணி மட்டுமே உள்ளது. இதற்கும் மேலாக எந்தவொரு புதிய கூட்ட​ணியும் உருவாக முடியாது.

தொடர் தோல்விகளையே சந்தித்து வரும் அதிமுக, இந்தத் தேர்தலிலும் தோற்றுப் போனால் அந்தக் கட்சியின் நிலைமை என்னவாகும் என நினைக்கிறீர்கள்?

கொள்கைகளை கைவிட்டு, பல்வேறு நிர்பந்​தங்​களுக்கு பலியாகி அதிமுக தற்போது பரிதாப நிலையில் உள்ளது. எடுக்கும் தவறான நடவடிக்​கை​களுக்​காகவும் முடிவு​களுக்​காகவும் அவர்கள் இதை அனுபவித்​துத்தான் ஆக வேண்டும். அவர்களுக்கு தமிழக மக்கள் வரும் சட்டப்​பேரவை தேர்தலில் நல்ல பாடம் புகட்​டு​வார்கள். அதன் பிறகு அதிமுக-வின் நிலைமை இன்னும் மோசமாகும்​.

SCROLL FOR NEXT