தமிழகத்தில் சென்னை மாநகராட்சி உட்பட 25 மாநகராட்சிகள், 137 நகராட்சிகள், 487 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. சென்னை மாவட்டம் நீங்கலாக 37 மாவட்ட ஊராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 12,482 கிராம ஊராட்சிகள் என 12,907 ஊரக உள்ளாட்சி அமைப்புகளை உள்ளடக்கி ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் 1.25 லட்சத்துக்கும் அதிகமான உள்ளாட்சி பிரதிநிதி பதவிகள் உள்ளன. இதன் பதவிக்காலம் முடிவடைந்து தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உள்ளது.
இவ்வளவு பதவிகளுக்கு தேர்தல் நடத்தும்போது வேட்புமனு தாக்கல் மிகப்பெரிய பணியாகவே நடைபெறும். தேர்தல்நடத்தை விதிகள் ஏராளமாக இருந்தும் அவற்றை யாரும் பின்பற்றுவதில்லை. கரோனா தொற்றுக்குப்பின் பெரும்பாலான சேவைகள் இணைய வழிக்கு மாறிவிட்டன. வேட்புமனு தாக்கல் மட்டும் இன்னும் பழைய முறையிலேயே இருப்பது காலத்திற்கு பொருத்தமற்றது. வேட்புமனுக்களை இணையவழியில் தாக்கல் செய்தால் முறைகேடுகள் தவிர்க்கப்பட்டு, வெளிப்படைத் தன்மையும் உறுதி செய்யப்படும். சட்டப்பேரவை, மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்னும் இணைய வழிக்கு மாறாத நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலை இணைய வழிக்கு மாற்ற முடியாது என்ற வாதம் ஏற்புடையதல்ல.
சென்னை மாநகராட்சியில் 4 வார்டு கவுன்சிலர் பதவிகள், தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் 133 பதவிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 315 உள்ளாட்சி பிரதிநிதி பதவிகள் காலியாக உள்ளன. மொத்தம் 417 இடங்களுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. போதிய கால அவகாசம் உள்ளதால், சோதனை முறையில்கூட இந்த இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கலை இணைய வழிக்கு மாற்றி புதுமையை புகுத்த வேண்டும்.
அதுமட்டுமல்ல, மேற்கூறியவற்றில் சில காரணங்களுக்காகவும், வேறு சில காரணங்களை முன்னிட்டும் வேட்பாளர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் நடத்தும் தேர்தல் பிரச்சாரங்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்து அந்தப் பிரச்சாரத்தையும் காட்சி மற்றும் அச்சு ஊடகங்களின் வாயிலாகவே நடத்தும்படி புதிய விதிமுறைகளை கொண்டு வரலாம்.
ஊடகங்கள் வாயிலாக அவர்கள் நடத்தும் இந்தப் பிரச்சாரத்தையும் தேர்தல் பிரச்சார செலவாக தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் கொதிக்கும் வெயிலில் அவதியுறும் நிலையில் இருந்து வேட்பாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மட்டுமின்றிகட்சித் தொண்டர்களும் வாக்காளர்களும்கூட காப்பாற்றப்படுவார்கள்.
அதுதவிர, இதுபோன்ற கூட்டங்களுக்கு கூட்டிச் செல்லும் நோக்குடன் கையூட்டு அளிப்பதும் செல்லும் வழியில் நடக்கும் வேண்டாத விபத்துகளும் குறைவதற்கான வாய்ப்பும் இதில் உள்ளது. ஐந்து வருடம் ஆள்பவர்களின் அல்லது ஐந்து வருடம் எதிர்க்கட்சியாக இருப்பவர்களின் செயல்பாடுகளை ஊடகங்கள் வாயிலாகவே தொடர்ந்து அறிந்து கொள்ளும் இன்றைய காலத்தில், இவர்களின் தேர்தல் பிரச்சாரத்தையும் அதே வீரியத்தோடு ஊடகங்கள் வாயிலாக மக்கள் எடுத்துக் கொள்ள மாட்டார்களா என்ன?