இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சாலை விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 15 சதவீதம் குறைந்துள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிவிப்பு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கோவிட் பெருந்தொற்று காலம் தவிர்த்து உள்ள காலகட்டத்திலும் சாலை விபத்து உயிரிழப்புகள் 15 சதவீதம் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் 4,864 உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 4,136 ஆக குறைந்துள்ளது, விபத்து மரணங்களின் எண்ணிக்கையை இன்னும் குறைக்க முடியும் என்பதற்கான நல்ல அறிகுறியாகவே அமைந்துள்ளது. அதேபோன்று சென்னை மாநகரிலும் விபத்து மரணங்களின் எண்ணிக்கை 173-ல் இருந்து 149 ஆக, அதாவது 14 சதவீதம்குறைந்துள்ளதாக மாநகர காவல் ஆணையர் அருண் அறிவித்துள்ளார், இது எதிர்காலத்தில் விபத்து மரணங்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க முடியும் என்பதற்கான நம்பிக்கையை விதைத்துள்ளது.
சாலை பாதுகாப்பு, விபத்து தடுப்பு நடவடிக்கைகள், அவசரசேவைகள், போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது, போக்குவரத்து சட்டங்களை கண்டிப்புடன் அமல்படுத்தியது போன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் காரணமாகவே இந்த எண்ணிக்கை குறைப்பு சாத்தியமாகியுள்ளது.
குறிப்பாக, சென்னை நகரில் போக்குவரத்து காவலர்களுக்கு விபத்துகளை குறைப்பதற்கான தொழில்நுட்பங்கள் குறித்து நிபுணர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் தொடர்ந்து விதிமீறல்கள் மற்றும் விபத்துகளை ஏற்படுத்திவந்த 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி, விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 6,296 பேரைரோந்து காவல் வாகனங்களில் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ வசதி கிடைக்க காவல்துறை உதவியாக இருந்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் காவல்துறையின் பணிகளைத் தாண்டிய மனிதநேய செயல்களாக அமைந்துள்ளது பாராட்டுக்குரியது. போக்குவரத்து விதிகள் குறித்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் விபத்து உயிரிழப்புகளை தடுப்பதற்கான காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
காவல்துறையின் இந்த செயல்கள் அனைத்தும் பாராட்டுக்குரியவையாக இருந்தாலும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையை பூஜ்யமாக மாற்றும் வகையில் முயற்சிகளை எடுக்கவேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும்.
சாலைகளில் காணப்படும் குண்டு, குழிகள், பொருத்தமற்ற வேகத்தடை, தண்ணீர் லாரிகளால் ஏற்படும் ஆபத்து, பேருந்துகளில் ஏறும்போதும், இறங்கும்போதும் தவறி விழுந்து சக்கரங்களில் சிக்கிக் கொள்ளும் விபத்து, அதிவேகமாக இளைஞர்கள் போட்டிகள் வைத்து வாகனங்களை இயக்குதல், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் என எந்த வழியையும் விட்டுவைக்காமல் சம்பந்தப்பட்ட துறைகளுடன் பேசி, விபத்துகளே இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கான தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும்.
உதாரணமாக, பேருந்துகளில்தவறி விழுவோர் சக்கரங்களில் சிக்காமல் இருக்க இரும்புத்தடுப்பு அமைத்தது நல்ல பலன் அளித்து வருகிறது. இதுபோன்ற முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு விபத்தில்லா நிலையை உருவாக்க வேண்டும்.