சிறப்புக் கட்டுரைகள்

100 நாள் வேலை திட்டத்தை மெருகேற்றுவது அவசியம்!

எம்எஸ்

நூறு நாள் வேலை திட்டம் என்றழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் (MGNREGS) நாடு முழுவதும் உள்ள கிராமப்புற ஏழை, எளிய மக்களைக் கவர்ந்த திட்டமாகும். இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்த நாடாளுமன்ற நிலைக்குழு, இத்திட்டம் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்பது குறித்து அறிய தேசிய அளவில் தனி ஆய்வு மேற்கொள்வது அவசியம் என பரிந்துரை அளித்துள்ளது.

அதுமட்டுமின்றி, 100 நாள் என்று இருப்பதை 150 நாட்களாக உயர்த்த வேண்டும் என்றும், மலைப் பிரதேசங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு 200 நாளாக அதிகரிக்க வேண்டும் என்றும், நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் ஊதியத்தை 400 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும் பரிந்துரை அளித்துள்ளது.

தற்போது ரூ.241-ல்இருந்து ரூ.400 வரை மாநில வாரியாக வேறுபட்ட ஊதியம்வழங்கப்பட்டு வரும் நிலையில், குறைந்தபட்சம் ரூ.400 வழங்க வேண்டும் என்ற பரிந்துரை இன்றைய விலைவாசி உயர்வு உள்ளிட்ட விஷயங்களை கருத்தில் கொண்டுஅளிக்கப்பட்டுள்ள சிறந்த ஆலோசனையாக கருதப்படுகிறது.

இத்திட்டத்தில் நாடு முழுவதும் 25 கோடிக்கும் அதிகமானோர் சேர்க்கப்பட்டுள்ள போதிலும், 14 கோடி பேருக்கு மட்டுமே பணி கிடைப்பதாக கூறப்படுகிறது. பணியாளர் எண்ணிக்கையை போலியாக அதிகரித்து காட்டுதல், மத்தியஅரசு வழங்கும் தொகையில் கமிஷன் பெறுதல், கையெழுத்திட்டு விட்டு எந்தப் பணியும் செய்யாமல் பொழுதை கழித்தல் என பல்வேறு முறைகேடுகள் இத்திட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டன. அதனால், முறைகேடுகளை களைய ஊதியத்தை நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்துதல், ஆதாருடன் இணைந்த பணியாளர் அட்டை, பணி நடை
பெறும் இடத்தில் இருந்து ‘மொபைல் ஆப்’ உதவியுடன், புகைப்படம் எடுத்து அனுப்புதல் என பல்வேறு முறைகேடு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இருப்பினும் இத்திட்டத்தில் குறைகள் நீடித்தவண்ணமே உள்ளன.

ஆதாரில் உள்ள விவரங்கள் பொருந்திப் போகாமல் பலருக்கு பணி கிடைக்காத சூழலும், ஊதியம் வந்து சேராத சூழலும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற குளறுபடிகளைத் தடுக்கதேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்றும் நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை வழங்கியிருப்பது, இத்திட்டத்தில் உள்ள குறைகள் நீங்கி செம்மையாவதற்கான நம்பிக்கையை விதைத்துள்ளது.

நூறு நாள் வேலை திட்டத்துக்கு வழங்க வேண்டிய தொகை ரூ.23,446 கோடி நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. நிலுவைத் தொகை இந்த ஆண்டு ஒதுக்கப்படும் தொகையில் இருந்து வழங்கப்பட்டால், இந்த ஆண்டின் ஒதுக்கீட்டில் பெருமளவு திட்டத்துக்கு பயன்படாமல் போய்விடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

நூறு நாள் வேலை திட்டத்தில் குறைகள் ஏராளமாக இருந்தாலும், கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள், குறிப்பாக கணவனை இழந்த பெண்கள், ஆதரவற்றோர் பலர் இத்திட்டத்தில் கிடைக்கும் சிறு தொகையை வைத்து தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர். எனவே, நிலைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக செயல்படுத்தி, திட்டத்தைமென்மேலும் செம்மைப்படுத்தி தொடர்ந்து செயல்படுத்துவதே நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

SCROLL FOR NEXT