தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த இந்த காலகட்டத்தில், நகர்ப்புற வாகன இரைச்சலில் இருந்து விடுபட்டு இயற்கை சூழலை அனுபவிக்க, வனப்பகுதிகளை நாடும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு மக்கள்படையெடுப்பதால், நெரிசலை தவிர்க்க உயர் நீதிமன்றம் தலையிட்டு ‘இ-பாஸ்’ அறிமுகம் செய்துள்ளது. அனுமதிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பிரபலமான சுற்றுலா தலங்களையும் தாண்டி, அடர்ந்த காடுகளுக்குள் ‘ட்ரெக்கிங்’ எனப்படும் மலையேற்றப்பயிற்சி மேற்கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப பணியில் ஈடுபடும் இளைஞர்கள் இத்தகைய மலையேற்ற நடைபயிற்சியை அதிகம் விரும்புகின்றனர். அனுமதிக்கப்படாத காட்டுப்பகுதிகளுக்குள் அவர்கள் சென்று மலையேற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதில் அசம்பாவிதங்கள் நடந்ததை அடுத்து, தமிழக வனத்துறையே அங்கீகரிக்கப்பட்ட மலையேற்றப்பாதைகளை உருவாக்கி முறைப்படி அனுமதி அளித்து வருவது வரவேற்கத்தக்கது.
தமிழகத்தில் நீலகிரி, கொடைக்கானல், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய 14 மாவட்டங்களில் 40 மலையேற்றப் பாதைகளில் முறைப்படி அனுமதி அளிக்கப்படுகிறது. 5 பேர் கொண்ட குழு ஒன்றுக்கு வனப்பகுதியை நன்கறிந்த வழிகாட்டி ஒருவர் துணையாக செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சிலிகான் வேலி எனப்படும் பெங்களூரு நகரத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச்சார்ந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் அதிக அளவில் வனப்பகுதிகளில் மலையேற்றம் செல்ல விரும்புவதை அடுத்து, சிக்மகளூரு, தட்சிண கன்னடா உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக 32 மலையேற்றப் பாதைகளைக் கண்டறிந்து அனுமதியளிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. உடல் உழைப்பு இல்லாத தகவல் தொழில்நுட்ப பணி, அதிக நேர வேலை, பகல்-இரவு வேறுபாடின்றி உழைத்தல், பணியை முடிப்பதற்கான இலக்கு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் இளைஞர்கள் மாற்று மருந்தாக இதுபோன்ற ஆள் அரவமற்ற வனப்பகுதிகளில் தங்கள் நேரத்தை செலவிட விரும்புகின்றனர்.
குறைந்த வயதுடைய இளைஞர்கள் மனஅழுத்தம் காரணமாக இதயக் கோளாறால் உயிரிழக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடக்கின்றன. இதனால், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் மீதான அக்கறை முன்னெப்போதையும்விட தற்போது அதிகரித்துள்ளது. கான்கிரீட் காடுகளில் இருந்து விலகிச்சென்று, மனிதகுலம் இயற்கையை நோக்கி திரும்புவதற்கான அறிகுறியாகவே இளைஞர்களின் மனநிலையில் தற்போது ஏற்படும் மாற்றம் கருதப்படுகிறது.
தமிழகத்தில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி கட்டுமான திட்டங்களுக்கு அனுமதியளிக்கும்போது, திட்டத்தின் ஒருபகுதியாக, குறிப்பிட்ட அளவில் வனப்பகுதி அமைய வேண்டும் என்று சிஎம்டிஏ நிர்வாகம் நிபந்தனை விதிப்பது இயற்கை மீதான அக்கறையுடன் எடுக்கப்படும் மிக முக்கியமான நடவடிக்கையாகும். பருவநிலை மாற்றம், வெப்ப அலை போன்ற அசாதாரண சூழ்நிலைகளை சமாளிக்கவும், எதிர்காலத்தில் இயற்கையை பாதுகாக்கவும் பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்கான மேலும் பல புதிய விதிமுறைகளை அரசு அமைப்புகள் வகுப்பது அவசியம்.