மத்திய பிரதேச மாநிலத்தில் கிணற்றை தூர்வார முயன்ற தொழிலாளர்கள் 8 பேர் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கழிவுநீர் பாதைகள், பாழடைந்த கிணறுகள் ஆகியவற்றை சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, வாழ்வாதாரம் கருதி இப்பணியில் ஈடுபட முன்வருவோருக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி தருவதற்காக கடந்த 2013-ம் ஆண்டு ‘கழிவு அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதற்கான தடை மற்றும் மறுவாழ்வுச் சட்டம்’ இயற்றப் பட்டு அமலில் உள்ளது. இந்த நிலையிலும் கழிவுகளை அகற்றும் பணியில் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதும், அவ்வப்போது விஷவாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் நின்றபாடில்லை.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்களா? கடந்த 2013-ம் ஆண்டுக்குப் பிறகு இத்தகைய பணியில் ஈடுபட்டு இறந்தவர்கள் எத்தனை பேர் என்று டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத் நகரங்களைச் சேர்ந்த அதிகாரிகள் அறிக்கை அளிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்றும், கடந்த 2017 முதல் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 30 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கும்படியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தேசிய கரம்சாரி கமிஷன் அறிக்கைப்படி, 2017-ம் ஆண்டிற்குப் பிறகு இதுவரை 20 பேர் இதுபோன்ற சம்பவங்களில் உயிரிழந்துள்ளதாக சொல்லப்பட்டிருந்தாலும், பல்வேறு மெட்ரோ நகரங்களின் சார்பில் ஆஜரான அதிகாரிகள் முரண்பட்ட தகவல்களை அளித்துள்ளதால் உச்சநீதிமன்றம் அவர்களை கண்டித்துள்ளது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் அளித்துள்ள அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள 775 மாவட்டங்களில், 465 மாவட்டங்களில் கழிவு அகற்றும் பணியில் மனிதர்கள் ஈடுபடுத்தப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அப்படியென்றால் எஞ்சியுள்ள மாவட்டங்களில் அந்தச் செயல் நடந்து கொண்டிருக்கிறது என்று தான் அர்த்தம்.
சட்டங்கள் கடுமையாக்கப்பட்டும், தடை விதிக்கப்பட்டும், நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டும் கழிவு அகற்றும் பணியில் மனிதர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்றால், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் மனநிலையிலேயே மாற்றங்கள் கொண்டு வர வேண்டிய அவசியம் இருப்பதையே நடைபெறும் சம்பவங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
கால மாற்றத்தில் மனிதர்களால் செய்யப்பட்ட எத்தனையோ பணிகளை தற்போது இயந்திரங்கள் செய்துவரும் நிலையில், கழிவுகள் அகற்றுதல், தூர் வாருதல் போன்ற பணிகளுக்கு இயந்திரங்களை பயன்படுத்துவதற்கும் எந்த தடையும் இருக்க முடியாது.
அரசு அமைப்புகள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே விஷவாயு தாக்கி அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க முடியும்.