நிதி நிலைத்தன்மை அறிக்கை(FSR) ஒன்றை மத்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, நாட்டிலுள்ள நடுத்தர குடும்பங்களின் சேமிப்பு குறைந்து, கடன் அளவு அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பொருளாதார நிபுணர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் வங்கிகள் வழங்கும் சில்லரை கடன் மற்றும் கடன் அட்டை வழியான கடன் அளவு 4 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 5 முதல் 10 சதவீதம் நடுத்தர குடும்பங்கள் கடன் வலையில் சிக்கியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
வீட்டுக் கடன் போன்ற சொத்துகளை வாங்குவதற்கு வாங்கப்படும் கடன்களை விட, அன்றாட வாழ்க்கை செலவுகளுக்காக வாங்கப்பட்டுள்ள கடன் அளவு அதிகமாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. நடுத்தர குடும்பங்களின் கடன் அளவு இந்திய உள்நாட்டு உற்பத்தியில் 2023-ம் ஆண்டு 37.9 சதவீதமாக இருந்தது, 2024-ம் ஆண்டு 41 சதவீதமாக அதிகரித்து, இந்த ஆண்டு 43.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தனிநபர் செலவுகளின் மூலமாகவே அரசுக்கு கணிசமான வரி வருவாய் கிடைத்து வருகிறது. கோவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர் மக்களின் நடவடிக்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அடிப்படை தேவைகளுக்காக அல்லாமல் பொழுதுபோக்கு, ஓட்டல்களுக்குச் சென்று உணவருந்துதல், சுற்றுலா பயணங்களுக்கு கடன் வாங்கி செலவழித்தல் போன்ற செலவுகள் அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இத்தகைய போக்கு இந்திய பொருளாதாரத்துக்கு நல்லதல்ல என்றும், ரிசர்வ் வங்கி, நிதியமைச்சகம் உள்ளிட்ட அமைப்புகள் கடன் வாங்கி செலவழிக்கும் மக்களின் போக்கை கண்காணித்து கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
நடுத்தர மக்களின் வருமானம் கடந்த 10 ஆண்டுகளாக சராசரியாக ஆண்டுக்கு ரூ.10.5 லட்சம் அளவில் நின்று விட்டதாகவும், பணவீக்கத்தை மதிப்பிட்டால், 10 ஆண்டுகளில் நடுத்தர வர்க்கத்தின் வாங்கும் சக்தி பாதியாக குறைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், வாங்கும் சக்தி குறைந்துவிட்ட நிலையிலும், நடுத்தர மக்கள் வசதியாக வாழ ஆசைப்படுவதும் கடன் வலைக்குள் சிக்க பிரதான காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது 35.4 கோடி என்ற அளவில் உள்ள நடுத்தர குடும்பங்களின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் 68.7 கோடியாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், நடுத்தர குடும்பங்களின் செலவழிக்கும் போக்கையும், அவர்களது வருவாயையும், கடன் வாங்கும் முறையையும் கண்காணிப்பது அவசியம். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதம் என்ற அளவில் இருப்பது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.
இருந்தாலும், நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் நடுத்தர குடும்பங்களின் பொருளாதார நிலையை கவனத்தில் எடுத்துக் கொண்டு கொள்கை முடிவுகளை வகுப்பது நிதியமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கியின் கடமை. நடுத்தர குடும்பங்கள் கடன் சுமையில் சிக்காமல் தடுப்பதும், அவர்கள் ஆரோக்கியமான செலவுகளை மேற்கொள்ள வழிநடத்துவதும் காலத்தின் அவசியம்.