சிறப்புக் கட்டுரைகள்

காடு அழிப்பின் விளைவுகள் | சொல்... பொருள்... தெளிவு

இந்து குணசேகர்

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியா தீவிரமான காடு அழிப்பை எதிர்கொண்டுள்ளது. 2000 - 23க்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் 23 லட்சம் ஹெக்டேர் அளவில் மரங்கள் நிறைந்த நிலப்பரப்பை இந்தியா இழந்துள்ளதாக ‘குளோபல் ஃபாரஸ்ட் வாட்ச்’ அறிக்கை தெரிவித்திருக்கிறது. இந்தக் காடழிப்பில் 19%, ஈரப்பதம் மிக்க முதன்மைக் காடுகளில் நிகழ்த்தப்பட்டுள்ளது.

முதன்மைக் காடுகள் என்பவை பூமியில் உள்ள பழமையான, அடர்த்தியான, சுற்றுச்சூழல்ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காடுகள். இவை பாதிப்புக்குள்ளாகும்போது உயிர்ப்பன்மை இழப்பும் காலநிலை மாற்றமும் தீவிரமடைகின்றன.

இந்தியாவில்... இந்த விவகாரத்தில் 2016, 2017, 2023 ஆகிய ஆண்டுகள் மிகவும் மோசமான ஆண்டுகளாகக் கருதப்படுகின்றன. தனது காட்டுப் பரப்பில் இந்தியா 2016இல் 1,75,000 ஹெக்டேரையும் 2023இல் 1,44,000 ஹெக்டேரையும் 2017இல் அதிகபட்சமாக 1,89,000 ஹெக்டேரையும் இழந்தது. வடகிழக்கு மாநிலங்களில் காடழிப்பு அதிகம் நடைபெறுகிறது. 2001 முதல் 2023 வரையில் வடகிழக்கு மாநிலங்கள் அவற்றின் மரங்களின் பரப்பில் 60%ஐ இழந்துள்ளன. அதிகபட்சமாக அசாம் மாநிலம் 3,24,000 ஹெக்டேர் அளவுக்கு இழந்துள்ளது.

அடுத்தபடியாக மிசோரம் (3,12,000 ஹெக்டேர்), அருணாசலப் பிரதேசம் (2,62,000 ஹெக்டேர்), நாகாலாந்து (2,59,000 ஹெக்டேர்), மணிப்பூர் (2,40,000 ஹெக்டேர்) ஆகிய மாநிலங்கள் வருகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 2019 – 21 காலக்கட்டத்தில் தனது காட்டு நிலப்பரப்பை 55 சதுர கி.மீ. அளவுக்கு விரிவுபடுத்தியது; அதேநேரத்தில், 40 சதுர கி.மீ. அளவு மரங்களின் பரப்பையும் இழந்தது குறிப்பிடத்தக்கது.

கார்பன் டைஆக்சைடு உமிழ்வு: ஐக்கிய நாடுகள் அவையின் கீழ் உருவான பாரிஸ் ஒப்பந்தத்தின்படி, கார்பன் உமிழ்வைக் குறைக்க இந்தியா முயற்சி எடுத்து வருகிறது; ஆனால் காட்டு நிலப்பரப்பு தொடர்ச்சியாக அழிக்கப்படுவதன் காரணமாக வளிமண்டத்தில் கார்பன் வெளியேற்றம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் 2000 -23 காலக்கட்டத்தில் காட்டு நிலப்பரப்பு இழப்பினால் 1.12 கிகா டன் கார்பன் டைஆக்சைடை இந்தியா வெளியிட்டது.

உலகளவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரேசிலில் அதிக அளவு காடழிப்பு நடந்துள்ளது. பிரேசிலில் ஒவ்வோர் ஆண்டும் 17.8 லட்சம் ஹெக்டேர் அளவுக்குக் காடுகள் அழிக்கப்படுகின்றன. அடுத்தபடியாக இந்தோனேசியா, காங்கோ மக்களாட்சிக் குடியரசு ஆகிய நாடுகள் வருகின்றன.

குறிப்பாக, பிரேசிலில் அமேசான் காடு அழிக்கப்பட்ட நிலப்பரப்பில் மீண்டும் மரங்களை நடுவதற்குப் பதிலாகக் கால்நடை வளர்ப்பு மையங்களை அந்நாட்டு அரசு உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக கார்பன் டைஆக்சைடு உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்கள் அதிகமாகி வெப்பம் அதிகரித்து, அங்கு பெருமளவு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

காடழிப்பு - காலநிலை மாற்றம்: காடுகள் அதிக அளவு கார்பனைச் சேமித்து வைத்திருக்கின்றன. மரங்களும், பிற தாவரங்களும் வளிமண்டலத்திலிருந்து கார்பன் டைஆக்சைடை உறிஞ்சி வளர்வதால் இவை கார்பனாக மாற்றப்பட்டுத் தாவரத்தின் கிளைகள், இலைகள், தண்டுகள், வேர்கள், மண்ணில் சேமிக்கப்படுகின்றன. மரங்கள் அழிக்கப்படும்போதோ, எரிக்கப்படும்போதோ காடுகள் சேகரித்த கார்பனை வளிமண்டலத்தில் வெளியிடுகின்றன; இதில் கார்பன் டைஆக்சைடு முக்கிய அங்கம் வகிக்கிறது.

2023இல் உலகளவில் 37 லட்சம் ஹெக்டேர் அளவு வெப்பமண்டலக் காடுகள் அழிக்கப்பட்டன. 2023இல் வெளியிடப்பட்ட கார்பன் டைஆக்சைடு அளவில் 6%, வெப்ப மண்டலக் காடழிப்பினால் ஏற்பட்டது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
காலநிலை மாற்றம் காரணமாக அதிக வெப்பத்தினால் ஏற்படும் காட்டுத் தீயினால் லட்சணக்கான ஹெக்டேர் அளவில் காடுகள் ஒவ்வோர் ஆண்டும் அழிக்கப்படுகின்றன. இவ்வாறு காலநிலை மாற்றமும் - காடழிப்பும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக உள்ளன.

காரணங்கள்: காடழிப்பு ஒரு நாட்டின் வாழ்வாதாரத்தை அழிப்பதுடன், சுற்றுச்சூழல், மண்வளம் ஆகியவற்றையும் பாதிக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை விவசாயம், சுரங்கத் திட்டங்கள், நீர் மின்திட்டங்கள், சாலை அமைப்பு, அதீத நகரமயமாக்கம், சட்டவிரோதமாக மரங்களை வெட்டுதல் ஆகியவை காடழிப்புக்கு முக்கியக் காரணங்கள். 30 ஆண்டுகளில் 23,716 சுரங்கத் திட்டங்களுக்காகக் காட்டு நிலங்கள் அழிக்கப்பட்டிருப்பது ஓர் எடுத்துக்காட்டு.

அடர்ந்த காடுகளின் நிலப்பரப்பு அழிக்கப்படும்போது அவற்றைச் சார்ந்து வாழும் காட்டுயிர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. இதனால் குடியிருப்புகளில் காட்டுயிர்களின் ஊடுருவலும், விவசாய நிலங்கள் அவற்றால் சேதப்படுத்தப்படுவதும் சமீப ஆண்டுகளில் அதிகரித்துள்ளன.

காடுகளை மீட்டெடுத்தல்: காடுகளைப் பாதுகாக்கவும், மீட்டெடுக்கவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் 2014இல் ‘பசுமை இந்தியா திட்டம்’ (Green India Mission - GIM) அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 2030ஆம் ஆண்டுக்குள் காடுகளின் நிலப்பரப்பை 2 கோடி ஹெக்டேர் அளவு மீட்டெடுக்க இந்தியா திட்டமிட்டது. இத்திட்டத்துக்காக 2024, ஜூலை மாதம்வரை 1,55,130 ஹெக்டேர் பரப்பளவில் தோட்டம் / சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்காக 17 மாநிலங்கள் மற்றும் ஒரு மத்திய ஆட்சிப் பகுதிக்கு ரூ.909.82 கோடிவரை விடுவிக்கப்பட்டுள்ளது.

உலகச் சுற்றுச்சூழல் நாளை ஒட்டி, 2024 ஜூன் 5இல் மரக்கன்றுகள் நடும் பிரச்சாரத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தொடங்கியது. இதன் மூலம் மரக்கன்றுகள் நடுவதும், அவற்றைப் பராமரிப்பதும் ஊக்குவிக்கப்படுகிறது. காடுகளைப் பாதுகாக்க இன்னும் வலுவான கொள்கைகளை இந்தியா வகுக்க வேண்டும். கூடவே, காடுகளின் நிலப்பரப்பை மேம்படுத்தி உணவுப் பாதுகாப்பு, நீர்த் தேவை ஆகியவற்றையும் மத்திய / மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்.

காடுகள் அழிக்கப்படுவது புவி வெப்பமாதலுக்கான காரணிகளில் 10% பங்கு வகிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காடழிப்பைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ள எந்த வழியும் இல்லை; இதை உணர்ந்து உலக நாடுகள் விரைந்து செயல்பட வேண்டும்.

SCROLL FOR NEXT