சிறப்புக் கட்டுரைகள்

பற்றி எரியும் ‘பண’ விவகாரம்: நீதிபதியும் சட்டத்துக்கு கட்டுப்பட்டவரே!

எம்எஸ்

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததாக வெளியான செய்தி நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது வீட்டில் நடந்த தீவிபத்தின்போது தீயணைக்கச் சென்ற வீரர்கள் பணம் தீயில் எரிந்ததை நேரில் பார்த்து சொன்னதன்பேரில் இந்த சர்ச்சை வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.

உடனடியாக உச்ச நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவின்பேரில், டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உபாத்யாயா முதற்கட்ட விசாரணை நடத்தி, இச்சம்பவம் குறித்து ‘ஆழமான விசாரணை தேவை’ என்று அறிக்கை அளித்திருப்பது பல ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

நாடு முழுவதும் ஊழல் மலிந்துவிட்ட நிலையில், பாதிக்கப்படும் மக்களின் ஒரே புகலிடமாக, வடிகாலாக நீதித்துறையே இருந்து வருகிறது. ஆனால், மக்கள் உயர்ந்த இடத்தில் வைத்து போற்றிவரும் நீதித்துறையின் மீதே களங்கம் ஏற்படும் வகையில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள் நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அசைத்துப் பார்த்து விடுகிறது.

இப்படிப்பட்ட குற்றச்சாட்டு வந்த உடனே உச்சநீதிமன்றம் சம்பந்தப்பட்ட நீதிபதியை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றிவிட்டது. வழக்குகள் எதையும் தர வேண்டாம் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, உள்கட்ட விசாரணை நடத்தி, அதுதொடர்பான விவரங்களை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் உச்சநீதிமன்ற இணைய தளத்திலேயே ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் உள்ள காணொலி மற்றும் புகைப்படங்களை பகிரங்கமாக வெளியிட்டு தங்களது வெளிப் படைத்தன்மையை பறைசாற்றியிருப்பது பாராட்டுக்குரியது.

சர்ச்சைக்குரிய நீதிபதி யஷ்வந்த் வர்மா தன்மீதான குற்றச்சாட்டை பகிரங்கமாக மறுத்துள்ளார். சதி நடந்திருப்பதாகவும், தீவிபத்து நடந்த அறையில் ரூபாய் நோட்டுகள் எதுவும் இல்லை என்றும், எரிந்த ரூபாய் நோட்டுகள் அப்புறப்படுத்தப்படவில்லை என்றும் மறுத்துள்ளார். தன் வீட்டில் வேலை செய்பவர்கள், தோட்டக்காரர்கள் மற்றும் மத்திய பொதுப்பணித்துறை அலுவலர்கள் அந்த அறைக்குச் செல்லமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி காவல்துறை ஆணையர் சஞ்சய் அரோரா நீதிபதிக்கு அனுப்பியுள்ள புகைப்படம் மற்றும் காணொலி காட்சிகள் உச்சநீதிமன்றத்தால் பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ள நிலையில், நீதிபதியின் மறுப்பு விவாதத்திற்குரியதாக அமைந்துள்ளது.

வேலையாட்கள் இவ்வளவு பணத்தை நீதிபதியின் வீட்டை ஒட்டியுள்ள அறையில் வைக்க வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது. நீதிபதி நியமனங்களில் அனைத்து தரப்பிற்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது, தகுதி அடிப்படையில் மட்டுமே நீதிபதிகள் நியமிக்கப்படுகின்றனர் என்ற விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த ‘தகுதி’ மீது மக்கள் கேள்வி எழுப்பும் நிலையை இதுபோன்ற சம்பவங்கள் உருவாக்கி உள்ளன.

ஒரு சாதாரண நபரின் வீட்டில் இதுபோன்ற பணம் மீட்கப்பட்டிருந்தால், சட்டம் எப்படி செயலாற்றும்? நீதிபதியும் சட்டத்துக்கு கட்டுப்பட்டவரே, சாமான்யனை சட்டம் எப்படி கையாள்கிறதோ, அதே நடைமுறையில் நீதிபதியையும் சட்டம் கையாண்டால் மட்டுமே மக்களுக்கு நீதித்துறையின்மீது நம்பிக்கை ஏற்படும்.

SCROLL FOR NEXT