சிறப்புக் கட்டுரைகள்

திருப்பதி திருமலை அன்னதானம்: ஏழுமலையான் பக்தர்களுக்கு விருந்தே வைக்கலாம்..!

எம்எஸ்

திருப்பதி திருமலை அன்னதானத்தில் தற்போதுள்ள உணவு வகைகளுடன் பூண்டு, வெங்காயம் சேர்க்காத மசால் வடையும் வழங்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்திருப்பது, பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.

இந்தியாவில் அதிக பக்தர்களை ஈர்க்கும் கோயில்களில் முதலிடம் வகிக்கும் திருப்பதியில் பக்தர்களுக்கு நாளுக்கு நாள் வசதிகளை அதிகரித்து வருவது வரவேற்கத்தக்க அம்சம். அங்கு வழங்கப்படும் அன்னதான திட்டம், 1985-ம் ஆண்டு அப்போதைய ஆந்திர முதல்வர் என்.டி. ராமாராவால் தொடங்கி வைக்கப்பட்டு இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

94-ம் ஆண்டு முதல் அன்னதானத்துக்கென தனி அறக்கட்டளை தொடங்கப்பட்டு, அதன் மூலம் பக்தர்களுக்கு உணவு வழங்கும் சேவை அளிக்கப்பட்டு வருகிறது. காலை சிற்றுண்டியும், மதியம் மற்றும் இரவு நேரங்களில் சாதம், சாம்பார், ரசம், பொரியல், சட்னி, மோர், சர்க்கரை பொங்கல் வழங்கப்படுகிறது. இந்த பட்டியலில் சோதனை முறையில் 5 ஆயிரம் பக்தர்களுக்கு தற்போது மசால் வடை வழங்கப்படுகிறது. இதை பக்தர்கள் வரவேற்றுள்ளதால் அடுத்த மாதம் 4-ம் தேதி முதல் நிரந்தரமாக அன்னதான உணவுப் பட்டியலில் மசால் வடை சேரவுள்ளது.

திருமலையில் நடைபெறும் அன்னதான சேவை என்பது பிரம்மாண்டமானது. டன் கணக்கில் அரிசி, காய்கறிகளை கொட்டி சமைத்து பக்தர்களுக்கு வழங்குகின்றனர். அன்னதானக் கூடத்தில் வழங்கப்படும் உணவு மட்டுமின்றி, வைகுண்ட வரிசை வளாகத்தில் வரிசையில் நிற்பவர்கள், மருத்துவமனையில் இருப்பவர்கள், நடைபாதை வழியாக வருபவர்கள் உள்ளிட்டோருக்கு சிற்றுண்டி மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்படுகின்றன.

குழந்தைகளுடன் வருபவர்களுக்காக தினந்தோறும் 10 ஆயிரம் லிட்டர் பால் வழங்கப்படுகிறது. சுமார் 2 லட்சம் பக்தர்கள் அன்னதான சேவையை பெற்று பயன்பெறுகின்றனர். இவ்வளவு பெரிய பணியை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் சிறப்பாக செய்து கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. உண்டியல் வசூல், பக்தர்களின் எண்ணிக்கை, தங்குமிட வசதிகள் என அனைத்திலும் முதலிடத்தில் உள்ள திருமலை தேவஸ்தானம், பக்தர்களுக்கு வசதிகளை அதிகரித்து தருவதில் சிறிதும் தயக்கம் காட்டக்கூடாது.

அன்னதான சேவைக்கென உள்ள அறக்கட்டளை, உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற்றே அன்னதான திட்டத்தை செயல்படுத்துகிறது. காலை சிற்றுண்டிக்கு ரூ.8 லட்சம், மதிய உணவுக்கு ரூ.15 லட்சம், இரவு உணவுக்கு ரூ.15 லட்சம் என தொகை நிர்ணயிக்கப்பட்டு, ஒருநாள் அன்னதானம் வழங்க விரும்புவோர், ரூ.38 லட்சம் செலுத்தினால் அவர்கள் பெயரில் அன்னதானம் வழங்கும் நடைமுறையே தற்போது அமலில் உள்ளது.

அன்னதான திட்டத்துக்கு தாராளமாக நிதி கிடைக்கிறது. இவ்வளவு தொகை செலுத்தி அன்னதான பட்டியலில் பெயர் இடம்பெறுவதற்கு நன்கொடையாளர்கள் ஆண்டுக்கணக்கில் வரிசையில் காத்திருக்கும் நிலைதான் உள்ளது. எனவே, மசால்வடை போன்ற சிறிய பொருட்களுடன் நின்று விடாமல், ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், அங்கு வழங்கப்படும் உணவை எப்போதும் நினைத்துப் பார்த்து மகிழும் வகையில் பழரசம், பாயசம் உள்ளிட்டவற்றையும் சேர்த்து பெரிய விருந்தே கொடுக்க முயற்சிக்க வேண்டும். அதன்மூலம் கோடிக்கணக்கான பக்தர்களின் வயிறையும் மனதையும் மேலும் குளிர்விக்க முடியும். -

SCROLL FOR NEXT