சிறப்புக் கட்டுரைகள்

வாக்களிப்பது மட்டும்தான் ஜனநாயகமா?

சுந்தர் சருக்கை

ஒரு ஜனநாயக சமூகம் என்பது அதன் தேர்தல்கள் மூலம் வரையறுக்கப்படுவது என்று ஒரு ஆழமான நம்பிக்கை இன்று நிலவுகிறது. தேர்தலில் வாக்களிப்பது எனும் ஒற்றைச் செயல்பாடாக மட்டும் ஜனநாயகத்தைக் குறுக்கிவிட்டதன் மூலம், அடிப்படையில் ஜனநாயகத்தன்மை இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்கவே நாம் வழிவகைசெய்திருக்கிறோம்.

ஜனநாயகத்துக்காகக் குரல்கொடுக்கும் அரசியல் கட்சிகள், உண்மையில் போதுமான ஜனநாயக விழுமியங்கள் கொண்டிராதவை என்று பலரும் விமர்சித்திருக்கிறார்கள். எல்லா அரசியல் கட்சிகளிலும், தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அல்லது தற்காலத்தில் இருப்பதுபோல் வியாபாரக் கூட்டாளிகளின் ஆதிக்கம் நிலவுகிறது. தங்களுக்கு வேண்டியவர்களுக்குச் சலுகையளித்தல், வேண்டாதவர்களை ஒதுக்கிவைத்தல் ஆகியவைதான் நமது அரசியல் கட்சிகளின் அடிப்படை நடைமுறைக் கொள்கைகள். கர்நாடகத் தேர்தலில் நடந்த நாடகங்கள், நமது ஜனநாயகத்தின் எல்லாப் பிரச்சினைகளையும் தெளிவாகக் காட்டுகின்றன.

சரி, தேர்தலுக்கு உதவுவதைத் தாண்டி ஜனநாயகம் என்பது எப்படி இருக்க வேண்டும்? ஜனநாயகத்தின் முக்கியத்துவம் என்பது, ஒருவருக்கு வாக்களித்து அதிகாரத்துக்கு வரச்செய்வதில் அடங்கியிருக்கும் விஷயம் அல்ல; தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் அதிகாரத்தை எப்படிக் கையாள்கிறார் என்பதைப் பொறுத்தது அது. தேர்தல்கள் என்பவை, அதிகாரத்தைக் கையாள்பவர்களைக் கட்டுப்படுத்துவதற்கான நோக்கத்தைக் கொண்டவை. மாறாக, அதிகாரமே எல்லை என்பதாகத் தேர்தல்களின் நோக்கம் குறுகிவிட்டது.

அப்படியென்றால், தேர்தல்களின் அர்த்தம்தான் என்ன? எதற்காக நாம் ஒருவரைத் தேர்ந்தெடுக் கிறோம்? நாம் ஒருவருக்கு வாக்களிப்பது என்பது, அவர் அரசு அதிகாரத்தைத் தன் விருப்பம்போல் பயன்படுத்திக்கொள்வதை அனுமதிப்பதற்காக அல்ல; மாறாக நம் அனைவருக்கும் சம அளவில் சொந்தமான பொது வளத்தை முறையாகப் பராமரிக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காகவே வாக்களிக்கிறோம். அதாவது, ஒரு பொதுப் பூங்கா அனைவருக்குமானது; ஏனென்றால், சமமான அளவில் நம் அனைவருக்கும் அந்தப் பூங்கா சொந்தமானது.

அதாவது, அடிப்படையில் ஒரு சமூகத்தின் பொது வளத்தில் ஒரு பணக்காரருக்கு எத்தனைப் பங்கு இருக்கிறதோ அதற்கு இணையான பங்கு, சமூகத்தின் மிக ஏழ்மையான நபருக்கும் இருக்கிறது. ஒருவரைத் தேர்ந்தெடுப்பது என்பது, பொதுவில் உள்ள நமது பங்குகளைக் கவனிக்க ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பது எனும் விஷயம்தான். ஜனநாயகத்தின் அசல் செயல்பாடு என்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி இந்தப் பணியை எப்படிச் செய்கிறார் என்பதைப் பொறுத்ததே ஆகும்.

இதுதான் காந்தி மிகத் தீவிரமாக உருவாக்கிய அறங்காவலர்த்தன்மைக் கொள்கை. ஜே.ஆர்.டி.டாட்டா போன்ற தொழிலதிபர்களிடம்கூட தாக்கம் ஏற்படுத்திய கொள்கை இது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்பவர்கள், நமது சார்பில் நமது வளங்களுக்கான அறங்காவலர்கள்தான். தாங்கள் நிர்வகிக்கும் வளத்துக் குச் சேதம் விளைவிக்காமல் இருப்பதே அவர்களின் முதன்மையான கடமை. ஜனநாயகத்துடனான அர்த்தமுள்ள ஒரே தொடர்பு இதுதான். இது, தேர்தல்கள் ஜனநாயகத்தின் அத்தியாவசியமான செயல்பாடு எனும் பார்வையால் முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டுவிட்டது.

சிறந்த நிர்வாகத்துக்கான கருத்தாக்கமும் இதிலிருந்தே உருவாக்கப்பட்டிருக்கிறது. நமது சார்பில் அரசு நிர்வாகத்தை நடத்துவது என்பதே தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் செய்ய வேண்டிய பணி. நமது சார்பில் ஆட்சி நடத்துவது என்பது நாம் அனைவரும் சம உரிமை கொண்ட பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்க, உரிய முடிவுகளை எடுப்பது, அவற்றை அமல் படுத்துவது என்பதுதான். ஆனால், பெரும்பாலான சமயங்களில், அறங்காவலர்களாக இருக்க வேண்டிய பிரதிநிதிகள், தங்கள் சொந்த நலன்களுக்காகப் பொது வளத்தில் கை வைத்துவிடுகிறார்கள்.

அரசியலில் ஜனநாயகத்தின் உண்மையான சாரம் இல்லாத சூழல், நமது சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நமது நிறுவனங்களில் சில, ஜனநாயகத்தின் உண்மையான சாரத்தை உட்கிரகித்துக்கொண்டிருக்கின்றன. தனியார் நிறுவனங்களில் அறங்காவலர் தன்மை உணர்வு குறைவு எனும் சூழலில், அங்கு ஜனநாயகத்தன்மையும் குறைவாகவே இருக்கும். எனினும், தனியார் நிறுவனங் களிடம் தார்மிக விழுமியங்களை நாம் கோர முடியும். ஏனெனில், தனியார் நிறுவனங்களுக்கும் தங்கள் இருப்புக்கு ஸ்திரமான பொது இடங்கள் தேவைப்படுகின்றன.

ஆனால், அரசியலிலும், ஜனநாயகத்தன்மை கொண்டவை என்று சொல்லிக்கொள்ளும் நிறுவனங் களிலும்கூட, தார்மிக விழுமியங்களைக் கோருவது என்பது வெறுமனே தேர்வுசெய்யும் சடங்காகவே உள்ளது. வெறுமனே தேர்வுசெய்வதால் மட்டுமல்ல, அதிகார மையம் என்பது ஜனநாயகமயப்படுத்தப்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும்.

தேர்தலில் வாக்களிக்கும் தருணத்தில் மட்டும்தான் மக்கள் அரசியல் நடவடிக்கையுடன் தொடர்பில் இருக் கிறார்கள். வாக்களித்த பின்னர், ஜனநாயகச் செயல்பாட்டில் அவர்களுக்கு இடமளிக்கப்படுவதே இல்லை. இப்படியான எந்தச் செயல்பாடும் உண்மையில் ஜனநாயக அடிப்படையிலான நம்பிக்கையை அளிக்காது. அரசியல்ரீதியாகத் தனிமைப்படுத்தப்படுதல் எனும் உணர்வு மக்களிடம் ஏற்படுவதற்கு இதுதான் காரணம்.

அரசியல்ரீதியான இந்தத் தனிமைப்படுத்துதல்தான் கலாச்சாரரீதியான தனிமைப்படுத்துதலுக்கு இட்டுச்செல்கிறது. கலாச்சாரரீதியான தனிமைப்படுத்துதல் வலதுசாரி இயக்கங்களின்பால் மக்களை இட்டுச்செல்கிறது. நாம் இன்றைக்கு எதிர்கொள்ளும் பெரும்பாலான பிரச்சினைகளிலிருந்து விடுபட விரும்பினால், முதலில் அரசியல் செயல்பாட்டை உண்மையான ஜனநாயகத்தன்மையுடனும், அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாகவும் மாற்ற வேண்டும்!

சுந்தர் சருக்கை,

தத்துவவியல் துறைப் பேராசிரியர்,

ஆய்வுப் படிப்புக்கான தேசியக் கழகம், பெங்களூரு.

‘தி இந்து’ ஆங்கிலம்,

தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

SCROLL FOR NEXT