ஒரு காலத்தில் நோய் தீர்க்கும் மருத்துவர்கள் கடவுளாக பார்க்கப்பட்டனர். குணமடைந்தபின் மருத்துவர்களின் காலில் விழுந்து வணங்கிய காலம் மாறி, தற்போது மருத்துவர்களை கத்தியால் குத்தும் அளவுக்கு நோயாளிகளின் மனநிலை மாறியிருக்கிறது. கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவர் பாலாஜியை நோயாளியின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி உள்ளது. அதேநாளில் ஸ்டான்லி மருத்துவமனையைச் சேர்ந்த ஹரிஹரன் என்ற மருத்துவர் மீதும் நோயாளி ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல், மருத்துவர்கள் பற்றாக்குறை என பல விஷயங்கள் இதன்மூலம் விவாதத்துக்கு வந்துள்ளன. மருத்துவர் பாலாஜி நலமாக உள்ளார் என்ற வீடியோ வெளிவந்திருப்பது ஆறுதலான விஷயம்.
உயிர்காக்கும் நடவடிக்கையில் உள்ள மருத்துவர்களை பாதுகாப்பது அவசியம். அதேநேரம், நோயாளிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள மனநிலை மாற்றத்துக்கான காரணத்தை ஆராய்வது அவசியம். ‘ரமணா’ என்ற திரைப்படம் வந்தபோது, இறந்துபோன ஒருவருக்கு தனியார் மருத்துவமனை ஒன்றில், சிகிச்சை அளிப்பது போன்று ஒரு காட்சி வரும். இக்காட்சிக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்தது. அதற்கு காரணம் அதுபோன்ற சம்பவங்களால் மக்கள் பாதிக்கப்பட்டதன் விளைவே.
வாட்ஸ்ஆப், எக்ஸ், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களின் மூலம் மருத்துவர்களுக்கு எதிரான கருத்துகள் பரப்பி விடப்படுகின்றன. மருத்துவர்கள் என்ன சொன்னாலும் அப்படியே கேட்கும் நிலை மாறி, அவர்களது வார்த்தைகளை சந்தேகக் கண்ணோடு பார்க்கும் அவநம்பிக்கை விதைக்கப்பட்டுள்ளது. இத்தகைய அவநம்பிக்கையை மாற்றுவது மட்டுமே பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு.
நோயாளி ஒருவர் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று அதில் அவருக்கு சந்தேகமோ, சிகிச்சைமீது நம்பிக்கையற்ற தன்மையோ இருந்தால், அதை மேல்முறையீடு செய்ய தற்போது வழியில்லை. அதே மருத்துவரிடம் போய் அவர் மீதே புகார் சொல்ல வேண்டிய நிலைதான் உள்ளது. நோயாளி ஒருவருக்கு மருத்துவர் மீது அதிருப்தி இருந்தால், அதுகுறித்து மேல்முறையீடு செய்ய அரசால் நியமிக்கப்பட்ட மருத்துவ நிபுணர்கள் குழு இருக்க வேண்டும்.
அந்தக் குழுவிடம் நோயாளி முறையிட்டால் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளை ஆராய்ந்து சரியாக இருந்தால் நோயாளிக்கு புரிய வைக்கவும், தவறாக இருந்தால், மாற்று சிகிச்சை மற்றும் பாதிப்புக்கான நிவாரணம் அளிக்கவும் வழிவகை செய்ய வேண்டும். இத்தகைய அமைப்பை அரசு உருவாக்கினால், விக்னேஷ் போன்ற இளைஞர்கள் அங்கு முறையிட்டு நிவாரணம் பெற்றுக் கொள்ள முடியும். நிலைமை கத்திக்குத்து வரை போகாது. அதேசமயம், மருத்துவர் பக்கம் நியாயம் இருந்து, அவர் பணிச் சூழலில் அரசு தரப்பிலிருந்து தீர்க்கப்பட வேண்டிய குறை எதுவும் இருந்தால், அதை நோக்கியும் உடனடி கவனம் செலுத்துவது மிக மிக முக்கியம்!